வங்கதேசத்தில் நடைபெற்ற 13-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்தது போலவே முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) அமோக வெற்றி பெற்றிருக்கிறது. மொத்தம் உள்ள 300 தொகுதிகளில் பிஎன்பி தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றியதன் மூலம் அடுத்த பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்க இருப்பதும் உறுதியாகியுள்ளது.
இந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், பிஎன்பி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-ஏ-இஸ்லாமி இடையே நேரடிப் போட்டி நிலவியது. ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சி சுமார் 68 தொகுதிகளில் வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.
தலைநகர் டாக்காவில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் பிஎன்பி வென்றதிலிருந்து அதன் செல்வாக்கை அறிந்துகொள்ள முடியும்.கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாணவர் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன்பிறகு, முகமது யூனுஸின் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. தாமதமானாலும் பொதுத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
வங்கதேச அரசியலில் தாரிக் ரஹ்மானின் திடீர் எழுச்சி எதிர்பாராத ஒன்று. 2007-இல் ராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசின் பதவிக் காலத்தில் தன் மீதான ஊழல் வழக்குகளைத் தொடர்ந்து 2008-இல் நாட்டைவிட்டு வெளியேறி, லண்டனில் வாழ்ந்து வந்தார் அவர். ஹசீனா ஆட்சிக் காலத்திலும் அவர் மீது பல்வேறு ஊழல் மற்றும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஹசீனா ஆட்சி முடிவுக்கு வந்தது, தனது தாயார் கலீதா ஜியா மறைவு ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து கடந்த டிசம்பரில் நாடு திரும்பினார் தாரிக் ரஹ்மான்.
சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் வந்த அவருக்கு கிடைத்த உற்சாக வரவேற்பு அவரே எதிர்பாராதது. கலீதா ஜியா மறைந்து, ஹசீனாவும் நாட்டைவிட்டு வெளியேறிய சூழலில்,தாரிக் ரஹ்மானின் வருகை அரசியல் களத்தைப் புரட்டிப்போட்டது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அவர் மீதான பழைய வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்தது. தாரிக் ரஹ்மான் தலைமையில் தேர்தலை சந்தித்தது பிஎன்பி. வங்கதேசத்தின் இருபெரும் அரசியல் ஆளுமைகளான கலீதா ஜியா, ஷேக் ஹசீனா இடையிலான அரசியல் போட்டி "பேகங்களின் போட்டி' என அழைக்கப்பட்டது. 1991-ஆம் ஆண்டு முதல் கலீதா ஜியாவும், ஷேக் ஹசீனாவும் மாறி மாறி பிரதமர்பதவியை வகித்தனர். கலீதா ஜியா ஆட்சியில் பொருளாதார சீர்திருத்தம், உள்கட்டமைப்பு விரிவாக்கம் என்றால், ஷேக் ஹசீனா ஆட்சியில் பெண் கல்வி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு முன்னுரிமைப் பெற்றன. கடைசியாக 2001-இல் பிஎன்பி ஆட்சி அமைத்த நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிஎன்பியை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த இருக்கிறார் தாரிக் ரஹ்மான்.
இரு பெண் ஆளுமைகளின் காலத்துக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கான முக்கியத்துவம் குறைந்துள்ளது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் போட்டியிட்ட 1,981 வேட்பாளர்களில் 76 பேர்தான் பெண்கள். இது 4 சதவீதத்துக்கும் குறைவு.
ஆட்சியைப் பிடித்துள்ள பிஎன்பி 10 பெண்களுக்கே போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி ஒரு பெண் வேட்பாளரைக்கூட நிறுத்தவில்லை.
யூனுஸின் இடைக்கால அரசில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. ஹசீனாவுக்கு அடைக்கலம் அளித்துள்ளதைக் காரணம்காட்டி இந்தியாவுடனான உறவை இடைக்கால அரசு உரசிப் பார்க்கும் நிகழ்வும் தொடர்கிறது.
புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், "ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்துக்கு தொடர்ந்து இந்தியா ஆதரவளிக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளார். ஷேக் ஹசீனா இந்தியாவில் உள்ள நிலையில், வங்கதேசத்தில் அமைதி நிலவ வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஹசீனாவுடன் பேணிய நல்லுறவைப் போன்று தாரிக் ரஹ்மானுடனும் நல்லுறவைப் பேண வேண்டிய அவசியமும் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
சிறுபான்மையினர் மீதான வன்முறை, சீர்குலைந்துள்ள பொருளாதாரம், எதிர்க்கட்சியினர் மீதான அடக்குமுறை, நீறுபூத்த நெருப்பாகத் தொடரும் மாணவர்களின் போராட்டம், நீண்டகால நட்பு நாடான இந்தியாவுடன் உறவு சீர்குலைவு, திடீர் நட்பு வலை விரிக்கும் பாகிஸ்தான் என தாரிக் ரஹ்மான் தீர்வு காண வேண்டிய பல பணிகள் காத்திருக்கின்றன.
1971-இல் "பங்கபந்து' முஜிபுர் ரஹ்மான் தலைமையில் அன்றைய ஒன்றுபட்ட பாகிஸ்தானுக்கு எதிராக கிளர்ச்சி நடந்தபோதும், வங்கதேசம் தனிநாடாக உருவானபோதும், அதற்குப் பிறகும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் மதவாத இஸ்லாமிய அமைப்பு ஜமாத்- ஏ-இஸ்லாமி. ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கிளர்ச்சியை பாகிஸ்தானின் ஆதரவுடன் தூண்டிவிட்டதில் அதற்குப் பெரும் பங்கு உண்டு. எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கும் ஜமாத்-ஏ-இஸ்லாமியை அகற்றி நிறுத்தி வங்கதேசத்தை மதச் சார்பற்ற நாடாக நிலைநிறுத்தும் பெரும் பொறுப்பு தாரிக் ரஹ்மானை எதிர்கொள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.