முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

இலக்கை எட்டுகிறது மகளிர் இடஒதுக்கீடு!

மகளிருக்கு சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் இடஒதுக்கீடு வழங்குவதற்கான போராட்டம் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 4:59 AM
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 4:21 AM

மகளிருக்கு சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் இடஒதுக்கீடு வழங்குவதற்கான போராட்டம் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பை தொகுதி மறுசீரமைப்புடன் தொடர்புபடுத்தாமல் 2029-ஆம் ஆண்டுமுதல் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதை, எதிர்க்கட்சிகள் வரவேற்று ஒருமனதாக மசோதா நிறைவேற வழிகோல வேண்டும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு முடிவுறும் வரை காத்திருக்க வேண்டும் என்று இன்னொரு புதிய கோரிக்கை எழுப்புவது ஏன் என்று தெரியவில்லை. மகளிர் இடஒதுக்கீட்டை கொண்டுவர சிலர் சொல்வது போல 2034-ஆம் ஆண்டு வரை ஏன் காத்திருக்க வேண்டும்?

Advertisement

1987-88-ஆம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு ஒதுக்கீடு எனத் தொடங்கி, 1992-ஆம் ஆண்டில் 73, 74-ஆவது அரசமைப்புத் திருத்தங்கள் மூலம் கிராம ஊராட்சி, நகராட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது. 21 மாநிலங்களில் 50 சதவீதம் என்ற நிலைகூட அமலில் இருக்கிறது.

இந்தியாவின் பிரதமராக இருந்த தேவெ கெளடா தலைமையிலான மத்திய அரசு முதன்முதலில் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்தது. ஆனால், அது தோல்வி அடைந்தது. 2010-ஆம் ஆண்டில் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் மாநிலங்களவையில் மசோதா நிறைவேறினாலும் மக்களவையில் நிறைவேற்றப்படாமல் காலாவதியானது.

இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நீண்டகாலப் போராட்டங்களுக்குப் பிறகு, 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அரசால் கொண்டு வரப்பட்டு "நாரி சக்தி வந்தன் அதினியம்' மசோதா மக்களவையில் 454 வாக்குகளுடன் நிறைவேறியது; அடுத்த நாள் மாநிலங்களவையிலும் ஒருமனதாக நிறைவேறியது.

பெண்களுக்கு வாக்குரிமையை 1920-ஆம் ஆண்டிலேயே வழங்கியது இந்தியா. அப்படி இருந்தும் அதிக அளவில் சட்டப்பேரவைகள், மக்களவைக்கு மகளிர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 1951 முதல் இன்று வரையில் நமது மாநிலங்களவையில் மகளிரின் எண்ணிக்கை 13% அளவைக் கடக்கவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். 1951-இல் வெறும் 5% -ஆக இருந்த மக்களவையில் மகளிர் பங்கு, 1970 வரை அதிகரிக்கவில்லை. 2009-க்குப் பிறகுதான் இரட்டை இலக்க சதவீதத்தை எட்டிப் பார்த்தது.

2019-இல் அமைந்த மக்களவையில்தான் அதிகபட்சமாக மகளிரின் எண்ணிக்கை 15% அளவை எட்டியது. 2014-இல் மாநிலங்களவையில் இருந்த 12.7% தான் மிக அதிகமான மகளிரின் பங்கு. மாநில சட்டப்பேரவைகளில் மகளிரின் எண்ணிக்கை என்பது சராசரியாக 10% மட்டுமே. பெரும்பாலான மாநிலங்களில் இதைவிடக் குறைவு என்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்யத் தோன்றுகிறது.

மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்போது, ஆரம்பத்தில் அரசியல்வாதிகளின் மனைவி, மகள், மருமகள், உறவினர் என்று சில பெண்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்புப் பெறுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் மகளிர் தங்கள் உரிமையை நிலைநாட்ட முன்வருவார்கள் என்பதையும், ஆணாதிக்கம் ஓரங்கட்டப்படும் என்பதையும் உள்ளாட்சி, நகராட்சிகளில் வழங்கப்படும் சில ஒதுக்கீடு நிரூபித்திருக்கிறது.

மகளிருக்கான ஒதுக்கீடு என்பது இன்று தவிர்க்க முடியாததாகி விட்டது. தேர்தல் வெற்றி-தோல்விகளை நிர்ணயிக்கும் சக்திகளாக பெண்கள் உயர்ந்திருக்கிறார்கள்.

அதனால்தான், பிகாரில் பூரண மதுவிலக்கை நிதீஷ் குமார் நடைமுறைப்படுத்தியபோது, அவருக்கான பேராதரவு பெருகியது. பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்குக்கு அவரது கழிப்பறைக் கட்டும் திட்டமும், இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டமும் முக்கியக் காரணங்கள் என்பதை நாடறியும்.

தமிழகம், கர்நாடகத்தில் தொடங்கி இன்று எல்லா மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் மகளிர் உரிமைத் தொகையும், பெண்களுக்கு இலவசப் பேருந்தும் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கின்றன. அப்படியிருக்கும்போது, மகளிர் தங்களது கோரிக்கைகளை சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் எழுப்ப வழி செய்து கொடுப்பதுதான் ஜனநாயகத்தின் மாண்பாக இருக்கும்.

மகளிர் இட ஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மற்றும் மகளிருக்கான இடங்களை ஒதுக்கீடு செய்ய ஏதுவாக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850-ஆக அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதாவை கொண்டுவந்து நிறைவேற்ற சிறப்பு அமர்வாக நாடாளுமன்றம் கூடியுள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் பெண்களின் பங்கை அதிகரிக்க ஒரு புரட்சிகரமான நடவடிக்கை இந்தச் சட்டம்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மற்றும் பட்டியலின பழங்குடியினப் பெண்களுக்கு அதில் உள் ஒதுக்கீடு வழங்கப்பட இருக்கிறது. மக்கள்தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களை அரசியல் அதிகாரத்தில், அதுவும் சட்டம் இயற்றும் மன்றங்களில் அமர்த்த வழிவகுத்திருப்பது நமது ஜனநாயகத்தின் முதிர்ச்சி என்று ஒவ்வோர் இந்தியக் குடிமகனும் பெருமையோடு கூறிக்கொள்ள முடியும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போதுள்ள மக்களவைத் தொகுதிகளில் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் 50 சதவீதம் அதிகரிக்கப்படும் என்ற நிலையில், தொகுதி மறுசீரமைப்பின்மூலம் மக்களவைத் தொகுதிகள் பறிபோகும் என்கிற பரப்புரை தவறானது; விஷமத்தனமானது. மகளிருக்கான இடஒதுக்கீட்டில் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்களே தவிர, உண்மையான அக்கறை அவர்களுக்கு இல்லாமல் இருப்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது.

மக்களவை மற்றும் மாநில பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்புச் சட்ட திருத்தம் 2023-ஐ (நாரி சக்தி வந்தன் அதினியம்) அமல்படுத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் இன்று நிறைவேற இருக்கிறது. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டத்தை 2029-ஆம் ஆண்டே அமல்

படுத்த வேண்டும் என்று, கோரிக்கை வைத்த எதிர்க்கட்சிகள், இப்போது அதை ஏற்று நடைமுறைப்படுத்த முனையும்போது, எதிர்க்க முனைகின்றன.

மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுவதற்கும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா அமல்படுத்த நடைபெறவிருக்கும் மக்களவை சிறப்பு அமர்வுக்கும் தொடர்பு ஏற்படுத்துவது அநாவசியமான குற்றச்சாட்டு. இந்தியாவில் ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்

காக எந்தவொரு வளர்ச்சிக்கான திட்டத்தையும் முன்னெடுக்கக் கூடாது, மசோதாக்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்றக் கூடாது என்பது நியாயம் அல்ல.

தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில், தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு மக்களவையில் பிரதிநிதித்துவம் குறையும் என்று கூறப்படுவது முற்றிலும் தவறான பரப்புரை. ஐந்து தென் மாநிலங்களில் தற்போதுள்ள 129 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 195-ஆக உயரும்.

தற்போதைய 23.76%-இல் இருந்து 23.87%-ஆக அதிகரிக்கும். தமிழகத்தில் 39-இல் இருந்து 59-ஆக உயரப் போகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் எந்தவித வேறுபாடுமின்றி இப்போது இருக்கும் இடங்கள் 50% அதிகரிக்கப்படும்போது அதில் ஓரவஞ்சனை எங்கிருந்து வருகிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்து, ஆணையம் அமைக்கப்பட்டு, தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறை

வேற்றி, அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே தொகுதி மறுசீரமைப்பு முன்னெடுக்கப்பட்டு அமலுக்கு வரும். அந்த மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையும், மாநில சட்டப்பேரவைகளின் ஒப்புதலும் வேண்டும்.2029 தேர்தலுக்கு முன்னால் அது நடைபெறுவதற்கு சாத்தியமே இல்லை.

இப்போது இருக்கும் அடிப்படையில்தான் 2029 தேர்தல் நடைபெறப் போகிறது. இப்போதே பாதிப்பு ஏற்படும் என்று அச்சத்தை எழுப்புவதும், அதனடிப்படையில் எதிர்ப்பதும் அரசியலாக்கும் முயற்சி மட்டுமல்ல, மகளிருக்குச் செய்யும் வஞ்சனையும்கூட.

மக்கள்தொகையில் மட்டுமல்லாமல், ஆணுக்குப் பெண் சரிநிகர் பெறும்போது, நியாயமாக சட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும் சரிபாதி இடங்களைப் பெறும் உரிமை மகளிருக்கு உண்டு.

இப்போதைக்கு 33% தொடக்கம் மட்டுமே. அதை தாமதம் இல்லாமல் நடைமுறைப்படுத்த வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தை ஆதரிக்க வேண்டியவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புவது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பையும் தொகுதி மறுசீரமைப்பையும் மகளிர் இடஒதுக்கீட்டுடன் ஒப்பிடுவது முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போடும் பேதைமை என்று எதிர்ப்பாளர்கள் உணர வேண்டும். எதிர்ப்பில்லாமல் ஒருமனதாக சட்டம் நிறைவேற வாக்களித்து மகளிருக்கான தங்களது ஆதரவைப் பதிவு செய்ய வேண்டும்.

கட்டுரையாளர்:

துணைத் தலைவர்,

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.