கோப்புப்படம்.  
தலையங்கம்

அவசியம் பாலின சமத்துவம்!

நாட்டின் மக்கள்தொகை பெருக்கம் குறித்து கவலை கொள்ளும் நேரத்தில், பாலின பிறப்பு விகிதம் குறைந்து வருவது கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஆசிரியர்

நாட்டின் மக்கள்தொகை பெருக்கம் குறித்து கவலை கொள்ளும் நேரத்தில், பாலின பிறப்பு விகிதம் குறைந்து வருவது கவனத்தில் கொள்ளத்தக்கது. குறிப்பாக, பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தொடர்ந்து சரிந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கருவில் பாலினத்தைக் கண்டறிவது குற்றம் என கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சட்டம் இயற்றப்பட்ட போதும், இது சட்டவிரோதமாக ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. குடிமைப் பதிவு முறை பதிவாளர் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், பிகார், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பாலின பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தெலங்கானா, கர்நாடகம், ஹிமாசல பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் வழக்கத்தைக் காட்டிலும் பாலின பிறப்பு விகிதம் குறைந்துவருவது தெரியவந்துள்ளது.

2014-15-இல் 1,000 ஆண்களுக்கு 918 பெண்கள் என்ற விகிதத்தில் இருந்த பாலின பிறப்பு விகிதம் 2023-24-இல் 930-ஆக அதிகரித்தாலும், அது 950 என்ற நிலையை எட்டவில்லை. பெரும்பாலான குடும்பங்களில் ஒரு குழந்தை; அதுவும் ஆண் குழந்தை என்ற மனநிலை நிலவுகிறது. இதுவும் பெண் பாலின பிறப்பு விகித சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலானவர்களின் தேர்வு ஆண் குழந்தையாக இருந்தது. பெண் குழந்தைகள் வளர்ந்ததும் அவர்களின் திருமணத்துக்காக வரதட்சிணை போன்றவற்றுக்காக ஆகும் செலவு; ஆண் குழந்தையாக இருந்தால் வயதான காலத்தில் தங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், கருவிலேயே பாலினத்தைக் கண்டறிந்து, பெண் குழந்தையாக இருக்கும் நிலையில் அதைக் கருவிலேயே அழிக்கும் செயல்களும் தற்போது அதிகரித்துள்ளன. இதுவும் பாலின பிறப்பு விகித சரிவுக்கு பிரதான காரணம். நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் பாலினத்தைக் கண்டறியும் சோதனைகள் சட்டவிரோதமாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்தாலும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கருவில் பாலினத்தைக் கண்டறியும் சாதனங்கள், சிறிய அளவிலான அல்ட்ரா சவுண்ட் கருவிகள் இணையவழியில் எளிதாகக் கிடைக்கின்றன. இதனால், பாலினத்தைக் கண்டறிவது எளிமையாகியுள்ளது. பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாகச் செயல்பட்டுவரும் கருக்கலைப்பு மையங்கள், பாலினத்தைக் கண்டறிந்து, பெண் குழந்தை என்றால் அந்தத் தகவலை "பார்பி' பொம்மை இமோஜியாக வாட்ஸ்-ஆப்பில் அனுப்பி, கருக்கலைப்பையும் செய்கின்றன.

தெலங்கானா, பிகார், தில்லி, ஹரியாணா மாநிலங்களில் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த புதுவித கருக்கலைப்பு உத்தி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தப் பரிசோதனைகளில் பெரும்பாலானவை கருத்தரிப்பு மையங்களில்தான் நடைபெறுகின்றன. இது குறித்த புகார்களின் பேரில், மருத்துவர்கள், ஆய்வக தொழில்நுட்புநர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம்தான். கடந்த 2020-இல் நாடாளுமன்ற நிலைக் குழு தாக்கல் செய்த அறிக்கையின்படி, 1994-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இதுதொடர்பான வழக்கில் நாடு முழுவதும் 617 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர்; சுமார் 3,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன; 147 மருத்துவமனைகளுக்கு மட்டுமே இதுவரை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் பிறழ் சாட்சியங்கள், போதிய ஆவணங்களைக் காட்டி நிரூபிக்க முடியாததால், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படாமல் வெளியே வந்து விடுகின்றனர். அவர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரில் மீண்டும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், இதுபோன்ற பாலினக் கண்டறிதலைத் தடுக்கவும், பெண் குழந்தைகளுக்கு கல்வியறிவு கொடுக்கும் விதமாகவும் கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய "பெண் குழந்தைகளைக் காப்போம்- பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்போம்' என்ற திட்டம் மாநில அரசுகளின் ஒத்துழைப்பால் ஓரளவுக்குப் பலனளித்தது. மத்திய, மாநில அரசுகளின் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கையால் கிராமப் பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான மனநிலை சற்றே மாறியது.

தென் கொரியாவில் இதேபோன்று பாலின பிறப்பு விகித சமநிலை இல்லாத போது, அங்கு பெண் குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் விளைவாக பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.

சிசுக் கொலை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை கிராமப் பகுதிகளில் மட்டுமல்லாமல், நகர்ப் பகுதிகளிலும் முழுவீச்சில் முன்னெடுக்க வேண்டும். பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது, ஆண் குழந்தை வேண்டும் என்ற மனநிலையில் மாற்றம் ஏற்படும். பள்ளி, கல்லூரிகளிலும், புதுமணத் தம்பதிகள் மத்தியிலும் பாலின சமத்துவம் குறித்த கருத்துகளைப் பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டங்களால் மட்டும் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

Shahrukh Khan-க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது

வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசைக்கான தேசிய விருது பெறும் ஜி.வி. பிரகாஷ்!

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு

SCROLL FOR NEXT