பஞ்சாப் மாநிலம், சண்டீகரில் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ.) 25-ஆவது தேசிய மாநாட்டில் தோழர் டி.ராஜா மூன்றாவது முறையாகப் பொதுச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 75 வயது என்கிற வரம்பைத் தளர்த்தி அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அரசியல் ரீதியாகப் பல காரணங்கள் இருக்கின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் 75 வயது என்கிற வரம்பு சமீபத்திய நிலைப்பாடுதானே தவிர, முந்தைய பெரும்பாலான பொதுச் செயலர்கள் நீண்ட நாள்கள் பதவியில் இருந்திருக்கிறார்கள். அந்தக் கட்சியின் நூற்றாண்டு வரலாற்றில் கங்காதர் அதிகாரி, பி.டி.ரணதிவே, ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் என மூன்று பொதுச்செயலாளர்கள் மட்டும்தான் இரண்டாண்டுகள் மட்டுமே பதவி வகித்தவர்கள். தோழர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டுக்குப் பிறகு பதவி வகித்த அனைவருமே 70 வயதைக் கடந்து, பல ஆண்டுகள் பதவியில் தொடர்ந்தவர்கள் என்பதால் 75 வயதைக் கடந்து மூன்றாவது முறையாக தோழர் டி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் விமர்சிக்க ஒன்றுமில்லை.
அமிருதசரஸ் (1958), பட்டின்டா (1978), சண்டீகர் (2005) என்று இதற்கு முன்பு மூன்று தடவை சி.பி.ஐ.யின் தேசிய மாநாடு பஞ்சாப் மாநிலத்தில் நடந்திருக்கிறது. அதில் 1978 பட்டின்டா மாநாடு குறிப்பிடத்தக்கது. இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் அவசரநிலைச் சட்டத்தையும் ஆட்சியையும் ஆதரித்த சி.பி.ஐ., கடுமையான விவாதங்களுக்குப் பிறகு பட்டின்டா மாநாட்டில்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. காங்கிரஸுடன் இருந்த கூட்டணிக்கு விடைகொடுத்து இடதுசாரி ஒற்றுமைக்கு குரலெழுப்பத் தொடங்கியது.
ஆயிரக்கணக்கான செஞ்சட்டைத் தொண்டர்களின் அணி வகுப்போடும் 'இன்குலாப் ஜிந்தாபாத்' முழக்கத்தோடும் தொடங்கியது சண்டீகரில் நடந்த 25-ஆவது தேசிய மாநாடு. பகத்சிங்கின் மருமகன் ஜக்மோகன் சிங் தேசியக் கொடியையும், மூத்த உறுப்பினர் பூபிந்தர் சம்பார் கட்சிக் கொடியையும் ஏற்ற, பொதுச்செயலாளர் டி.ராஜாவால் தொடங்கி வைக்கப்பட்டது 25-ஆவது சிபிஐ தேசிய மாநாடு. அதில் ஏனைய இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதிகளாக எம்.ஏ.பேபி (மார்க்சிஸ்ட்), தீபங்கர் பட்டாச்சார்யா (சிபிஐ-எம்.எல்.), ஜி.தேவராஜன் (பார்வர்ட் பிளாக்), மனோஜ் பட்டாச்சார்யா (ஆர்.எஸ்.பி.) உள்ளிட்டோர் கலந்து கொண்டதும், உரையாற்றியதும் தோழர் டி.ராஜாவுக்கு இடதுசாரிக் கட்சிகள் மத்தியில் உள்ள நட்புறவையும் செல்வாக்கையும் வெளிப்படுத்துகிறது.
மாநாட்டில் 11 பேர் கொண்ட தேசிய செயற்குழுவும், 31 பேர் கொண்ட தேசிய நிர்வாகக் குழுவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் மேனாள் மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன் தேசியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எதிர்பார்த்தது போலவே, மூத்த தலைவர்களான அமர்ஜீத் கெளர், நாகேந்திரநாத் ஓஜா, கிரீஷ் சர்மா உள்ளிட்டவர்கள் செயற்குழு உறுப்பினர்களாகி இருக்கிறார்கள்.
'இண்டி' கூட்டணியின் அங்கமாக இருக்கும் நிலையில், சிபிஐயின் தலைமைப் பொறுப்பில் தோழர் டி.ராஜா செயல்படுவதுதான் எதிர்க்கட்சி ஒற்றுமையை வலுப்படுத்தும் என்பதுதான் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம். தோழர் பினோய் விஸ்வம் கேரள அரசியலில் இருந்து விலக விரும்பாததும், அமர்ஜீத் கெளர் விலகினால் ஏஐடியுசி பலவீனமடையும் என்பதும்கூடத் தோழர் ராஜாவின் மூன்றாவதுமுறைத் தேர்வுக்குக் காரணங்களாயின.
சிபிஐயின் 25-ஆவது தேசிய மாநாடு பல முக்கியமான பிரச்னைகளை விவாதித்திருக்கிறது. கட்சியில் மகளிருக்கான பிரதிநிதித்துவம் அதில் முக்கியமானது. மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டுக்காகப் போராடும் சிபிஐ, தனது கட்சி அமைப்புகளில் அவர்களுக்கு இடமளிக்கிறதா என்கிற கேள்வியையும், அவர்களுக்கு அதற்கான தகுதி இல்லை என்று ஒதுக்கப்படுகிறார்கள் என்கிற விமர்சனமும் மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருப்பதை ஏனைய அரசியல் கட்சிகளும் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றன.
கட்சியின் கொள்கை விளக்க வகுப்புப் பாடத் திட்டத்தில் மார்க்சிஸமும், லெனினிஸமும் மட்டுமல்லாமல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு குறித்தும் இடம்பெற வேண்டும் என்கிறது அமைப்பு நிர்வாகம் குறித்த அறிக்கை. தேசிய, மாநில, மாவட்ட அளவில் முறையாகக் கட்சி வகுப்புகள் நடைபெறுவதும், அதில் விடுதலைப் போராட்டப் பங்களிப்பு குறித்துத் தொண்டர்களுக்கு அறிவுறுத்துவதும் அவசியம் என்கிறது அந்தக் குறிப்பு.
காலத்துக்கு ஏற்ப இணையவழி பிரசாரத்துக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பது மாநாடு வலியுறுத்தி இருக்கும் மற்றொரு அறிவுறுத்தல். அடிமட்ட அமைப்புகள்வரை சமூக ஊடகங்களில் ஏனைய அரசியல் கட்சிகளுக்கு நிகராகப் பங்குபெற வேண்டும் என்றும், இணையத்தில் இடதுசாரிகள் இணையாமல் இருப்பது பாட்டாளிவர்க்க விரோதிகளுக்கு இடமளிப்பதாக அமையும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநில, மாவட்டச் செயலாளர்களும் முழுநேர கட்சி ஊழியர்களாக இருக்க வேண்டும் என்றும், அவர்கள் வயது முதிர்வால் ஓய்வு பெறும்போது அவர்களின் பாதுகாப்புக்கு பாதுகாப்பு நிதி ஏற்படுத்த வேண்டும் என்றும்கூட அந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தமிழர் ஒருவர் மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தோழர் டி.ராஜாவுக்கு வாழ்த்துகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.