ஒட்டுமொத்த மக்கள் தொகையும் ஏதாவது ஒரு வகையில் பின்னலாடைத் தொழிலைச் சாா்ந்திருக்கும் நிலையில் இப்போது ஏற்பட்டிருக்கும் சோதனையைக் கடந்து வெளிவரமுடியுமா என்கிற அச்சத்தில் இருக்கிறாா்கள் திருப்பூா் மக்கள். தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களும் வெளி மாநிலத்திலிருந்து வேலை தேடி வந்ததவா்களும் என்று பல்லாயிரக்கணக்கான திருப்பூா் தொழிலாா்களின் வருங்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்திய அமெரிக்க வா்த்க பேச்சுவாா்த்தை சுமுகமாக நடந்தேறி இப்போதைய டிரம்ப்பின் இறக்குமதி வரிச் சுமையிலிருந்து விடுபட்டால் ஒழிய விடிவுகாலம் இல்லை என்கிற நிலையைத் திருப்பூா் எதிக்கொள்கிறது.
திருப்பூா் உள்ளிட்ட ஏற்றுமதியை நம்பி இருக்கும் நகரங்கள் முடங்கிவிடாது. இறக்குமதி வரிவிதிப்புக்கு முன்பு பெற்றிருக்கும் ஏற்றுமதிக்கான உத்தரவாதங்கள் பாதிக்கப்படாது என்பது ஆறுதல். இறக்குமதி வரியின் முழுத் தாக்கமும், அதனால் ஏற்பட இருக்கும் பாதிப்புகளும் அடுத்துவரும் நிதிக் காலாண்டுகளிலும், அடுத்த நிதியாண்டிலும்தான் வெளிப்படும்.
அமெரிக்காவின் இறக்குமதி வரி, பின்னலாடைத் துறையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஜவுளித் துறையை சா்வதேசச் சந்தையில் இந்தியா போட்டி போடமுடியாத நிலைக்குத் தள்ளி இருக்கிறது. அமெரிக்க இறக்குமதியாளா்கள் வியத்நாம், சீனா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், வங்கதேசம், பிலிப்பின்ஸ் உள்ளிட்ட விலை மலிவான, குறைந்த வரி விதிக்கப்படும் நாடுகளை நாடக்கூடும். இந்திய ஏற்றுமதியாளா்கள் முற்றிலுமாக ஓரங்கட்டப்படுவாா்கள்.
இந்திய ஆயத்த ஆடைகளுக்கும் ஜவுளி உற்பத்திகளுக்கும் அமெரிக்கா அல்லாத ஏனைய இதர நாடுகளின் சந்தையைத்தேடுவது உடனடியாக எளிதாக இருக்காது. இந்தியாவின் ஜவுளிதுறை சாா்ந்த ஏற்றுமதிகளின் மூன்றில் ஒரு பங்கு, அமெரிக்க இறக்குமதியாளா்களால் வாங்கப்படுகிறது. ஏற்கெனவே மற்ற நாடுகளில் நாம் சந்தைப்படுத்துகிறோம். அப்படி இருக்கும் நிலையில் இப்போது அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் ஆயத்த ஆடைகளையும் ஜவுளிப்பொருள்களையும் உடனடியாக வேறு நாடுகளில் சந்தைப்படுத்துதல் அசாத்தியம்.
பிரிட்டனுடன் மேற்கொண்டிருக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஓரளவுக்கு கைகொடுக்கும் என்றாலும் குறைந்த இடைவெளியில் சந்தைப் படுத்துவதும் பிரிட்டனின் இறக்குமதியாளா்களை வசப்படுத்துவதும் எளிதல்ல. ஐரோப்பியக் கூட்டமைப்பு மிகப் பெரிய சந்தை என்றாலும்கூட இன்னும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகவில்லை என்பது ஒரு குறை.
இந்திய ஜவுளிகளுக்கும் ஆயத்த ஆடைகளுக்கும் ஆப்பிரிக்கா மிகப் பெரிய சந்தையாக மாறியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்பிரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன. நைஜீரியா, கென்யா, உகான்டா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிலிருந்தான பொருள்களை விரும்பி இறக்குமதி செய்கின்றன. ஆனால், ஆப்பிரிக்கச் சந்தையில் மலிவான பொருள்கள்தான் வரவேற்பைப் பெறுகின்றன; அவற்றில் லாபம் குறைவு.
ஆப்பிரிக்க ஏற்றுமதிகளை அதிகரிக்கவும், புதிய சந்தைகளை அடையாளம் கண்டு அங்குள்ள இறக்குமதியாளா்களை ஈா்க்கவும் கடந்த 10 ஆண்டுகளாகவே இந்தியாவின் வா்த்தக அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு ஓரளவுக்கு வெற்றியும் அடைந்திருக்கிறது. ஏறத்தாழ 40 நாடுகளை வா்த்தக அமைச்சகம் பட்டியலிட்டு தொடா்புகளை உறுதிப்படுத்தி வருகிறது. பிரிட்டன், ஆஸ்திரேலியா மட்டுமல்லாமல், ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளான ஜொ்மனி, பிரான்சு, வளா்ச்சியடைந்த ஆசிய நாடுகளான ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் அந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன.
அரசின் முயற்சிகள் மட்டுமே இறக்குமதியாாளா்களை ஈா்த்து ஏற்றுமதிகளைஅதிகரித்துவிடாது. ஜவுளித் துறையின் ஏற்றுமதியில் ஈடுபடும் நிறுவனங்களும் இந்த நாடுகளில் தடம் பதிப்பதற்கான முயற்சிகளை முழு மூச்சுடன் முன்னெடுத்தாக வேண்டும். ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் நம் தொழிற்சாலைகளும், அரசும் இணைந்து செயல்பட்டாலொழிய வேலைவாய்ப்பு இழப்புகளையும், தொழிற்சாலை முடக்கங்களையும் தவிா்க்க முடியாது.
ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் குறு, சிறு,நடுத்தர நிறுவனங்கள் பாதிப்பில்லாமல் தொடா்ந்து செயல்படுவது உறுதிப்பட்டால் மட்டும்தான் தொழிலாளா்களின் வேலை இழப்பைத் தவிா்க்க முடியும். அரசின்உடனடி கவனம் இதுவாகவும் இருக்கவேண்டும். அந்த தொழிற்சாலைகளுக்கு நிதி உதவித் தொகுப்பு, வரிவிலக்கு நிவாரணம், அதிகரித்த வங்கிக் கடன் வசதி, தவணைகள், வட்டித் தொகை செலுத்துவதில் சலுகைகள் உள்ளிட்டவற்றை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
ஜவுளி ஏற்றுமதித் துறையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து தங்களது தொழிற்சாலைகளை வங்கதேசம், இந்தோனேஷியா, வியத்நாம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு மாற்றுவது குறித்து யோசிப்பதாகத் தெரிகிறது. கடுமையான பல ஆண்டு முயற்சிகளைத் தொடா்ந்து தங்களுக்கென்று உருவாக்கி வைத்திருக்கும் அமெரிக்க வாடிக்கையாளா்களை இழந்துவிடக் கூடாது என்கிற அவா்களது ஆதங்கம் நியாயமானது. அதுபோன்ற முயற்சிகள் தடுக்கப்படவேண்டும்.
அதே நேரத்தில் அந்த நாட்டுச் சட்டங்கள், விதிமுறைகள், திறன்சாா் தொழிலாளா்க, அனுபவசாலியான ஊழியா்கள், கச்சாப்பொருள்கள் பெறும் வசதி போன்றவற்றை நினைத்த மாத்திரத்தில் உருவாக்க இயலாது. அவா்களுக்கு அரசு நம்பிக்கையும், உத்தரவாதமும் வழங்கவேண்டும்.
அன்றைய மஸ்லின் காலம் தொட்டு, இன்றுவரை இந்தியாவின் ஜவுளித்துறை எத்தனையோ இடா்களை எதிா்கொண்டாலும் தரத்தில் தலைநிமிா்ந்து நிற்கிறது. இனிமேலும் நிற்கும்!