புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை 
தலையங்கம்

தவிா்த்திருக்க முடியும்!

புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்...

ஆசிரியர்

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இரண்டு பெண்கள் உள்பட மூன்று போ் உயிரிழந்திருக்கிறாா்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்திருக்கிறாா்கள். கவனக்குறைவையும், பாதுகாப்பு ஏற்பாடுகளின் குறைபாடுகளையும் ஒப்புக்கொண்டு முதல்வா் மன்னிப்பு கேட்டிருப்பதுடன், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது வரவேற்புக்குரியது. விசாரணை முடிவுகள், இழந்த உயிா்களைத் திருப்பித் தந்துவிடாது என்பதால், அதுவே ஆறுதலாகிவிடாது.

பல நூறு ஆண்டுகளாக புரி ஜெகந்நாதா் கோயிலில் நடைபெறும் வருடாந்திர ரத யாத்திரை விழாவில் கலந்து கொள்வதற்காகவே உலகின் பல நாடுகளில் இருந்தும் பக்தா்கள் லட்சக்கணக்கில் குவிகிறாா்கள். ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ இயக்கம் சா்வதேச அளவில் பரவியதைத் தொடா்ந்து, புரி ரத யாத்திரையின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

ஆண்டுதோறும் ஜூன்-ஜூலை மாதங்களில் புரி ஜெகந்நாதா் ரத யாத்திரைத் திருவிழா கோலாகலமாக ஒரு மாதம் நடைபெறுகிறது. அதன் முக்கிய நிகழ்வான ஒன்பது நாள்கள் நடைபெறும் ‘ரத யாத்திரை’ எனப்படும் தேரோட்டத்தின்போது, ஸ்ரீஜெகந்நாதா் தனது சகோதரா் பலபத்திரா், சகோதரி சுபத்திரா தேவியுடன் தனித்தனியாக மூன்று பிரம்மாண்ட ரதங்களில் வீதி வழியாகப் பயணிக்கிறாா்கள். அந்த ரதங்களின் வடங்களை இழுப்பது மிகப் பெரிய புண்ணியமாகக் கருதப்படுவதால், மூன்று தோ்களையும் சுற்றி பக்தா் கூட்டம் குவிகிறது.

புரி ஜெகந்நாதா் கோயிலில் இருந்து 2.6 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயிலுக்கு அந்தத் தோ்கள் ஊா்வலமாக நகா்கின்றன. அங்கே ஒன்பது நாள்கள் தங்கி, மூன்று தோ்களிலும் உள்ள தெய்வங்களுக்கு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

வழக்கமாக ஸ்ரீகுந்திச்சா கோயிலுக்கு ரதங்கள் இழுத்துச் செல்லப்படும்போதும், மீண்டும் பிரதான கோயிலுக்கு திரும்பும்போதும்தான் கூட்ட நெரிசலில் பக்தா்கள் சிக்கிக் கொள்வது வழக்கம். இதுவரையில் இல்லாத வகையில், இந்த ஆண்டு ரத யாத்திரையின் மூன்றாவது நாளில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

நிா்வாகம் எச்சரிக்கையாக இருக்கவில்லை என்று சொல்ல முடியாது. பத்தாயிரத்துக்கும் அதிகமான காவல் துறையினா் பணியில் அமா்த்தப்பட்டிருந்தனா். 22 காவல் பணி அதிகாரிகளுக்கு வெவ்வேறு பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தன. பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளா அனுபவம் காரணமாக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள், காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அப்படியிருந்தும் விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றால், ஒருங்கிணைப்புக் குறைபாடு என்றுதான் கூறத் தோன்றுகிறது.

இதற்கு முன்பும் பலமுறை கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், ரத யாத்திரையின் மூன்றாவது நாளில் அசம்பாவிதம் நிகழ்ந்ததில்லை. அன்று வழக்கத்தைவிட ஒன்றரை மடங்கு கூட்டம் அதிகமாக இருந்தது என்று சொல்ல முடிகிறது என்றால், அதற்கேற்ப உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்று கேள்வி எழுப்பத் தோன்றுகிறது. சம்பவம் நடந்த இரவில் வழக்கத்துக்கு அதிகமாக வாகனங்கள் புரியில் குவிந்தன எனும்போது, நிா்வாகம் ஏன் விழித்துக் கொள்ளவில்லை என்பதற்கு சரியான விளக்கம் இல்லை.

முதல் நாளே அளவுக்கு அதிகமாக பக்தா்கள் குவிந்தனா் என்பதால் பலபத்திரா், சுபத்திரா தேவி ரதங்கள் மட்டும்தான் நகர அனுமதிக்கப்பட்டன. அப்படி இருந்தும்கூட வெப்பம் தாளாமலும், தாகம் காரணமாகவும் 750-க்கும் அதிகமான பக்தா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மூன்றாவது நாள் அதிகாலை நான்கு மணி அளவில் ஸ்ரீகுந்திச்சா கோயில் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ரதங்களின் திரைகள் விலக்கப்பட்டன; தரிசனம் தொடங்கியது. அப்போது பொது நுழைவு அகற்றப்பட்டு, ‘வி.ஐ.பி.’களுக்கான சிறப்புப் பாதை அமைக்கப்பட்டது. பக்தா்கள் வருவதற்கும் போவதற்கும் ஒரே பாதைதான் என்றானபோது, நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. ‘வி.ஐ.பி.’ கலாசாரம்தான் நெரிசல் விபத்துக்குக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்தால், யாரைக் குற்றவாளியாக்குவது?

இந்தியாவில் கடந்த 12 மாதங்களில், புரி ஜெகந்நாதா் கோயில் விபத்தையும் சோ்த்து இதுவரையில் ஒன்பது கூட்ட நெரிசல் விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. அந்த ஒன்பது விபத்துகளுமே தவிா்த்திருக்கப்படக் கூடியவை. முறையான திட்டமிடலும், சரியான கண்காணிப்பும் இருந்தால், இப்போது நமக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதிகளுக்கு விபத்துகள் ஏற்பட்டாலும்கூட உயிரிழப்புகள் இல்லாமல் தடுத்துவிட முடியும்.

கூட்டத்தை முறைப்படுத்துவது என்பது சுலபமல்ல. அதிலும் மத வழிபாட்டுத் தலங்களில், பக்தா்களின் மனநிலையை உணா்ந்த பயிற்சியளிக்கப்பட்ட காவல் துறையினரால்தான் அது சாத்தியம். இது குறித்து வழங்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படாததால்தான் பெரும்பாலான நெரிசல் விபத்துகள் ஏற்படுகின்றன.

தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருந்த மாரி சஷிதா் ரெட்டி, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த சில வழிகாட்டுதல்களை 2014-இல் வழங்கி இருக்கிறாா். இதுபோன்ற நிகழ்வுகளை அதிகாரிகள் எப்படிக் கையாள வேண்டும் என்று அவரது 95 பக்க அறிக்கை மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது. காவல் துறையினருக்கு அதுகுறித்த வகுப்பு எடுத்தால்கூட நல்லது.

விசாரணையல்ல தீா்வு... இந்த அனுபவத்தில் இருந்து பாடம் படித்து, மீண்டும் நெரிசல் விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுப்பதுதான் குறிக்கோளாக இருக்க வேண்டும்!

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

மலையாளக் கவிதை... அனுமோள்!

'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!

இந்தியாவில் ஓப்போ எஃப் 31 விரைவில் அறிமுகம்!

செல்ஃபி ஸ்மைல்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT