மகாராஷ்டிர முதல்வர் முன்னிலையில் சரணடைந்த நக்ஸல் தலைவர் மல்லுஜூலா வேணு கோபால் ராவ் Photo : ANI
தலையங்கம்

இறங்குமுகத்தில் நக்ஸல்கள்!

ஆசிரியர்

ஆட்சியாளர்களையும், பாதுகாப்புப் படையினரையும் அச்சுறுத்திக் கொண்டிருந்த நக்ஸலைட்டுகள் இப்போது கொத்துகொத்தாக சரணடைவதும், ஆயுதங்களை ஒப்படைப்பதும் அரசுகளின் தொடர் நடவடிக்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் கூற வேண்டும். பயங்கரவாத கொள்கையின் மீது ஏற்பட்ட சலிப்பு ஒரு காரணமாக இருந்தாலும்கூட தங்களது இயக்கத்தில் இணைந்திருக்கும் இளைஞர்கள் கொல்லப்படுவார்கள் என்கிற அச்சம்தான் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர்கள் அரசிடம் சரணடைந்ததற்கு முக்கியமான காரணம்.

கடந்த வாரம் புதன்கிழமை சத்தீஸ்கரில் 27 நக்ஸலைட்டுகள், மகாராஷ்டிரத்தில் 61 நக்ஸலைட்டுகள் என மொத்தம் 88 பேர் சரணடைந்தனர். மறுநாள் சத்தீஸ்கரில் மேலும் 170 பேர் சரணடைந்தனர். அடுத்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சத்தீஸ்கரில் 210 பேர் சரணடைந்துள்ளனர். 153 ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர். இது நக்ஸல் தீவிரவாதத்துக்கு எதிரான மத்திய, மாநில அரசுகளின் முனைப்பான போரில் முக்கியமான திருப்பம் என்று கூறவேண்டும்.

வளர்ச்சிக்கான போராட்டம் என்று கூறி 1967 முதல் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக 'சிவப்புத் தாழ்வாரம்' என அழைக்கப்பட்டு வந்த நேபாளத்தின் பசுபதி முதல் ஆந்திரத்தின் திருப்பதி வரை 11 மாநிலங்களில் நக்ஸல்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்களது கொள்கைகளையும், செயல்பாடுகளையும் ஏற்காத சாமானிய மக்கள் முதல் அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன.

நக்ஸல்களுக்கு முடிவு கட்ட 'ஆபரேஷன் ஆக்டோபஸ்', 'ஆபரேஷன் டபுள் புல்', 'ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்' போன்ற கடுமையான தாக்குதல் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. அதன் விளைவாக நக்ஸல்களின் ஆதிக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. இப்போது அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 36-இல் இருந்து 3-ஆகவும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 11-ஆகவும் குறைந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி கடந்த 2004-14 வரையிலான 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது 2014-24 வரையிலான 10 ஆண்டுகளில் நக்ஸலைட்டுகளின் தாக்குதலில் பலியான பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை 73 சதவீதமும், பொதுமக்களின் எண்ணிக்கை 74 சதவீதமும் குறைந்துள்ளது. சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஆண்டு ஜனவரிக்கு பிறகு இதுவரையில் சுமார் 2,100 பேர் சரணடைந்துள்ளனர். 1,785 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 477 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நக்ஸல்கள் அடிபணிவதற்கு, பாதுகாப்புப் படையினரின் தொடர் வேட்டை, நீர்த்துப்போன கொள்கைகள், அமைப்புக்குள் ஏற்பட்ட மோதல்கள், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அரசுகள் மேற்கொண்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மறுவாழ்வுக் கொள்கைகள் எனப் பல காரணங்களைக் கூறலாம்.

மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற 2019-க்கு பிறகு மாநில அரசுகளுடன் இணைந்து மேற்கொண்ட கடுமையான தாக்குதல் நடவடிக்கைகளில் நக்ஸலைட்டுகளின் மத்திய அமைப்பின் முக்கிய நிர்வாகிகளில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 25,000 துணை ராணுவப் படையினர் சிவப்புத் தாழ்வாரம் என்று அழைக்கப்படும் அடர்ந்த காடுகளில் சல்லடைப் போட்டுத் தேடி மாவோயிஸ்டுகள் மீது நடத்தும் தாக்குதல்கள் பலனளித்திருக்கின்றன.

அண்மையில் மகாராஷ்டிரத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் உயர்நிலைத் தலைவர்களில் ஒருவரான மல்லுஜூலா வேணு கோபால் ராவ் என்ற பூபதி 60 பேருடன் சரணடைந்தார். இதை அந்த மாநிலத்தில் நக்ஸல் இயக்கம் முடிவுக்கு வந்ததற்கான அறிகுறியாகவே கருதலாம். 'சிவப்புத் தாழ்வாரங்களில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு இவர்தான் பொறுப்பாளர், அவரதுதலைக்கு ரூ. 1 கோடி முதல் ரூ. 10 கோடி வரையில் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல்கள், சரணடைதல் ஒருபுறம் என்றாலும் மறுபுறம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம், குடிநீர், கல்வி, சாலை, மருத்துவம், இலவச அரிசி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு மத் திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 3,331 கோடி ஒதுக்கியுள்ளது. இது முந்தைய காலத்தை ஒப்பிட்டால் 55% அதிகம்.

அத்துடன் சரணடைவோருக்கு உடனடி நிதியுதவி, குறிப்பிட்ட காலத்துக்கு மாதாந்திர உதவித்தொகை, ஆயுதங்களை ஒப்படைத் தால் வெகுமதி, வேலைவாய்ப்புக்கான தொழில் பயிற்சி என அரசு அறிவித்துள்ள கவர்ச்சிகரமான திட்டங்கள் இளைஞர்களைக் கவர்ந்துள்ளதால் அவர்கள் இயக்கத்தைவிட்டு வெளியேறி வருவதில் வியப்பில்லை.

இவற்றையெல்லாம்விட முக்கியமானது அமைப்புகளுக்குள் ஏற்பட்டுள்ள கொள்கைக் குழப்பம், கோஷ்டி மோதல், மூத்த நிர்வாகிகளின் ஆடம்பரவாழ்வு, கீழ்நிலை போராளிகள் காடு-மலைகளில் கடுமையான சூழல்களை எதிர்கொண்டு போராட வேண்டிய சூழல், ஆயுத போராட்டத்தில் நம்பிக்கை இழந்துவிட்டது போன்றவை காரணமாக இளம் நக்ஸல்கள் சரணடைந்து வருகின்றனர். புதிதாக சேர எவரும் ஆர்வம் காட்டுவதில்லை.

அரசுகளின் தொடர் முனைப்பான அதிரடி நடவடிக்கைகளால் மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளபடி அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் 'நக்ஸல் இல்லா இந்தியா' உருவாகும் சாத்தியம் நனவாகி இருக்கிறது. ஆனால், நக்ஸல்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமான விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரச் சுரண்டல்களுக்கு முடிவு கட்ட அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி: அரசுப் பேருந்துகளில் 7.94 லட்சம் பேர் பயணம்!

பட்டாசு வெடிப்போர் கவனம்... அடுத்த 3 மணிநேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

தீபாவளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட பா்தி கும்பல் உறுப்பினா்கள் இருவா் கைது

தீபாவளி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்!

SCROLL FOR NEXT