'ஷா‌க்' அடி‌க்​கு‌ம் பிர‌ச்னை‌ படம் | ens
தலையங்கம்

'ஷா‌க்' அடி‌க்​கு‌ம் பிர‌ச்னை‌ அ‌ல்ல!

கோடைகாலம் தொடங்கிவிட்டாலே மின்சாரத்தின் தேவை அதிகரிப்பதைப் பற்றி...

ஆசிரியர்

கோடைகாலம் தொடங்கிவிட்டாலே மின்சாரத்தின் தேவை அதிகரிப்பது இயல்பு. நடுத்தர வர்க்கத்தினரின் வீடுகளிலும் குளிரூட்டி இயந்திரங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் மின் தேவை அதிகரித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் தேவை, தற்போது சுமார் 19,000 மெகாவாட்டை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் அதிகபட்ச மின் பயன்பாடு ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி 20,125 மெகாவாட்டாக இருந்தது. இப்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் மின் தேவை சுமார் 22,000 மெகாவாட்டை எட்டலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது அவ்வப்போது பெய்துவரும் மழையால் மின் தேவை சற்று குறைந்திருக்கிறது.

அனல் மின் உற்பத்தி நிறுவுதிறன் 1,959 மெகாவாட் என்ற நிலையில், தற்போது 1,709 மெகாவாட்தான் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. எரிவாயு மின் உற்பத்தி நிறுவு திறன் 1,027 மெகாவாட்டாக இருந்துவரும் நிலையில், தற்போது 524 மெகாவாட்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலை, சூரியசக்தி ஆகிய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிறுவுதிறன் 25,290 மெகாவாட் ஆகும். இவற்றில், காற்றாலைகளிலிருந்து 11,739 மெகாவாட், சூரியசக்தி மூலம் 10,153 மெகாவாட் என மொத்தம் 21,892 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

நீர்மின் நிலையங்கள் மூலம் 2,178 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதையும் சேர்த்துக் கணக்கிட்டால் மொத்தம் 26,303 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உற்பத்தி சுமார் 55 சதவீதம் அரசு நிறுவனங்கள் மூலமும், எஞ்சிய 45 சதவீதம் தனியார் நிறுவனங்கள் மூலமும் கிடைக்கிறது. இவை தவிர, மத்திய தொகுப்பு மின்சாரமும், தேவைக்கேற்ப தனியாரிடம் கூடுதல் கொள்முதல் செய்து கொள்ளவும் வழி உண்டு.

அதன்படி பார்த்தால், கோடைகால உச்சபட்ச தேவையைவிட சுமார் 4,000 மெகாவாட் மின்சாரம் உபரியாகத்தான் இருக்கிறது. எனினும், கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் இரவு-பகல் வேறுபாடு இல்லாமல் குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் இரண்டு, மூன்று மணி நேரம் வரை மின் தடை ஏற்படுகிறது. தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி இருப்பதாக தமிழக மின்வாரியம் கூறினாலும் மின்தடை தொடர்வது வியப்பாக இருக்கிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை சாகுபடிப் பணிகள் தொடங்கியுள்ளன. மேட்டூர் அணை ஜூன் 12-இல் திறப்பதற்கு முன்பாக கிணற்றுப் பாசன வசதியுள்ள விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் தேவை. ஆனால், தற்போது 14 மணி நேரம் மும்முனை மின் விநியோகம் இருந்தபோதிலும் இடையிடையே ஏற்படும் மின்தடை வேளாண் பணிகளைப் பாதிக்கச் செய்கிறது. இதர ஆற்றுப் பாசன மற்றும் குளத்துப் பாசன பகுதிகளுக்கும் மும்முனை மின்சாரம் தேவை. உபரி மின் உற்பத்தி இருந்தபோதிலும் மின்தடை ஏற்படுகிறது என்றால், அதற்கான காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

இப்போது காணப்படும் மின் தடையை மின்வாரியத்தினர் ஒப்புக்கொள்வதில்லை. மின் உற்பத்திக் குறைவு இருந்து அதனால் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டால் மட்டுமே அதை மின் தடையாகக் கருத வேண்டும்; இப்போது நிலவுவது மின் விநியோகத்தில் உள்ள பிரச்னைதான் என்பது அவர்களின் வாதம்.

முறையான பராமரிப்புப் பணிகளைச் செய்து கண்காணிப்பை தீவிரப்படுத்தினால் மின்தடை ஏற்படாமல் தடுக்க முடியும். நிதிப் பற்றாக்குறையால் மின் மாற்றிகள், கம்பங்கள், வயர்கள் உள்ளிட்ட தளவாடப் பொருள்கள் பற்றாக்குறை உள்ளது. காலாவதியானவற்றைப் புதுப்பிக்கவும் வழி இல்லை. பழுதடைந்தவற்றை உடனே மாற்றுவதில் ஏற்படும் சுணக்கம் மின்தடைக்குக் காரணமாகிறது.

மின்வாரியத்தில் நிலவும் நிதிப் பற்றாக்குறையும், நபர் பற்றாக்குறையும்கூட இந்தச் சிக்கலுக்கு காரணம். மின்வாரியத்தின் மொத்த நஷ்டம் ரூ. 1.62 லட்சம் கோடி. இதில் சுமார் 75 சதவீதம் இதர அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய கடன் ஆகும். நாட்டில் உள்ள மின்வாரியங்களின் மொத்த நஷ்டமான ரூ. 6.47 லட்சம் கோடியில் தமிழக மின் வாரியத்தின் பங்கு மட்டுமே சுமார் 25 சதவீதம் ஆகும்.

தமிழக மின்வாரியத்தின் கடன் சுமைக்கு முக்கியமான காரணம், அரசு நிறுவனங்களின் உற்பத்தியைக் குறைத்துவிட்டு, ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையில் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்வதும், நிலக்கரி கொள்முதல் மற்றும் சேமிப்பில் நிகழும் முறைகேடுகளுமே என்று கூறப்படுகிறது.

இன்றைய நிலையில், மின்வாரியத்தில் களப் பணியாளர்கள் முதல் தலைமைப் பொறியாளர் வரை சுமார் 1.40 லட்சம் பேர் தேவை. ஆனால், சுமார் 60,000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து கூறிவருவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். உதவிப் பொறியாளர்கள், கம்பியாளர் மற்றும் உதவியாளர், தொழில்நுட்பம் சாராத பணியாளர்கள் என சுமார் 2,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வாரியம் அனுப்பியுள்ள கருத்துருவை அரசு விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி இருந்தும்கூட மின்தடை தொடர்வது எதிர்கொள்ள முடியாத பிரச்னை அல்ல. நிதிப் பற்றாக்குறைக்கும், நபர் பற்றாக்குறைக்கும் தீர்வு கண்டால் மின் தடைக்கும் தீர்வு காண முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை இன்று குறைந்தது!

மணப்பாறை சாா்-நிலை கருவூல அலுவலகத்தில் அலுவலா் சடலமாக மீட்பு

அமெரிக்க வரி விதிப்பு: இந்தியாவுடன் உறுதியாக துணை நிற்போம்! - சீனா

வட கா்நாடகத்தில் பலத்த மழை; வெள்ளப்பெருக்கு

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT