FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

சொல்லப் போனால்... இலக்கு எட்டப்பட்டு விட்டது?

தோல்வியுறும் என்று தெரிந்தே மக்களவையில் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை - மகளிர் இடஒதுக்கீடு சட்டத் திருத்த முன்வரைவு பற்றி...

Updated On : 19 ஏப்ரல் 2026, 8:15 am IST
வெற்றிக்காகத் தோல்வி? - சித்திரிப்பு / விஜய்
பகிர்:

அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்வதற்கான சட்ட முன்வரைவுகளை நிறைவேற்ற மக்களவையிலும், அடுத்து, மாநிலங்களவையிலும் வந்திருக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கினர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். பின்னர், இவற்றுக்கு நாட்டிலுள்ள மாநிலங்களில் (சட்டப்பேரவைகளில்)  பாதியேனும் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும் (தற்போதைய நிலவரப்படி குறைந்தபட்சம் 14 மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; இதற்குக் காலக்கெடு எதுவும் கிடையாது, மாநில அரசுகள் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம், நிறுத்தியும் வைக்கலாம்!). அதன் பின்னரே இறுதி ஒப்புதலுக்காகக் குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கப்படும்; சட்டமாகி அரசிதழில் வெளியிடப்படும்.

ஆக, நிச்சயம் நிறைவேற்ற முடியாது; அரிதிலும் அரிதென நன்றாகத் தெரிந்தே நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்து உறுப்பினர்களையும் வரவழைத்து, விவாதித்து வாக்கெடுப்பும் நடத்திய பின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற முடியாததால் அரசியல் சாசன (131-வது) திருத்த சட்ட முன்வரைவு தோல்வியுற்றது.

ஆதரவாக 298 எம்.பி.க்கள் வாக்களித்தாலும் (எதிர்த்து 230) இந்தச் சட்டமுன்வரைவு நிறைவேற வேண்டுமானால், மக்களவையில் இருந்த 528 உறுப்பினர்களில் 352 பேர் ஆதரித்து வாக்களித்திருக்க வேண்டும் (மொத்தம் 543 இடங்களில் 3 காலி).

Advertisement

Advertisement

543 ஆக இருக்கும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துகிற அளவிலான இத்தனை பெரிய மாற்றத்தை முன்னெடுக்கும்போது, அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய முற்படும்போது, முன்னதாக விவாதத்துக்கு விட்டிருக்க வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டிப் பேசியிருக்கலாம். கட்சிகளின் ஒருமித்த கருத்தை அறிந்த பிறகு அடுத்த கட்டத்துக்கு எளிதில் நகர்ந்திருக்கலாம்.

ஆனால், தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்துகொண்டிருக்கும் வேளையில் அதிரடியாக திடீரென மக்களவையைக் கூட்டி, விவாதிக்க வேண்டிய உறுப்பினர்களுக்கே முந்தைய நாள் வரை வரைவுப் பிரதி கிடைக்காத நிலையில், சட்ட முன்வரைவை நிறைவேற்ற முயன்ற அரசின் முயற்சி தோல்வியுற்றிருப்பது நியாயமாக அரசு செய்யத் தவறியவற்றை எல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறது.

மக்களவையில் விவாதத்தின் மீது பேசும்போது, தென் மாநிலங்கள் பாதிக்கப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடியோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ, அல்லது வேறு யாரொருவரும் குறிப்பிடுவதிலெல்லாம் எவ்வித பொருளுமில்லை; (ஆட்சி மொழி விஷயத்தில் பிரதமர் ஜவாஹர்லால் நேரு கொடுத்த வாக்குறுதி படுகிற பாடு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்). ஏனெனில், கருப்பு – வெள்ளையில், எழுத்துகளில், முன்வரைவில் அத்தகைய உத்தரவாதங்கள் எதுவுமில்லை.

கடைசியாக எடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்புப்படி என்றால், அதாவது 2011 ஆண்டு கணக்கெடுப்பின்படி, தொகுதி மறுவரையறையில் தெற்கு, கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் நிச்சயம் பாதிக்கப்படவே செய்யும் என்ற நிலையில் தென் மாநிலங்களின் அச்சம் கவனத்துக்குரியவையே. சட்ட முன்வரைவிலேயே இதுதொடர்பான மிகத் தெளிவான உத்தரவாதங்கள் அளிக்கப்படாத வரையில் எதையும், யாரையும், அவர்களுடைய நோக்கத்தையும் நம்ப முடியாது.

குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டங்களை யாரெல்லாம் பின்பற்றினார்களோ, நடைமுறைப்படுத்தினார்களோ அவர்கள் அனைவரும், அத்தனை மாநிலங்களும் ஏமாளிகளாக, இரண்டாந்தர மாநிலங்களாகிவிடுவார்கள் என்பதுதான் இவர்கள் முன்வைத்த அச்சம்.

தவிர, மகளிர் இட ஒதுக்கீட்டையும் சட்டத் திருத்த முன்வரைவையும் தொகுதி மறுவரையறையையும் எதற்காகத் தொடர்புபடுத்த வேண்டும்? ஏனெனில், மகளிர் இடஒதுக்கீட்டைப் பொருத்தவரையில் ஏற்கெனவே, 2023 ஆம் ஆண்டிலேயே அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து, ஒருமனதாக (அப்போது ஆதரவு – 454, எதிர்ப்பு - 2) சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. உள்ளபடியே, இந்த சட்டத்தைக் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசிதழில் ஏன் வெளியிடாமல் வைத்திருந்தார்கள் (வெளியிடாத வரை நடைமுறைக்கு வராது) என்று தெரியவில்லை. இந்தத் திருத்த முன்வரைவைக் கொண்டுவரும் வேளையில்தான் இரவோடிரவாக (ஏப். 16-ல்) அரசிதழில் வெளியிடப்பட்டது.

இப்போது மக்களவையில் கொண்டுவரப்பட்டது, தொகுதி மறுவரையறை முன்வரைவுடன் தொடர்புபடுத்தும் மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்துக்கான  திருத்தம்தான். இப்போதும் மகளிர் இட ஒதுக்கீடு மட்டும்தான் லட்சியம் என்றால், ஏற்கெனவே சட்டம் இருக்கிறது. தனியே உடனடியாக அதைச் செயல்படுத்திவிட முடியும். எதிர்வரும் தேர்தல்களிலேயே ஒதுக்கீட்டையும் செய்ய முடியும்; மறுவரையறைக்காகவோ, மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காகவோ காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. சுருக்கமாகச் சொன்னால், 543-ல் மூன்றிலொரு பங்கைக் கணக்கிட என்ன விவாதமும் கால்குலேட்டரும் தேவைப்படப் போகிறது?

பின்னர் எதற்காக சிறப்புக் கூட்டம்? விவாதம்? எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு? முன்வரைவு தோல்வி? மக்களைக் குழப்புவதற்காகவும் எதிர்க்கட்சிகளைப் பிரித்துவிட்டு விளையாட்டுக் காட்டவுமாகவும் இருக்கலாம். நிறைவேறினால் நினைத்தவாறு தொகுதிகளைப் பிரிக்கலாம்; நிறைவேறாவிட்டால் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன என்று பிரசாரம் செய்யலாம் என்று ஆளுந்தரப்பில் நினைத்திருக்கலாமோ?

அல்லது தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் உணர்ச்சிவசப்பட்டு வெளிநடப்புச் செய்வார்கள்; தொடர்ந்து அவையில் இருப்பவர்களை வைத்து நிறைவேற்றிவிட முடியும் என்று நினைத்திருப்பார்களா? அல்லது எதிர்க்கட்சிகளிடையே இருக்கும் உரசல்களை - திமுக – காங்கிரஸ், திமுக – திரிணாமுல், காங்கிரஸ் – ஆர்ஜேடி, காங்கிரஸ் – கம்யூ., - பயன்படுத்திக் கொண்டுவிட முடியும் என்று நினைத்திருப்பார்களா? தெரியவில்லை.

எதற்காகத்தான் இந்த சட்ட முன்வரைவை இந்த நேரத்தில், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிற நேரத்தில், அவசரம் அவசரமாக எவ்வித முன்தயாரிப்புமின்றிக் கொண்டுவர வேண்டும்? கோடி ரூபாய்க் கேள்வி!

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பின் இவ்வாறு ஒரு சட்ட முன்வரைவு கொண்டுவரப்பட்டுத் தோல்வியுறுவது இதுவே முதல் முறை. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகத் தெளிவாக, முன்வரைவு நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்றிருக்கும்போது, தோல்வியுறும் என்று தெரிந்தே சட்டமுன்வரைவைக் கொண்டுவர வேண்டிய நோக்கம் என்ன?

மகளிர் இட ஒதுக்கீட்டில் அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் உண்மையான அக்கறை இருப்பதாகக் கொண்டால் அவர்களே தாமாக முன்வந்து பெண்களுக்கு 33 சதவிகிதம் ஒதுக்கிவிடலாம். யாரையும் எதிர்பார்த்திருக்கவோ, சட்டம் போட்டுச் சொல்ல வேண்டும் என்று காத்திருக்கவோ வேண்டியதில்லை.

உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களுக்குக் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும்தான். ஆனாலும், இது பிற மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று அகிலேஷ் யாதவ் போன்றோர் மட்டுமல்ல, மேலும் பலரும் எதிர்த்திருக்கின்றனர். நாட்டைத் துண்டுகளாக்கிவிடும் என்றிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.

பல்வேறு  மாநிலங்களில் பேரவைத் தேர்தல் பிரசாரம் நடந்துகொண்டிருக்கும் வேளையில் அரசியல் லாபம் பெறும் நோக்கிலேயே மோடி அரசு இவ்வாறு நடந்துகொண்டுள்ளது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டிருக்கிறார்.

மக்களவையில் பேசிய ராகுல் காந்தியோ, 16 என்றொரு எண்ணைப் பற்றிப் புதிர்போட்டுப் பிரபலப்படுத்திச் சென்றிருக்கிறார். எதற்காகச் சொன்னார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், அவர் சொன்னவுடன் தொடங்கி சமூக ஊடகங்களில் ஏராளமான பதினாறுகளைப் பற்றிய ஊகங்கள், கிசுகிசுக்களும் பரவிக்கொண்டிருக்கின்றன.

“சட்ட முன்வரைவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், இவர்கள் நினைத்தால், நினைத்த நேரத்தில், நினைத்த முறையில், எப்போது வேண்டுமானாலும் எதிர்காலத்தில் இவர்களுக்குச் சாதகமான வகையில், இந்திய மாநிலங்களின் தொகுதியளவை மாற்றியமைத்துக் கொள்வதற்கான வழிவகைகள் இந்தக் கருப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. பெரும் சூழ்ச்சியை உள்ளடக்கியதாக இந்தச் சட்ட முன்வரைவு இருக்கிறது.

“ஏற்கெனவே இரு வேறு சந்தர்ப்பங்களில் இந்திரா காந்தியும் வாஜபேயியும் பிரதமர்களாக இருந்த காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் செய்து, மேலும் 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுசீரமைப்பை நிறுத்திவைத்ததைப் போன்ற சட்டப் பாதுகாப்பு தேவை” என்று இவ்விஷயத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீட்டை 1989-லேயே நடைமுறைப்படுத்தியது மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. பின்னர், இது 40 சதவிகிதமாகவும்  உயர்த்தப்பட்டது.

இன்றைக்கும் 50 சதவிகித இட ஒதுக்கீட்டுடன் தேர்தல்களில் வெற்றி பெற்று உள்ளாட்சிகளில் பங்கேற்று முனைப்பாகப் பெண்கள் செயல்படுகின்றனர். இந்திய மாநிலங்களில் கல்வி, வேலைவாய்ப்புகள், உழைக்கும் மகளிர் எனப் பல துறைகளிலும் தமிழ்நாட்டுப் பெண்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்ட முன்வரைவு தோல்வி என்று குறிப்பிடுவது எந்த வகையில் நியாயம்? மகளிர் இட ஒதுக்கீட்டுத் திரைக்குப் பின் தொகுதி மறுவரையறை இடம் பெற்றிருப்பதால்தான் கூட்டத்துக்கு முந்தைய நாள் வரையிலும்கூட இந்த வரைவின் பிரதிகள் உறுப்பினர்களுக்குப் பகிரவில்லை போல என்கிறார்கள் பலரும்.

ஆனால், இந்த முன்வரைவின் விளைவாகப் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருக்கின்றன; எதிர்த்திருக்கின்றன. உள்ளபடியே, மாநில எல்லைகளைக் கடந்து, கருத்து வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சியினரைத்தான் மீண்டும் ஒரு முறை இந்தச் சட்டத் திருத்த முன்வரைவு ஒன்றுசேர்த்திருக்கிறது எனலாம்.

எனினும், “மகளிர் இட ஒதுக்கீட்டுத் திருத்த முன்வரைவை நிறைவேற்றாததன் மூலம் வரலாற்றில் இடம் பெற்றிருக்க வேண்டிய வாய்ப்பை இவர்கள் இழந்துவிட்டார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

“மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் சட்டத் திருத்த முன்வரைவுக்கு ஆதரவு அளிக்காமல் எதிர்க்கட்சிகள் தோல்வியுறச் செய்யலாம். ஆனால், தங்களுக்கு வழங்கப்படவுள்ள இட ஒதுக்கீட்டுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் யார் என்று பெண்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்” என்று மக்களவையில் குறிப்பிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பெண்களை அவமதிக்கும் இந்தச் செயலை வெற்றி என நினைத்து அவர்கள் கொண்டாடுகிறார்கள். 2029 மக்களவைத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் இவர்களுக்கு உரிய பாடத்தைப் புகட்டுவார்கள்”  என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

மக்களவையில் நீண்ட விவாதத்துக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்குதான் திருத்த முன்வரைவு வாக்கெடுப்புக்கு விடப்பட்டுத் தோல்வியுற்றது. ஆனால், சனிக்கிழமை காலை நாளிதழ்களிலேயே சுடச்சுட, ‘பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க பிரதமர் மோடி தீர்மானமாக விரும்பினார். அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்தார். நீதிக்கு உத்தரவாதம் அளித்தார். ஆனால், காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான மனப்போக்கை வெளிப்படுத்தியது... இந்தியாவில் உள்ள பெண்கள் கேட்பார்கள், காங்கிரஸ் ஏன் பெண்களுக்கு எதிராக உள்ளது என’ என்ற வரிகளுடன் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார விளம்பரங்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேசிய ஜனநாயக்க் கூட்டணி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த சாதாரண பெண்கள் சட்டப்பேரவைகளுக்கும் நாடாளுமன்றத்துக்கும் வர வேண்டும் என்பதற்காக நான் எடுத்த உயர்வான முயற்சி தோல்வியுற்றுவிட்டது; திமுக – காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் வெறுப்பு அரசியல், மலிவான அரசியலுக்கு இரையாகிவிட்டார்கள்” என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

தொடர்ந்து, இரவு 8.30-க்குத் தொலைக்காட்சியில் அவர் ஆற்றிய உரையில், “நம்முடைய பெண்களின் கனவுகள் எவ்வாறு சிதைக்கப்படுகின்றன என்று குடிமக்கள் ஒவ்வொருவரும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டிலுள்ள பெண்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்தியப் பெண்களை வலுப்படுத்தும் போராட்டம் எதிர்க்கட்சிகளின் சுயநல அரசியலால்  தடுக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய பெண்கள் சக்திக்கு எதிராக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் கொண்டாடுவதை இந்தியப் பெண்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்…  என்று அரை மணி நேர நீண்ட  உரையாற்றியிருக்கிறார்!

அனேகமாக, இலக்கு எட்டப்பட்டுவிட்டது?

summary

Regarding the politics behind the Women's Quota and Delimitation bills tabled in the Lok Sabha knowing that it would fail...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments