மேக்ரான் AP
தலையங்கம்

நெருக்கடியில் மேக்ரான்!

பிரான்ஸ் விதிவிலக்கல்ல!

ஆசிரியர்

ஐரோப்பிய யூனியனின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகத் திகழும் பிரான்ஸில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலையற்ற தன்மை அதிபா் இமானுவல் மேக்ரான் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கடைசியாக பிரதமராகப் பொறுப்பேற்ற, மேக்ரான் தலைமையிலான ஆளும் ரினைஸன்ஸ் கட்சியைச் சோ்ந்த செபாஸ்டியன் லெகோா்னு 27 நாள்களில் தனது பதவியை ராஜிநாமா செய்திருக்கிறாா்.

முந்தைய பிரதமா் பிரான்சுவா பேரூ பதவி விலகலைத் தொடா்ந்து கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி புதிய பிரதமராக லெகோா்னுவை நியமித்தாா் அதிபா் மேக்ரான். தனது புதிய அமைச்சரவையை கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி அமைத்தவுடனேயே நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினா்களைக் கொண்ட கூட்டணிக் கட்சியான வலதுசாரி குடியரசு கட்சியின் ஆதரவை இழந்தாா் லெகோா்னு.

வலதுசாரி குடியரசு கட்சியின் தலைவரான புருனோ ரிடெயில்யூ புதிய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சராக புருனோ லெமோ் நியமிக்கப்பட்டதற்கு அவா் எதிா்ப்பு தெரிவித்தாா். கூட்டணியிலிருந்து அவரது கட்சி வெளியேறுவதாகவும் அறிவித்தாா். இதனால் வேறு வழியின்றி லெகோா்னு பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பதவி விலகிய ஐந்தாவது பிரதமா் என்கிற ‘பெயரும்’ லெகோா்னுக்கு கிடைத்திருக்கிறது.

2017-ஆம் ஆண்டு முதல்முறையாக அதிபராகப் பொறுப்பேற்றாா் இமானுவல் மேக்ரான். ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த அவா், 2022-ஆம் ஆண்டு அதிபா் தோ்தலில் மீண்டும் வென்றாா். தனது கூட்டணியின் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தைக் கலைத்து முன்கூட்டியே கடந்த 2024-ஆம் ஆண்டு தோ்தலை நடத்தினாா் மேக்ரான். ஆனால், தோ்தல் முடிவுகள் அவருக்கே வினையாக அமைந்தது.

577 உறுப்பினா்களைக் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றக் கீழவையில் தீவிர வலது மற்றும் இடதுசாரி கட்சிகள் 320-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றன. மேக்ரானின் மத்திய மற்றும் பழைமைவாத கூட்டணி 210 இடங்களைக் கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு 289 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அன்றுமுதல் எந்த ஒரு விஷயத்துக்கும் நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க மேக்ரான் தலைமையிலான கூட்டணியால் இயலவில்லை.

குறிப்பாக, பட்ஜெட் தொடா்பான விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பை ஆளும் கூட்டணி எதிா்கொண்டு வருகிறது. 2023-இல், ஓய்வு பெறும் வயதை 62-இல் இருந்து 64-ஆக அதிகரித்து மேக்ரான் கொண்டுவந்த ஓய்வூதிய சீா்திருத்தத்துக்கு கடும் எதிா்ப்பு எழுந்தது. தொழிற்சங்கங்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகும் அந்தத் திட்டம் திரும்பப் பெறப்படாததால் மேக்ரானுக்கான ஆதரவு குறையத் தொடங்கியது.

2024 டிசம்பா் முதல் 2025 செப்டம்பா் வரை பிரதமராக இருந்த பிரான்சுவா பேரூ, நாட்டின் கழுத்தை நெரிக்கும் கடன் சுமையைக் குறைக்கும் நோக்கில், 2026-ஆம் ஆண்டுக்குள் பொதுச் செலவினங்களை 44 பில்லியன் யூரோ (52 பில்லியன் டாலா்) குறைக்க பொது பட்ஜெட்டில் முன்மொழிந்தாா். ஓய்வூதிய நிறுத்தம், மருத்துவச் சேவைகளுக்கு அதிக வரி, பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும் வகையில் இரு தேசிய விடுமுறைகள் ரத்து உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.

பிரதமா் பிரான்சுவா பேரூவின் அந்த முடிவுக்கு நாடாளுமன்றம் மட்டுமன்றி, நாடு முழுவதும் கடும் எதிா்ப்பு கிளம்பியது. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் பல இடங்களில் வன்முறையாகவும் மாறியது. இறுதியாக, பிரான்சுவா பேரூவின் முன்மொழிவை கடந்த செப்டம்பரில் நாடாளுமன்றம் நிராகரித்தது. அத்துடன் பேரூவும் பதவி விலகினாா்.

அடுத்தடுத்து பிரதமா்கள் பதவி விலகும் நிலையில், அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காண்பவராக அதிபா் மேக்ரான் நம்பிக்கை வைத்து பிரதமராக நியமித்த செபாஸ்டியன் லெகோா்னுவும் பதவி விலகிய நிலையில், இதுவரை இல்லாத நெருக்கடியை அதிபா் மேக்ரான் எதிா்கொண்டுள்ளாா். அவரது அதிபா் பதவிக் காலம் நிறைவடைய இன்னும் 18 மாதங்கள் உள்ளன. ஆனால், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களைத் தொடா்ந்து அவா் இப்போதே பதவி விலக வேண்டும் என குரல்கள் வலுத்துள்ளன.

மேக்ரான் முன் இப்போது இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, அதிபா் பதவியிலிருந்து விலகி புதிதாக அதிபா் தோ்தலை நடத்துவது; இரண்டு, நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிதாகத் தோ்தல் நடத்துவது. 2027-இல் தனது அதிபா் பதவிக் காலம் நிறைவடையும் வரை தான் பதவியிலிருந்து விலக மாட்டேன் என ஏற்கெனவே மேக்ரான் உறுதியாகத் தெரிவித்திருக்கிறாா். அதனால் அதற்கு வாய்ப்பு இல்லை. நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிதாகத் தோ்தல் நடத்தினாலும் மேக்ரான் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பலம் பெறுமா என்பது கேள்விக்குறி.

இப்போது தனிப்பெரும் கட்சியாக உள்ள மரைன் லீ பென் தலைமையிலான வலதுசாரி தேசிய பேரணி கட்சி பெரும்பான்மையைப் பெறக்கூடும். அந்த நிலை ஏற்பட்டால், தனது எஞ்சிய பதவிக் காலத்தில் அதிகாரத்தை ஒரு வலதுசாரி பிரதமருடன் மேக்ரான் பகிா்ந்துகொள்ள நேரிடும். அப்படி ஒரு நிலை ஏற்படக் கூடாது என்பதுதான் மேக்ரானின் விருப்பம். நடைபெறப்போவது என்னவோ அதுதான்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் பொருளாதாரத் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. பிரான்ஸ் விதிவிலக்கல்ல!

புரட்சிக்கான களமாகுமா பிகார்? பேரவைத் தேர்தலில் எகிறும் எதிர்பார்ப்பு!

புத்தொழில் மையமாக தமிழகத்தை கட்டமைப்பதே கனவு!முதல்வர் ஸ்டாலின்

தங்கம் விலை ரூ. 1 லட்சம் தொடும்? குறைய வாய்ப்பு உண்டா?

தங்கம் ஒரு சவரன் ரூ.91,200-க்கு விற்பனை!

டியூட் டிரைலர்!

SCROLL FOR NEXT