பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளைத் தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. முறையான அனுமதியோ, திட்டமிடுதலோ இல்லாமல் பொது இடங்களில் திடீர் போராட்டங்கள், சாலை மறியல்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணா விரதங்கள், ஊர்வலங்கள் என இறங்கிவிடுவது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கிறது. எத்தனை சட்டம், விதிமுறைகள் இருந்தாலும் சட்ட விதிமுறைகளை மதிக்காமல் அவரவர் விருப்பம்போல செயல்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.
அரசியல் கட்சிகள் குறித்துச் சொல்லவே வேண்டாம். அவர்கள் எதற்கும் கட்டுப்பட வேண்டியதில்லை என்பது போலத்தான் பெரும்பாலான கட்சிகளின் நடவடிக்கைகள் உள்ளன. நீதிமன்ற உத்தரவுகளைக்கூட அவர்கள் மதிப்பதில்லை. சாலையோரங்களில் வரவேற்புப் பதாகைகளை வைக்கக் கூடாது என்பது உயர்நீதிமன்ற உத்தரவு; ஆனாலும், இன்றளவும் பிரதான சாலைகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களுடன் பதாகைகள் பளிச்சிடுகின்றன.
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, சில உத்தேச விதிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் 20 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சாலைப் பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு தமிழக அரசால் முன்மொழியப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டன.
அரசியல் நிகழ்வுகளின்போது பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கும் வகையில், கட்சிகளால் திரட்டப்படும் மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப ரூ. 1 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது; குறிப்பிட்டதைவிட கூடுதலாக 50 சதவீதம் பேர் பங்கேற்றால் வைப்புத் தொகை திரும்பித்தரப்படாது என்றும் உத்தேச விதிமுறை கூறுகிறது.
அரசின் இந்த வழிகாட்டு விதிமுறைகளைக் கேட்ட கட்சித் தலைவர்கள் அனைவரும் நியாயமாக அதைப் பாராட்டி வரவேற்றிருக்க வேண்டும். ஆனால், கட்சிப் பிரதிநிதிகள் பலர் விதிமுறைகளை விமர்சித்துப் பேசினார்களே தவிர, முழு மனதோடு ஆதரித்தோர் யாரும் இல்லை.
மக்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையில் விதிமுறைகள் இருக்கக் கூடாது என ஆளுங்கட்சி முடித்துக் கொண்டது. இடதுசாரிகளில் ஒரு பிரிவினர் விதிமுறைகளை முற்றிலுமாக நிராகரித்து விட்டனர். மேலும், நீதிமன்ற உத்தரவை அரசு ஏற்கக் கூடாது என சொன்னதுதான் அதைவிட வேடிக்கை. பாதிப்பு ஏற்பட்டால்
அதிகாரிகளைப் பொறுப்பாக்க வேண்டும் என்ற பிரதான எதிர்க்கட்சிப் பிரதிநிதியின் கருத்து நகைப்பை வரவழைக்கிறது.
அனைத்துக் கட்சிகளும் தங்களது சாலைப் பேரணி அல்லது பொதுக்கூட்டங்களுக்கு குறைந்தது 5 நாள்களுக்கு முன்பு அனுமதி பெற வேண்டும். நிகழ்ச்சிக்கு முன்பு 2 மணி நேரத்துக்கும் மேலாக மக்கள் காத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். சாலைப் பேரணி, பொதுக்கூட்டங்களை அதிகபட்சம் 3 மணி நேரத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும். சாலைப் பேரணி நடத்துவதற்கு தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்பதில் இந்தக் கட்சிகள் என்ன தவறு கண்டன எனத் தெரியவில்லை.
நிகழ்ச்சிகளைப் பொருத்து குறைந்த ஆபத்து, மிதமான ஆபத்து, அதிக ஆபத்து என மூன்று வகையாகப் பிரித்து கூட்டங்களுக்குப் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்படும். அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஒரே இடத்தை பல கட்சிகள் அல்லது அமைப்புகள் கேட்டால், முதலில் அனுமதி கோரியவருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்ற விதிமுறைகள் வரவேற்கப்பட வேண்டியவை. இதை ஏற்றுக் கொள்வதில் கட்சிகளுக்கு என்ன சிக்கல் என்பது புரியவில்லை.
சிறப்பு அழைப்பாளர் பேசும் இடத்திலிருந்து 500 அடி தொலைவுக்கு தடுப்புகளை அமைப்பாளரே அமைக்க வேண்டும். மேலும், இடத்தின் தன்மைக்கேற்ப காவல் துறையினர் கூடுதல் தடுப்புகளைப் பரிந்துரை செய்யலாம் என்பதை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை?
நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே உரை நிகழ்த்த வேண்டும். வழியில் வேறு எங்கும் உரை நிகழ்த்தக் கூடாது. சாலையோரம் மக்கள் ஒரே இடத்தில் நிலையாக கூடியிருந்து வாகனம் சென்றவுடன் கலைந்து செல்வதை உறுதி செய்யவேண்டும். சிறப்பு அழைப்பாளரின் வாகனத்தைப் பின்தொடர்ந்து மக்கள் செல்வதைத் தவிர்க்கும் வகையில் தன்னார்வலர்களை நியமித்து கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் ஏற்கெனவே அமலில் இருந்திருந்தால் கரூர் சம்பவ உயிர் இழப்புகளைத் தவிர்த்திருக்கலாம்.
கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தவோ, பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என்றோ எங்கும் சொல்லவில்லை. எனவே, ஜனநாயக உரிமைக்குப் பாதிப்பில்லை. விதிவிலக்கு யாருக்கும் கிடையாது. பொதுமக்கள் நலன் கருதியும், அசம்பாவிதம் நிகழ்ந்தால் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் அரசு வகுத்துள்ள இந்த உத்தேச விதிமுறைகள் ஆளுங்கட்சிக்கும் பொருந்தும் என்பதை மற்ற கட்சிகள் உணர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.