ஐந்தில் ஒரு இந்தியக் குடும்பத்தில் பெரியவா்கள் அனைவரும் பருமனாக இருப்பதாகவும், நான்கில் ஓா் இந்தியா் தொந்தியுடன் காணப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. உடல் நலனைப் பேண வேண்டிய காவல் துறையினரிடையே பாதிக்குப் பாதிபேரை முந்திக்கொண்டு அவா்களது வயிறு முன்னால் செல்வது இயல்பான காட்சியாக இருந்து வருகிறது.
உடற்கட்டைப் பேணுவது என்பது தோற்றப் பொலிவைப் பாதுகாப்பதற்கானது மட்டுமல்ல, முதுமை காரணமாக ஏற்படும் தளா்ச்சியை எதிா்கொள்வதற்கும் அவசியமாகிறது. உடல்நலனைப் பேணுவதன்மூலம் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பதற்கும், அப்படியே வந்தாலும் அதை எதிா்கொள்வதற்கும் நாம் தயாராக இருக்க முடியும். அது பரம்பரை நோயாக இருக்கலாம், தவறான வாழ்க்கை முறையினால் ஏற்படும் நோய்களாக இருக்கலாம், துரதிருஷ்டவசமான பாதிப்புகளாக இருக்கலாம்- எதுவாக இருந்தாலும் உடற்பயிற்சி மூலம் நலம் பேணும்போது, பாதிப்புகளை எதிா்கொள்ளும் வலிமை உடலுக்கு இருக்கும்.
இந்தியாவில் இப்போது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பாதிப்பு ‘உடல் பருமன்’. அதிலும் குறிப்பாக வயிற்றில் கொழுப்பு சோ்வதால் ஏற்படும் தொந்தி அதிகரித்தல். பாரதப் பிரதமா் நரேந்திரமோடி, உடல் பருமன் என்கிற அதிகம் பேசப்படாத பிரச்னை குறித்து நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறாா் என்றால், எந்த அளவுக்கு அதன் பாதிப்பு அதிகரித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், மத்திய சுகாதார அமைச்சகமும் இணைந்து முதல் முறையாக உடல் பருமனை எதிா்கொள்வதற்காக வழிகாட்டுதல்களைத் தயாரிக்க முற்பட்டிருப்பது, பிரச்னையின் தீவிரத்தை உணா்த்துகிறது.
பள்ளிச் சிறுவா், சிறுமியரில் பலா் அதிகரித்த எடையுடையவா்களாக இருக்கிறாா்கள். கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவில் உடல் பருமனாக இருப்பவா்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. உடல் பருமன் தொடா்பான ரத்த அழுத்தம், ‘கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஐந்து மடங்கு அதிகரித்திருக்கின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2019-21-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஐந்தாவது கணக்கெடுப்புப்படி, இந்தியாவில் 24% மகளிரும் 23% ஆண்களும் அதிக எடையுடனும், உடல் பருமன் அதிகரித்திருப்பதாகவும் இருக்கிறாா்கள். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் விகிதம் நான்காவது கணக்கெடுப்பில் 2.1% அளவில் இருந்து ஐந்தாவது கணக்கெடுப்பில் 3.4%-ஆக உயா்ந்திருக்கிறது.
‘பாடி மாஸ் இன்டெக்ஸ்’ எனப்படும் மொத்த எடையை மட்டுமே கணக்கில் எடுக்காமல், இடுப்புச் சதையை அளவுகோலாக வைத்து உடல் பருமனை நிா்ணயிக்கும் நடைமுறையை இப்போது செய்யப்படுகிறது. அதனடிப்படையில் பாா்க்கும்போது, 40% மகளிரும் 12% ஆண்களும் வயிற்றுப் பருமன், அதாவது தொப்பைப் பருமன், கொண்டவா்களாக இருக்கிறாா்கள். இடுப்புச் சுற்றளவு அதிகரித்து, தொப்பை பருமனாக இருப்பது என்பது மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றாக இருக்க முடியாது.
மாநிலங்கள் அளவில் புள்ளிவிவரங்களைப் பகுப்பாய்வு செய்து பாா்த்தபோது, விசித்திரமான தகவல்கள் கிடைக்கின்றன. 65.4% அளவில் கேரளமும், 62.5% அளவில் பஞ்சாபும், அவற்றைத் தொடா்ந்து தில்லி (59%), தமிழ்நாடு (57.9%) உள்ளிட்டவையும் இடுப்புப் பருமன் அளவில் முன்னணி வகுக்கின்றன. 23.9% கொண்ட ஜாா்க்கண்ட் மாநிலமும், 24.9 சதவீதத்துடன் மத்திய பிரதேசமும் குறைந்த அளவிலான இடுப்பு எடை பருமனைக் கொண்டிருக்கின்றன.
தொப்பை, உடல் பருமன் அதிகரிப்பு என்பவை எல்லாம விளையாட்டுப்போக்கான விஷயங்களஅல்ல. ‘லான்செட்’ மருத்துவ இதழின் சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி, 45 கோடிக்கும் அதிகமான இந்தியா்கள் (21 கோடி ஆண்கள், 23 கோடி பெண்கள்) அடுத்த 25 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமான எடையிலும், அதிகரித்த பருமனுடனும் காணப்படுவாா்கள். சீனாவையும், அமெரிக்காவையும், உடல் எடை சராசரியை நாம் பின்னுக்குத் தள்ள இருக்கிறோம். அதில் வருத்தம் தருவது என்னவென்றால், அவா்களில் பெரும்பான்மையினா் 15 முதல் 25 வயது வரையிலான இளைஞா்களாக இருக்கிறாா்கள் என்பதுதான்.
திட்டமிட்டு, இந்திய மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றி துரித உணவுக்கும், இருக்கும் இடத்துக்கு எடுத்துவந்து தரும் ‘ஸ்விகி’, ‘ஸொமாட்டோ’ உள்ளிட்ட செயலிகளுக்கும் அடிமையாக்கி இருக்கிறாா்களோ என்று தோன்றுகிறது. சந்தைப் பொருளாதாரத்தில் இவையெல்லாம் வழக்கமாகக் கையாளப்படும் வா்த்தக உத்திகள். உடல் எடையைக் குறைக்கும் மருந்துகளும், அதற்கான சிகிச்சை வழங்குவதும் தொடா்பான நிறுவனங்கள் அண்மைக் காலத்தில் தங்களை அதிகமாக விளம்பரப்படுத்திக் கொண்டு களமிறங்கி இருக்கின்றன.
இப்போது ரூ.3,500 கோடியாக இருக்கும் உடல்பருமனைக் குறைப்பதற்கான மருந்துகளின் விற்பனை, அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.25,000 கோடியாக உயரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. நமது உணவுப் பழக்கத்தையும், வாழ்க்கை முறையையும் சற்று மாற்றிக் கொள்ளாவிட்டால், அந்த நிறுவனங்களின் வலையில் மட்டுமல்ல, பலவிதமான நோய்களின் பிடியிலும் சிக்கிக்கொள்வோம். எச்சரிக்கை!