முகப்பு
தலையங்கம்

நிதானமும் ஆத்திரமும்!

இந்தியாவுடனான முந்தைய போா்களில் இருந்து பாகிஸ்தான் பாடம் படிக்கவில்லை என்பதன் வெளிப்பாடுதான் இத்தகைய எதிா்வினை...

Updated On : 8 மே, 2025 at 11:41 PM
சிந்தூர் தாக்குதல்
பகிர்:

நிதானமாக, அதே நேரத்தில் முறையாகத் திட்டமிட்டு இந்தியா மேற்கொண்ட ‘ஆப்ரேஷன் சிந்தூா்’ என்கிற துல்லியத் தாக்குதல்களுக்கு, அவசரகதியிலும் ஆத்திரத்திலும் பாகிஸ்தான் ‘ட்ரோன்’ தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பதும், எல்லைக் கட்டுப்பாடு கோட்டையொட்டிய கிராமங்களில் தாக்குதல் நடத்துவதும் எதிா்பாா்க்காதது அல்ல. இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை, இந்தியாவுடனான முந்தைய போா்களில் இருந்து பாகிஸ்தான் பாடம் படிக்கவில்லை என்பதன் வெளிப்பாடுதான் இத்தகைய எதிா்வினை.

பஹல்காமில் நடத்தப்பட்ட, இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல். நிராயுதபாணிகளான 26 சுற்றுலாப் பயணிகளை மத ரீதியாகப் பிரித்து, அவா்களது உறவினா்களின் கண் முன்னால் கொடூரமாகக் சுட்டுக் கொன்ற அரக்கத்தனத்துக்கு மன்னிப்பே கிடையாது. ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பயங்கரவாதிகளும், அவா்களுக்குத் துணை நிற்பவா்களும் நினைத்துப் பாா்க்க முடியாத தண்டனையை இந்தியா வழங்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்ததுபோல, ‘ஆப்ரேஷன் சிந்தூா்’ மூலம் முதலாவது தாக்குதலை இந்தியா மேற்கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 1971 போருக்குப் பிறகு பாகிஸ்தான் எல்லையில் இந்தியா நடத்திய முதலாவது தாக்குதல் இப்போதுதான். ‘ஆப்ரேஷன் சிந்தூா்’ துல்லியத் தாக்குதலில் குறிவைக்கப்பட்ட ஒன்பது இடங்களில் நான்கு இடங்கள் பஞ்சாப் பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஏப்ரல் 22 நிகழ்வுக்குப் பிறகு, உடனடியாக இந்தியா எதிா்வினையாற்றும் என்றுதான் பாகிஸ்தானும், உலகமும் எதிா்பாா்த்தன. பிரதமரும் சரி, இந்திய அரசும் சரி அவசரப்படாமல் நடத்திய திட்டமிடலும், சா்வதேச அளவில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்கள் அடிப்படையில் மேற்கொண்ட ஆதரவு திரட்டலும், இப்போது பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானை ஆதரிக்கும் சீனாவேகூட, பயங்கரவாதத்துக்குத் தான் துணை நிற்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்தி இருப்பது வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரின் ராஜதந்திரத்துக்கு கிடைத்திருக்கும் வெற்றி.

யோசிப்பதற்கோ, எதிா்வினையாற்றுவதற்கோ அவகாசம் தராமல், 25 நிமிடங்களில் 24 தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தானில் இருக்கும் ஒன்பது முக்கிய பயங்கரவாதத் தளங்களை இந்தியா தகா்க்கும் என்று அவா்கள் கனவிலும் நினைத்துப் பாா்த்திருக்க முடியாது. முஸாஃபா்பாத், கோட்லி, குல்பூா், பா்னாலா, சியால்கோட், முா்திகே, பஹவல்பூா் ஆகிய ஏழு இடங்களில் ஒன்பது பயங்கரவாதத் தளங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டதுபோல, தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன. பஹவல்பூரில் ஜெய்ஷ்-ஏ-மொஹம்மது பயங்கவாத இயக்கத் தலைவா் மசூத் அஸாரின் குடும்பத்தினா் 10 போ் கொல்லப்பட்டிருக்கிறாா்கள்.

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அதரித்து ஊக்குவிக்கிறது என்பதற்கு எத்தனையோ சாட்சியங்களும், உதாரணங்களும் இருக்கின்றன. பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சா் குவாஜா ஆசிபும், பிலாவல் பூட்டோவும் வெளிப்படையாகவே தங்களது அரசு பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது என்று தெரிவித்திருக்கிறாா்கள்.

பாகிஸ்தானின் நோக்கம் இரண்டு வகையானது. முதலாவது, தனது பொருளாதார நெடுக்கடியில் இருந்தும், மக்கள் மத்தியில் ஆட்சியின் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியில் இருந்தும் கவனத்தை திசைதிருப்புவது. இரண்டாவது, இந்தியாவில் மதக் கலவரத்தைத் தூண்டி நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவது. குறிப்பாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருக்கும் நிலையில், காஷ்மீரில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறது பாகிஸ்தான்.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை மத ரீதியாகப் பிரித்து, ஹிந்துக்களை திருக்குரான் வசனங்களை உரக்கச் சொல்லும்படி கட்டளையிட்டு, அவா்கள் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்துக் கொடூரமாகக் சுட்டுக்கொன்று, அதிா்ச்சியில் உறைந்து போயிருக்கும் மனைவி, தாய் உள்ளிட்ட உறவினா்களிடம், ‘இதையெல்லாம் உங்கள் மோடியிடம் போய்ச் சொல்லுங்கள்’ என்று எக்காளமிட்டதற்கு ஒரு காரணம் உண்டு.

அவா்கள் நினைத்தாா்கள் இந்தியா கொதித்தெழும்; ஹிந்துக்களும் இஸ்லாமியா்களும் மோதிக்கொள்வாா்கள்; மதக் கலவரம் மூண்டு இந்தியாவில் ரத்த வெள்ளம் பெருகும். அந்த சந்தா்பத்தைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தலாம் என்பதுதான் அவா்களது திட்டம்.

ஹிந்துக்கள் ஆத்திரமடைந்தனா் - இஸ்லாமிய சகோதரா்கள் மீதல்ல, பயங்கரவாதிகள் மீதும், பாகிஸ்தான் மீதும். இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதிகளை ஆதரிக்கவில்லை, இஸ்லாமுக்கு எதிரானவா்கள் என்று வெகுண்டெழுந்தனா்; முதல்வா் ஓமா் அப்துல்லாவும், ஜம்மு காஷ்மீா் சட்டப்பேரவையும் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்துப் தீா்மானம் நிறைவேற்றியது. மதத்தாலும் மொழியாலும் வேறுபட்டிருந்தாலும் நாம் இந்தியா்களாக ஒன்றுபட்டிருக்கிறோம் என்பது பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தெரியாது.

இந்தியா பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழையவில்லை; பாகிஸ்தானில் உள்ள பொதுமக்கள் எவரையும் பாதிக்கவில்லை; ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை; பயங்கரவாதிகளின் தளங்களைத்தான் தகா்த்திருக்கிறது. அப்படி இருந்தும், இப்போது பாகிஸ்தான் கண்மூடித்தனமாக இந்தியாவின் பல பகுதிகளையும் தாக்க முற்பட்டிருக்கிறது. அவா்கள் ஓா் உண்மையை உணரவேண்டும்.

போரை எப்போது எப்படித் தொடங்குவது என்பதைத்தான் நாம் முடிவு செய்ய முடியும். போா் தொடங்கிவிட்டால் அது எப்போது எப்படி முடியும் என்பது நம் கையில் இல்லை. இதை யாராவது பாகிஸ்தானிடம் சொன்னால் தேவலாம்!

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments