அமெரிக்காவில் 2016-இல் விற்பனையான சாம்சங் "கேலக்ஸி நோட் 7' அறிதிறன்பேசிகள், மின்னேற்றம் செய்யும் போதும், பேசிக்கொண்டிருக்கும்போதும்கூடத் திடீரென்று தீப்பிடிக்கின்றன, வெடிக்கின்றன உள்ளிட்ட புகார்கள் அதிகரிக்கத் தொடங்கின. நிலைமையை எதிர்கொள்ள யாரும் அதுவரையில் நினைத்துப் பார்க்காத, எதிர்பார்க்காத ஒரு நடவடிக்கையைத் தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டது. அந்தக் குறிப்பிட்ட தயாரிப்பு தொகுதியை (பேட்ச்) சேர்ந்த அனைத்து அறிதிறன்பேசிகளையும் செயலிழக்கச் செய்தது சாம்சங் நிறுவனம்.
வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் அறிதிறன்பேசிகளை செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பம் அறிதிறன்பேசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு இருக்கிறது என்பது அப்போதுதான் வெளியில் தெரியவந்தது. விற்பனை செய்யப்பட்ட பொருளின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் உரிமை தயாரிப்பாளர்களுக்கு இருக்கலாமா என்கிற தார்மிகக் கேள்விக்கு இதுவரையில் தயாரிப்பு நிறுவனங்கள் விடை பகரவில்லை.
உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, மெலிடோபோல் என்கிற ஊரைக் கைப்பற்றியது ரஷிய ராணுவம். அங்கிருந்த வேளாண் சார்ந்த இயந்திரங்களின் விற்பனையாளர் ஒருவரின் நிறுவனத்தை அவர்கள் சூறையாட முற்பட்டனர். "ஜான் டீரே' என்பது டிராக்டர், அறுவடை இயந்திரம், மருந்து தெளிக்கும் உபகரணங்கள் உள்ளிட்டவை தயாரிக்கும் நிறுவனம். மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட சுமார் 5 மில்லியன் டாலர் மதிப்பிலான 27 அதி நவீன "ஜான் டீரே' இயந்திரங்கள் ரஷிய வீரர்களால் கைப்பற்றப்பட்டன. அந்த 27 இயந்திரங்களையும் 1,100 கி.மீ. தொலைவில் உள்ள செச்சினியாவுக்கு ராட்சத ராணுவ லாரிகளில் ஏற்றிச் சென்றனர் அந்த வீரர்கள்.
அந்த இயந்திரங்கள் ரஷிய வீரர்களால் எடுத்துச் செல்லப்பட்டதை மெலிடோபோல் விற்பனையாளர் ஜான் டீரே நிறுவனத்திடம் தெரிவித்தபோது, அவர்கள் தங்கள் நிறுவனத்தில் இருந்தபடியே "ரிமோட் கன்ட்ரோலில்' அத்தனை இயந்திரங்களையும் செயலிழக்கச் செய்து விட்டனர். ரஷியர்கள் என்னென்னவோ செய்து பார்த்தும் அந்த இயந்திரங்கள் அசைந்து கொடுக்கவில்லை. அதைப் பிரித்து உதிரிபாகங்களாகத்தான் பயன்படுத்த முடியும் என்கிற அதிர்ச்சிகரமான உண்மை அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது.
நவீன தொழில்நுட்பத்தில் தனது தயாரிப்புகளின் செயல்பாட்டைத் தயாரிப்பு நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்கிற அதிர்ச்சிகரமான உண்மைக்கு இது அடுத்த எடுத்துக்காட்டு.
இப்போது இந்தியாவின் இன்றைய பிரச்னைக்கு வருவோம். இன்றைய நிலவரப்படி இந்தியாவில் சுமார் 89.84 கோடி கைப்பேசி பயனாளர்கள் இருக்கிறார்கள். ஏர்டெல், ஜியோ, வோடோஃபோன், பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 123 கோடி. இந்தப் பின்னணியில்தான், கைப்பேசி தயாரிப்பாளர்கள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.
தவணை முறையில் கைப்பேசியை (அறிதிறன்பேசியை) வாங்கிய வாடிக்கையாளர்கள்,தவணைத் தொகையை செலுத்தாவிட்டால் அவர்களது கைப்பேசியை செயலிழக்கச் செய்யும் அதிகாரம் தரப்பட வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை.
கடந்த ஆண்டுவரை, தவணை முறையில் கைப்பேசிகளை வழங்கியவர்கள், அந்தக் கைப்பேசியை செயலிழக்கச் செய்யும் செயலியையும் இணைத்து தந்தனர் என்பது வெளியில் தெரியாத ரகசியம். அதை ரிசர்வ் வங்கி தடை செய்து விட்டது. இப்போது, தயாரிப்பு நிறுவனங்களே நேரிடையாகச் செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பத்துக்கு அனுமதி கோருகின்றன.
குறைந்த வட்டி, சுலபமான தவணைகள் என்றெல்லாம் ஆசை காட்டி கீழ் மத்திய, குறைந்த வருவாய்ப் பிரிவினரைத் தங்கள் வலையில் சிக்க வைத்து விற்பனையை அதிகரிக்க விழையும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் கைப்பேசியில் உள்ள எல்லா தரவுகளுக்கும் உரிமை கொண்டாட முற்படுவது வேடிக்கையாக இருக்கிறது. கடன் வழங்குவது என்பது குடிமையியல் (சிவில்) பிரச்னையே தவிர, குற்றவியல் (கிரைம்) பிரச்னை அல்ல. கடன் திரும்ப அடைக்கப்படவில்லை என்பதற்காக, வாடிக்கையாளர்களின் அனைத்துத் தரவுகளையும் முடக்குவது என்பது தார்மிக ரீதியில் மட்டுமல்ல, சட்ட ரீதியாகவும் ஏற்புடையதல்ல.
வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கைப்பேசி எண்ணைக் கோருவது என்பதே சட்டப்படி தவறானது. வாடிக்கையாளர்களின் எண்ணை சேகரித்து, அதை வர்த்தகப் பகுப்பாய்வு நிறுவனங்களுக்கு (அனலிஸ்ட்) விற்பனை செய்கிறார்கள் என்பது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவதில்லை. விற்பனைச் சீட்டு (பில்) வழங்குவதற்கு வாடிக்கையாளர்களின் கைப்பேசி எண்ணின் தேவை என்ன என்று யாரும் கேள்வி கேட்பதில்லை.
பல உடனடிக் கடன் செயலிகள், கடன் வாங்குவோரின் கைப்பேசி தரவுகளின் உரிமை யாவும் பெறுகிறார்கள். அதிலிருந்து தகவல்களைப் பெற்று மிரட்டுவதும், புகைப்படங்களைத் தவறாக பயன்படுத்துவதும் பல அப்பாவி உயிர்களுக்கு உலை வைத்திருக்கின்றன. இப்போது, கைப்பேசியையே முடக்குவதற்கு அனுமதி கோருகிறார்கள் அதன் தயாரிப்பாளர்கள்.
கைப்பேசி என்பது கருவி மட்டுமல்ல; சிம் கார்டும் அதில் அடங்கும். அது வாடிக்கையாளரின் எண்ம அடையாளம்; சமூகத் தொடர்புகளுக்கான கருவி; வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தரவுகளின் பாதுகாப்புப் பெட்டகம்; தொடர்பு எண்கள், புகைப்படங்கள், தனிப்பட்ட ஆவணங்களின் கட்டுப்பாட்டு அறை; தவணை முறைக் கடனுக்காக அவற்றின் மொத்த உரிமைகளையும் கோர முற்படுவதை ரிசர்வ் வங்கி அனுமதித்தால், அது அறமல்ல, அதர்மம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.