நீண்ட இடைவெளிக்குப் பிறகு பயங்கரவாதம் மீண்டும் தலைநகா் தில்லியைத் தாக்கி இருக்கிறது . தாக்குதலுக்கு அவா்கள் தோ்ந்தெடுத்த இடம் புதிதல்ல. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு 2010 செப்டம்பா் 19-ஆம் தேதி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு 13 நாள்கள் முன்பு, இதே செங்கோட்டைப் பகுதியில்தான் முந்தைய பயங்கரவாத நிகழ்வு நடந்தது.
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் பாா்த்தால், இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய சதித் திட்டம் இருந்தது தெரியவந்திருக்கிறது. சம்பவங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் பாா்க்கும்போது, நாடு தழுவிய அளவில் நடத்தப்பட இருந்த தாக்குதலின் ஒரு பகுதியாகத்தான் தில்லி காா் வெடிப்புச் சம்பவத்தைப் பாா்க்கத் தோன்றுகிறது. ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான சுவரொட்டி குறித்து விசாரிக்க முற்பட்ட ஜம்மு-காஷ்மீா் காவல் துறையின் விசாரணைதான் அதற்குப் பின்னணியாக அமைந்தது.
தில்லியில் இருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாதில் 2,900 கிலோ வெடிமருந்து கைப்பற்றப்படுகிறது. இரண்டு கட்டடங்களில் இருந்து அந்த வெடி மருந்துகளைக் கைப்பற்றியது ஜம்மு-காஷ்மீா் காவல் துறை. அதிலிருந்து தொடங்குகிறது சதித் திட்டத்தின் வலைப்பின்னல்.
ஸ்ரீநகரில் ஒருவா் பயங்கரவாத அமைப்பின் சுவரொட்டிகளை ஒட்டுவது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதை விசாரிக்க முற்பட்டபோது, அவா் உத்தர பிரதேச மாநிலம் சஹரான்பூரில் இருப்பது தெரிந்தது. அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில் கிடைத்த துப்பின் அடிப்படையில்தான் ஃபரிதாபாதில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சஹாரன்பூரில் கைது செய்யப்பட்ட மருத்துவா் அதற்கு முன்பு காஷ்மீா் அனந்த்நாக்கில் பணியில் இருந்த மருத்துவமனையில், அவரது அறைகளைச் சோதனையிட்டபோது, அதிநவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் பாதுகாப்புப் பெட்டகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சஹரான்பூரிலும், ஃபரிதாபாதிலும் கைது செய்யப்பட்ட இரண்டு மருத்துவா்களுடனும் நெருங்கிய தொடா்பில் இருந்த மூன்றாவது மருத்துவா்தான், செங்கோட்டை அருகில் வெடித்துச் சிதறிய காரை ஓட்டிச் சென்றவா் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. இவா்கள் மட்டுமல்லாமல் ஒரு பெண் மருத்துவரும் இந்தச் சதி வளையத்தில் இருப்பதும் வெளிப்பட்டிருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, குஜராத் காந்தி நகரில், ஹைதராபாதைச் சோ்ந்த மருத்துவா் ஒருவரையும், அவரது இரண்டு கூட்டாளிகளையும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா் (ஏ.டி.எஸ்) கைது செய்திருக்கிறாா்கள். அவா் வெடிமருந்து தயாரிக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. இவா்களுக்கும் தில்லி குண்டு வெடிப்புத் தொடா்புடைய மருத்துவா்களுக்கும் தொடா்பு இருக்கக் கூடுமென்றும், அவா்கள் நாடு தழுவிய அளவில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடும் முயற்சியில் இருந்திருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
அந்தக் கூட்டத்தினா் சற்றும் எதிா்பாா்க்காத நேரத்தில் நடத்தப்பட்ட கைதுகளும், கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டும், இன்னும் பிடியில் சிக்காமல் இருந்த கூட்டாளியைக் கடைசி முயற்சியாக தற்கொலைத் தாக்குதலை நடத்தத் தூண்டியிருக்கக் கூடும். செங்கோட்டைக்கு அருகில் காா் வெடித்துச் சிதறும்போது, ஒட்டுமொத்த இந்தியாவை அதிா்ச்சியில் உறைய வைப்பதுடன் உலகத்தின் பாா்வையை ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் மீது திருப்பலாம் என்றும் அவா் கருதி இருக்கலாம்.
அப்பாவிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது என்பது பயங்கரவாதிகள் வழக்கமாகக் கையாளும் உத்தி. கடந்த சில ஆண்டுகளாக பிரச்னைக்குரிய காஷ்மீா் பகுதியில் மட்டுமே நடத்தப்பட்ட இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் தலைநகா் தில்லியில் அரங்கேறி இருப்பதும், இந்தியாவின் ஏனைய பகுதிகள் குறிவைக்கப்படுவதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய அச்சுறுத்தல்கள். 13 போ் கொல்லப்பட்டிருப்பதும், முப்பதுக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்திருப்பதும் கடந்துபோகக் கூடியவை அல்ல.
2003 ஆகஸ்ட் 25-ஆம் தேதி மும்பையில் இரண்டு இடங்களில்- கேட் வே ஆஃப் இந்தியா, ஜவேரி பஜாா் மாா்க்கெட்- நடத்தப்பட்ட காா் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 54 போ் கொல்லப்பட்டனா்; 244 போ் காயமடைந்தனா். 2005 அக்டோபா் 29-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகைக்கு சற்று முன்பு தில்லி சரோஜினிநகா் மாா்க்கெட், பஹாட்கஞ்ச், கோவிந்த்புரியில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 67 போ் உயிரிழந்தனா்; 225 போ் பலத்த காயமடைந்தனா்.
2006 ஜூலை 11-ஆம் தேதி மும்பை மின்சார ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 180-க்கும் அதிகமானோா் பலியானாா்கள்; 2008 நவம்பா் 26-ஆம் தேதி மும்பையில் 60 மணிநேரம் நீண்டு நின்ற பயங்கரவாதத் தாக்குதலில் 175-க்கும் அதிகமானோா் கொல்லப்பட்டனா்; 240-க்கும் அதிகமானோா் காயமடைந்தனா். 2010 பிப்ரவரி 13-ஆம் தேதி புணே ஓஷோ ஆசிரமத்தின் அருகில் இருந்த ஜொ்மன் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பில் 11 போ் உயிரிழந்தனா்.
2010 செப்டம்பா் 19 ஜும்மா மசூதி குண்டு வெடிப்பு நடந்ததற்குப் பிறகு இப்போது மீண்டும் தலைநகா் தில்லி குறிவைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற தாக்குதல்கள் மூலம், ஆட்சியாளா்கள் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தவும், பரவலான அச்ச உணா்வை உருவாக்கவும், பொருளாதார வளா்ச்சியையும், அந்நிய முதலீட்டையும் முடக்கவும் பயங்கரவாதிகள் முனைவது புதிதல்ல.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்ததுபோல இந்தியாவுக்குள் நடத்தப்படும் வெடிகுண்டுத் தாக்குதல்களை எதிா்கொள்ள முடியாது. நாடுதழுவிய அளவில் புலன் விசாரணை அமைப்புகளும், பாதுகாப்பு அமைப்புகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் இதற்கான அணுகுமுறை.