Center-Center-Delhi
தலையங்கம்

யார் கடிவாளம் போடுவது?

மகளிருக்கு அதிகாரம் அளிப்பதற்காக நேரடிப் பணப் பரிமாற்றம் செய்வது இப்போது நமது நாட்டில் தவிர்க்க முடியாத நடைமுறையாகவே மாறிவிட்டது.

ஆசிரியர்

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மகளிருக்கு அதிகாரம் அளிப்பதற்காக நேரடிப் பணப் பரிமாற்றம் செய்வது இப்போது நமது நாட்டில் தவிர்க்க முடியாத நடைமுறையாகவே மாறிவிட்டது.

மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் போன்ற வாக்குறுதிகள் மூலம் வாக்காளர்களைக் கவர்ந்ததால் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது.

அதைப் பின்பற்றி கர்நாடகத்தில் தாங்கள் வென்றால் மகளிருக்கு மாதம் ரூ.2,000, இலவசப் பேருந்து பயணம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ், மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளில் வென்று கடந்த 2023-இல் ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்த வாக்குறுதிகள் தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் தேர்தல் வெற்றிக்கு உத்தரவாதம் அளித்தன என்பதால் எல்லா கட்சிகளுமே இதைப் பின்பற்றி இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசத் தொடங்கிவிட்டன. கடந்த 2022-23-ஆம் ஆண்டில் இரண்டு மாநிலங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் இப்போது 12 மாநிலங்களாக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் 2.63 கோடி பேருக்கு ரூ.1,500, மேற்கு வங்கத்தில் 2.11 கோடி பேருக்கு ரூ.1,000, கர்நாடகத்தில் 1.1 கோடி பேருக்கு ரூ.2,000, மத்திய பிரதேசத்தில் 1.26 கோடி பேருக்கு ரூ.1,500, தமிழ்நாட்டில் 1.20 கோடி பேருக்கு ரூ.1,000, ஜார்க்கண்டில் 56.62 லட்சம் பேருக்கு ரூ. 2,500, அஸ்ஸôமில் 37.2 லட்சம் பேருக்கு ரூ.1,250, சத்தீஸ்கரில் 70 லட்சம் பேருக்கு ரூ.1,000 என கடந்த சில ஆண்டுகளாக மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

ஹரியாணாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது ரூ.2,000 என காங்கிரஸýம் ரூ.2,100 என பாஜகவும் வாக்குறுதி அளித்தன. பாஜக வென்றதையடுத்து, 5.22 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,100 அளிக்கும் திட்டம் கடந்த செப்டம்பரில் தொடங்கப்பட்டுள்ளது.கல்வி அறிவு அதிகம் உள்ள, தீவிர வறுமையில் இருந்து விடுபட்டுள்ள முதல் மாநிலமாக கடந்த நவ.1-இல் அறிவிக்கப்பட்டுள்ள கேரளத்தில் 2026}இல் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு 31.34 லட்சம் மகளிருக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் கடந்த அக். 28}இல் அறிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக மட்டும் 12 மாநிலங்கள் தங்கள் நிதிநிலை அறிக்கையில் மொத்தம் ரூ.1.68 லட்சம் கோடியை நடப்பு ஆண்டில் ஒதுக்க வேண்டி வரும் என பிஆர்எஸ் லெஜிஸ்லேடிவ் ரிசர்ச் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) மகளிர் உரிமைத் தொகையின் பங்கு 0.2 சதவீதமாக இருந்தது. இப்போது அது 0.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது நிதிநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை ஆளுங்கட்சிகள் உணர்ந்தே உள்ளன. மகாராஷ்டிரத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து கடந்த 2022-இல் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி இதுவரை செயல்படுத்தவில்லை. அதேபோன்று தில்லி (பாஜக), தெலங்கானா (காங்கிரஸ்), ஆந்திரம் (தெலுங்கு தேசம்) ஆகிய மாநிலங்களிலும் நிதிச் சுமை காரணமாக இந்த வாக்குறுதி இப்போதைக்குக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கட்சிகளின் போட்டாபோட்டியில், தேர்தலுக்குத் தேர்தல் இந்தத் தொகையையும், பயனாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதுபோதாதென்று, புதியதொரு கலாசாரம் பிகார் தேர்தலில் அரங்கேறி உள்ளது.

2015-இல் 71 தொகுதிகளில் வென்ற முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 2020}இல் 43 தொகுதிகளில் வென்றது. இப்போது நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடனான தனது கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள, பெண்கள் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பேருக்கு ரூ.10,000 கடந்த செப்டம்பரில் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு ஒருபடி மேலேசென்று, தான் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ஆண்டுதோறும் ஒரே தவணையில் ரூ. 30,000 அளிக்கப்படும் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார்.

வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ 2,000 (ரூ.19,000 கோடி), குடும்பத்துக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் (ரூ.7,300 கோடி), வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு ரூ.25 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு (ரூ.10,000 கோடி) உள்ளிட்ட வாக்குறுதிகளையும் சேர்த்துக் கணக்கிட்டால், ஆண்டொன்றுக்கு ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி தேவைப்படும்.

இவை எல்லாம் போதாதென்று, அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தையும் சேர்த்தால் மேலும் சுமார் ரூ.50,000 கோடி முதல் ரூ. 1,00,000 கோடி வரை தேவைப்படும். பிகாரின் மொத்த வரி வருமானத்தையும் சேர்த்தாலும்கூட இதையெல்லாம் நிறைவேற்றப் போதாதே, என்ன செய்வார்கள்?

இது கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றங்கள் இந்த விவகாரத்தில் தலையிடுவதில்லை. எந்தவித வளர்ச்சிப் பணிகளுக்கும் நிதி ஆதாரம் இல்லாமல் இதுபோன்ற திட்டமிடல் இல்லாத வாக்குறுதிகளை அள்ளி வீசும் போக்குக்கு யார் கடிவாளம் போடுவது? கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக மாறப் போகின்றன இலவச வாக்குறுதிகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீராத கலைத்தாகமும், தணியாத நாட்டுப்பற்றும்! கமலுக்கு முதல்வர் வாழ்த்து!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் நீக்கம்!

கோவையில் இளம் பெண் கடத்தல்? காவல்துறை தீவிர விசாரணை!

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபுவுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன்!

சட்டவிரோத குடியேறிகள் மீது பரிவு; கடவுள் ராமா் மீது வெறுப்பு: ஆா்ஜேடி, காங்கிரஸை சாடிய பிரதமா் மோடி

SCROLL FOR NEXT