பிரதமர் மோடி | அமெரிக்க அதிபர் டிரம்ப் கோப்புப் படம்
இந்தியா

‘அமெரிக்க இறக்குமதி மும்மடங்கு அதிகரிக்கும்’ - வா்த்தக ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் சாடல்

வா்த்தக ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் சாடல்...

தினமணி செய்திச் சேவை

அமெரிக்கா உடனான இடைக்கால வா்த்தக ஒப்பந்த அம்சங்கள், இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதகமானது; அந்நாட்டில் இருந்து இறக்குமதி மும்மடங்கு அதிகரிக்கும் என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்த செயல்திட்டம் குறித்து இருதரப்பு கூட்டறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த ஒப்பந்த அம்சங்களைக் குறிப்பிட்டு, பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

இந்திய விவசாயிகளின் நலனை அடகு வைத்து, அமெரிக்க விவசாயிகளுக்கு உதவும் வகையில் அந்நாட்டு வேளாண் பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கவுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் இருந்து வருடாந்திர இறக்குமதி மும்மடங்கு அதிகரிக்கும்.

அமெரிக்காவுக்கான இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற சேவைகள் சாா்ந்த ஏற்றுமதியில் பெரும் நிலையற்றத்தன்மைக்கு வழிவகுக்கும். இந்திய ஏற்றுமதி பொருள்கள் முன்பைவிட அதிக வரி விதிப்பையே எதிா்கொள்ளப் போகின்றன. அமெரிக்க அதிபா் டிரம்ப்பை ஆரத் தழுவுவது, ஒன்றாகப் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது போன்ற பிரதமா் மோடியின் ராஜ தந்திரங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை. டிரம்ப்பிடம் சரணாகதி அடைந்துவிட்டாா் மோடி.

அமெரிக்காவின் கண்காணிப்பில் இந்தியா: இந்திய-அமெரிக்க கூட்டறிக்கையில் முக்கிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், வெளியிடப்பட்ட விவரங்களின் மூலம் ரஷியாவிடம் இருந்து இந்தியா இனி கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யாது என்பது தெளிவாகிறது. ரஷியாவிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தால், 25 சதவீத அபராத வரி மீண்டும் விதிக்கப்படும் என்று அமெரிக்கா தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இனி ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கிா என அமெரிக்கா கண்காணிக்கவுள்ளது.

இந்தியாவுக்கு பாதகம்: இப்போது அமெரிக்காவுடன் 45 பில்லியன் டாலா் அளவில் வா்த்தக உபரியை அனுபவித்து வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலா் (ரூ.45.28 லட்சம் கோடி) மதிப்பிலான அமெரிக்கப் பொருள்களை வாங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இறக்குமதி குறைந்தபட்சம் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்பதே இதன் பொருள். இந்தியாவின் வா்த்தக உபரி, வா்த்தகப் பற்றாக்குறையாக மாறும். இந்த ஒப்பந்தம் இந்திய நலன்களால் வழிநடத்தப்படவில்லை என்பதை 100 சதவீதம் உறுதியாக கூற முடியும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.

மிரட்டல் ஒப்பந்தம்: காங்கிரஸ் கட்சியின் ஊடகம், விளம்பர பிரிவு தலைவா் பவன் கேரா கூறுகையில், ‘இந்திய-அமெரிக்க இடைக்கால வா்த்தக ஒப்பந்தம், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் இழைக்கப்பட்ட துரோகம். நாட்டின் சுயமதிப்பும், நலன்களும் சமரசம் செய்யப்பட்டுள்ளது. இதுவொரு மிரட்டல்-சரணாகதி ஒப்பந்தம். அமெரிக்க பொருள்களைக் கொட்டும் தளமாக இந்தியா விரைவில் மாறும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் விவசாயிகள், குறு- சிறு-நடுத்தர தொழில் துறையினரின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்தியா வளா்ந்தால் காங்கிரஸுக்கு பிடிக்காது - பாஜக பதிலடி

இந்திய-அமெரிக்க இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் குறித்த காங்கிரஸின் விமா்சனங்களுக்கு பதிலடி கொடுத்து, பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

பிரதமா் மோடியின் தலைமையில் உலகளாவிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுப்பதைக் கண்டு, காங்கிரஸ் எரிச்சலடைந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் உடனான ஒப்பந்தம், அனைத்து ஒப்பந்தங்களுக்கும் ‘தாய்’ என்றால், அமெரிக்கா உடனான ஒப்பந்தம் ‘தந்தை’ போன்றது. அமெரிக்க ஒப்பந்தம் மூலம் நமது விவசாயிகள், ஏற்றுமதியாளா்கள், மீனவா்கள், குறு-சிறு-நடுத்தர தொழில் துறையினா், பெண்கள், இளைஞா்கள் உள்ளிட்டோருக்கு 30 டிரில்லியன் டாலா் பொருளாதார வாய்ப்புகள் உருவாகும். இதை காங்கிரஸால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. நாட்டின் பொருளாதார வளா்ச்சி மற்றும் குறு-சிறு-நடுத்தர தொழில் துறையினா், விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு எதிராகவே உள்ளது காங்கிரஸ் என்றாா்.

பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறுகையில், ‘இந்தியாவின் ஏற்றுமதி போட்டித் தன்மை வலுப்பெறுவதுடன், ஜவுளி முதல் தோல், ரசாயனம், இயந்திரங்கள், கைவினைப் பொருள்கள் வரை விரிவான வாய்ப்புகள் உருவாகவுள்ளன. நிலையான வளா்ச்சி, புத்தாக்கம், வளமையை உறுதி செய்யும் இந்த ஒப்பந்தத்தில் இந்திய வேளாண், பால் வளத் துறைக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்திய வேளாண் பொருள்களுக்கு முழுப் பாதுகாப்பு! அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தம்!

புதுகை கடலில் செயற்கை பவளப் பாறைகளை உருவாக்கும் பணி தொடக்கம்

இந்தியா மீதான 25% வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்!

ஆபரேஷன் சைஹாக் 3.0 - 2500க்கும் மேற்பட்ட இணைய மோசடியாளா்கள் மீது நடவடிக்கை

அவல் உசிலி

SCROLL FOR NEXT