வாக்களிக்கத் தவறாதீர்கள்!
தமிழ்நாடு இன்று 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்குத் தயாராகிறது.
தமிழ்நாடு இன்று 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்குத் தயாராகிறது. மக்களாட்சி குறைகளே இல்லாத ஆட்சி முறை என்று சொல்லிவிட முடியாதுதான். ஏனைய ஆட்சி முறைகளில் மக்கள் விரோத ஆட்சியாளர்களை அகற்ற மக்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டும். அப்படியெல்லாம் போராடாமல் அமைதியான முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை, மக்களாட்சி முறை நமக்கு அளித்திருக்கிறது என்பதுதான் இதன் சிறப்பு.
நல்ல தலைவர்களை உருவாக்குவதும், தவறானவர்களைத் தேர்ந்தெடுப்பதும் வாக்காளர்களின் கையில்தான் இருக்கிறது. மாற்றி, மாற்றி வாக்களித்து என்ன கிடைத்தது என்று சலிப்படைவது அநாவசியம். தேர்தல் என்பது மத்தால் தயிர் கடைவது போன்றது. கயிறை மாறி, மாறி இழுத்துக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் உள்ளே ஒளிந்துகொண்டிருக்கும் வெண்ணெய் திரண்டு வருவதுபோல, நல்லதொரு தலைமை, நல்லதொரு மாற்றம் நிச்சயம் ஏற்படும். அதற்காகவாவது மக்களாட்சி முறை தோல்வி அடைந்து விடாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எத்தனை தேர்தல்கள் அதற்காகக் காத்திருப்பது என்று சலிப்படைவதும் தவறு. ஒரு வ.உ.சி.யும், மகாகவி பாரதியாரும், சுப்பிரமணிய சிவாவும், வாஞ்சிநாதனும் பட்ட துயரங்களும், சகித்த வேதனைகளும், இந்தியா சுதந்திரம் அடைந்தால் பதவி சுகத்தை அனுபவிப்போம் என்பதற்காகவா? வரும் தலைமுறைகள் நன்றாக இருக்க வேண்டும், சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக. அதேபோல, நாமும் நமது ஜனநாயகக் கடமையை வருங்காலத் தலைமுறைகளின் நலன் கருதி, சுயநலம் பார்க்காமல் செய்ய வேண்டும்.
Advertisement
17-ஆவது சட்டப்பேரவைக்கான தேர்தலில் 4,023 வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்; அவர்களில் 3,580 பேர் ஆண்கள் என்றால், வெறும் 442 பேர் மட்டுமே பெண்கள். மகளிர் இட ஒதுக்கீடு குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கும் அரசியல் கட்சிகள், தங்களது வேட்பாளர்களில் பாதிக்குப் பாதி பெண்களை நாம் தமிழர் கட்சிபோலக் களமிறக்கினால், மகளிர் இட ஒதுக்கீடு என்கிற கேள்விக்கே இடமிருக்காதே...
பெண் வாக்காளர்கள் அதிகம் என்பதால், களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அதிகரித்த மகளிர் உரிமைத் தொகையை மட்டுமல்லாமல், போட்டி போட்டுக் கொண்டு இலவசமாக விலையில்லாப் பொருள்களையும் வாக்குறுதிகளாக்கி அவர்களைக் கவர முன்வந்திருக்கின்றன. ஆனால், திமுக 18 (10.22%), அதிமுக 17 (10.05%), தவெக 23 (9.82%), பாஜக 4 (14.8%), காங்கிரஸ் 2 (7.4%) பெண்களை மட்டுமே களமிறக்கி இருப்பதில் இருந்து இந்தக் கட்சிகளுக்கு மகளிர் மேம்பாட்டில் உள்ள அக்கறை எத்தகையது என்பது விளங்கும்.
தேர்ந்தெடுத்து ஆட்சி அமைக்கும் கட்சியின் அடிப்படைக் கடமை சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பது. 4,023 வேட்பாளர்களில் 3,992 பேரின் வேட்பு மனுக்களை பரிசோதித்தபோது 772 பேர் மீது (18%) குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன; அவர்களில் 404 பேர் மீது (10%) கடுமையான குற்ற வழக்குகள் இருக்கின்றன. இவர்களில் சிலர் சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும், அமைச்சர்
களாகவும் உயரப் போகிறார்கள். எத்தகைய ஜனநாயக முரண்? வாக்காளர்களில் 2,80,30,658 பேர் ஆண்கள் என்றால், 2,93,04,905 பேர் பெண்கள்; இவர்களில் சுமார் 14 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள்.
தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் 5,73,43,291. கடந்த 2021 தேர்தலைவிட சுமார் 55 லட்சம் வாக்காளர்கள் குறைந்திருப்பதற்குக் காரணம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.
இறந்தவர்கள், இடம் மாறிப் போனவர்கள் அகற்றப்பட்டிருப்பதால், கள்ள வாக்குகளின் எண்ணிக்கை குறையும்.
75,064 வாக்குச் சாவடிகளில் 1,06,418 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. அவற்றில் வாக்குச்சாவடிக்கு ஒன்றுவீதம் இயந்திரத்தில் வாக்குப்பதிவை உறுதி செய்யும் விவிபாட் கருவி இணைக்கப்படுகிறது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், ஜனநாயகத்துக்கு இந்தியா அளித்திருக்கும் கொடை. அதை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, வாக்குச் சீட்டுகளில் நடைபெற்ற முறைகேடுகளும், வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்படுவதும் வாடிக்கையாகவே இருந்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
1952-இல் நடைபெற்ற முதலாவது சட்டப்பேரவைத் தேர்தலில் 25% வேட்பாளர்கள் எழுத-படிக்கத் தெரியாதவர்கள் என்றால், இப்போது களத்தில் இருக்கும் போட்டியாளர்களில் எழுத-படிக்கத் தெரியாதவர்கள் 95 பேர் மட்டுமே. கல்வி வளர்ச்சியில் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்பதற்கு இது அத்தாட்சி.
"ஐந்து ஆண்டுகளில் காவிரிப் பிரச்னை தீரவில்லை; முல்லைப் பெரியாறு பிரச்னை தீரவில்லை; மின்வெட்டு தொடர்கிறது; நெசவாளர்கள் நலிந்துபோய்க் கிடக்கிறார்கள்; மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகிறது; சிறு தொழில்கள் பெருகவில்லை; விவசாயிகளின் நிலை அதைவிடப் பரிதாபம்'' என்று 2011 தேர்தலின்போது எழுதப்பட்ட ஆசிரியர் உரைப் பதிவு, மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குப் பிறகும் அப்படியே தொடர்கிறது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறோம்.
சிறு தேங்காய் துண்டைத் திருடும் எலியை விஷம் வைத்துப் பிடிக்கக் கற்றுத் தந்த அறிவு, கோடிக்கணக்கில் மக்கள் வரிப் பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிக்கு வாக்களிக்கக் கூடாது என்கிற அறிவை ஏனோ கற்றுத்தரவில்லை. பணம்தான் வெற்றி- தோல்விகளைத் தீர்மானிக்கும் என்று சொன்னால், பிறகு மக்களாட்சி இருந்தால் என்ன, இல்லாமல் போனால்தான் என்ன?
மக்களாட்சி முறை வாக்குரிமை மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை வாக்காளர்களுக்கு வழங்குகிறது; அதனால் வாக்களிக்கத் தவறாதீர்கள்!