கோப்புப் படம் 
தலையங்கம்

விட்டில் பூச்சிகள்...

வெளிநாட்டில் வேலை, படிப்பு என்று செல்பவர்கள் போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கிக் கொள்வது குறித்து...

ஆசிரியர்

வெளிநாட்டில் வேலை, படிப்பு என்று செல்பவர்கள் போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கிக் கொள்வது, போர்முனைக்கு அனுப்பிவைக்கப்படுவது, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுத்தப்படுவது, கொத்தடிமைபோல வேலை வாங்கப்படுவது போன்றவை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் என்ற இளைஞர் மருத்துவம் படிக்க கடந்த 2021-இல் ரஷியாவுக்குச் சென்றார். படிப்புச் செலவுக்காக கூரியர் நிறுவனத்தில் பகுதி நேர வேலை செய்தபோது வாடிக்கையாளருக்குப் பொருள்களை விநியோகித்ததில் தடை செய்யப்பட்ட பொருள் இருந்ததாக கைது செய்யப்பட்டார். அவரை உக்ரைன் போர்முனைக்குச் செல்ல வற்புறுத்துவதாக அவரது பெற்றோர் கூறுகின்றனர். அவரது நிலை கடந்த மூன்று மாதங்களாக மர்மமாகவே உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், சீகர் பகுதியைச் சேர்ந்த சந்தீப் (23) என்பவர் ரஷிய மொழி கற்பதற்காக மாஸ்கோவுக்குச் சென்றுள்ளார். அவரை அணுகிய தரகர் ஒருவர், ரஷிய ராணுவ வீரர்களுக்கு உணவுப் பொருள் அளிக்கும் பணிக்கு ரூ.1.5 லட்சம் தருவதாக ஆசைகாட்டி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பணியில் இணைத்துள்ளார். அவரது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) வாங்கி வைத்துக் கொண்டுள்ளார். இப்போது அவரது நிலை என்ன என்றே தெரியவில்லை.

இதைப்போல 25-க்கும் மேற்பட்டவர்கள் உக்ரைன் போர்முனைகளில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ரஷியாவுக்காக போர்புரிய உக்ரைனுக்கு அனுப்பப்பட்டவர்களில் கடந்த செப்டம்பருக்குப் பிறகு ஹரியாணாவைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கட்டுமானப் பணிக்கு என்று அழைத்துச் செல்லப்பட்டு போர் முனைக்கு அனுப்பப்படுகிறார்கள்.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2024 ஜூலையில் மாஸ்கோவில் நேரில் சந்தித்தபோது இதுகுறித்து விவாதித்தார். இதையடுத்து, இந்தியர்களை ரஷிய ராணுவப் பணியில் ஈடுபடுத்தமாட்டோம் என்று ரஷிய தூதரகம் அறிவித்தது. ஆனாலும், இந்தப் போக்கு தொடர்கிறது.

ரஷிய ராணுவத்தில் 127 இந்தியர்கள் இருந்ததாகவும், மத்தியஅரசின் தொடர் முயற்சி காரணமாக அவர்களில் 98 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், மற்றவர்கள் மாயமாகி உள்ளதாகவும் மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை சார்பில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.

ரஷியா - உக்ரைன் போர் தொடங்கியபோது, 2022 பிப்ரவரியில் 18,000 மருத்துவ மாணவர்களை உக்ரைனில் இருந்து மத்திய அரசு மீட்டது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மட்டுமல்ல, ஈரான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்தும்கூட இந்தியர்கள் அண்மையில் மீட்கப்பட்டனர்.

இந்தியாவில் தரம் குறைந்த தனியார் மருத்துவக் கல்லூரியில் ரூ.1 கோடி செலவாகிறது என்றால் ஈரானில் ரூ.30 லட்சத்தில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்ய முடிகிறது. அதனால், ஜம்மு - காஷ்மீரில் சராசரியாக 5 குடும்பங்களில் ஒரு குடும்பத்தில் இருந்து ஆணோ, பெண்ணோ ஈரானில் மருத்துவம் பயில்கின்றனர். இந்த நிலையில், ஈரான் மீது கடந்த ஜூனில் இஸ்ரேல் தாக்குதல் தொடுத்ததையடுத்து, "ஆபரேஷன் சிந்து' மூலமாக 3,600 பேரை மத்திய அரசு மீட்டுள்ளது.

கேரளத்தின் மலப்புரத்தைச் சேர்ந்த முகமது கச்சகரேல் என்பவர் தொழிலாளியாக வளைகுடா நாடுகளில் 25 ஆண்டுகள் பணிபுரிந்து சேமித்த ரூ.45 லட்சத்தை ஈரானில் மகளின் மருத்துவப் படிப்புக்காக செலவழித்துள்ளார். இப்போது என்ன நடக்கும் என்று தெரியாமல் வருந்திக் கொண்டிருக்கிறார்.

இஸ்ரேலில் மருத்துவ மேற்படிப்பு மேற்கொண்ட மாணவி ஒருவரை 2023 அக்டோபரில் "ஆபரேஷன் அஜய்' மூலம் மத்திய அரசு மீட்டது. போர் இன்னமும்கூட முடிவடையாத நிலையில் அவர் இஸ்ரேலுக்கு கடந்த 2024 பிப்ரவரியில் மீண்டும் சென்றிருக்கிறார். இதுபோல மேலும் பலர் இருக்கக்கூடும்.இது ஒருபுறமிருக்க, உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டம், ஹாண்டியா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சவூதி

அரேபியாவுக்கு வேலைக்குச் சென்ற தன் கடவுச்சீட்டை வாங்கி வைத்துக் கொண்ட முதலாளி, தனக்கு ஒட்டகம் மேய்க்கும் வேலை வழங்கியதாகவும் ஊருக்குத் திரும்ப நினைத்தால் கொன்று விடுவேன் என்று மிரட்டுவதாகவும் சில நாள்களுக்கு முன் விடியோ வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் மண்ணின் மைந்தர் கோஷம் எழுப்பப்பட்டு வெளிநாட்டவர்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுபோன்ற தாக்குதல்களில் கனடாவில் 16 இந்தியர்களும், அமெரிக்காவில் 9 இந்தியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் கனடாவில் இந்தியர்கள் மீது 27 தாக்குதல் சம்பவங்களும், ரஷியா 15, பிரிட்டன் 12, ஜெர்மனியில் 11 எனத் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

இஸ்ரேல், ஈரான் போன்ற நாடுகளில் பல பத்தாண்டுகளாகவே போர் மேகம் சூழ்ந்தே உள்ளது. மத்திய அரசும் அவ்வப்போது எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், இந்த அறிவிப்புகளை அறியாமலும், அறிந்தால் கண்டுகொள்ளாமலும், உள்ளூர் நிலவரத்தை அறிந்து கொள்ளாமலும் போய் சிக்கிக் கொள்வது அறிவுடைமை ஆகாது.

படிக்க அல்லது பணிக்காக எந்த நாட்டுக்குச் செல்வதாக இருந்தாலும், அங்கு செல்வதற்கு முன் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு உள்ளதா என்பதையும், இடைத்தரகர் நம்பகத்தன்மை உடையவரா என்பதையும் உறுதி செய்து கொண்டு செல்ல வேண்டும். பிரச்னைப் பிரதேசங்களுக்கு வலியப்போய் சிக்கிக் கொள்வதும் அரசு காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறான போக்கு. அதை ஊக்குவிப்பது அதைவிடத் தவறு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாஷீம் பாபா ரௌடி கும்பலை சோ்ந்த இருவா் கைது

கோவில்பட்டி அருகே பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

நாளைய மின்தடை: தேவனூா்புதூா்

ஹமாஸ் ஒப்படைத்த உடல்கள் பிணைக் கைதிகளுடையவை அல்ல: இஸ்ரேல்

மின்சாரம் பாய்ந்து ஊழியா் மரணம்

SCROLL FOR NEXT