இந்தியாவுடன் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட மறுத்த பாகிஸ்தான் அணி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சமரசத்துக்குப் பிறகு விளையாட ஒப்புக் கொண்டது. கொழும்பில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில் எதிர்பார்த்ததுபோல இந்தியா வெற்றி பெற்றது மகிழ்ச்சி என்றால், பாகிஸ்தான் அணி இந்த அளவுக்கு பலவீனப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.
தேவையில்லாத சர்ச்சைகளை இந்தியாவும் பாகிஸ்தானும் தவிர்த்திருக்கலாம். விளையாட்டில் அரசியலைப் புகுத்திப் பனிப்போர் நடத்த முற்படுவது என்பது, தரம் தாழ்ந்த ராஜதந்திரம் என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஐபிஎல் போட்டிக்காக வங்கதேசப் பந்து வீச்சாளர் முஸ்தஃபி2ஸுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருக்கவும் வேண்டாம், பிறகு விடுவித்திருக்கவும் வேண்டாம். முஸ்தஃபிஸுர் ரஹ்மானை விடுவித்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, வங்கதேச கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக இந்தியாவுக்கு வராமல் பின்வாங்கியது. தங்களது ஆட்டங்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றுமாறு வங்கதேச அணி விடுத்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிராகரித்தது.
2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு, பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு இந்திய அணி விளையாடச் செல்வதில்லை. ஐசிசி போட்டிகளில் மட்டும் இந்திய-பாகிஸ்தான் அணிகள் பொதுவான இடங்களில் மோதுகின்றன. அதுபோல, வங்கதேச அணியை இலங்கையில் விளையாட அனுமதித்துப் பிரச்னையை ஐசிசி முடித்திருக்க வேண்டும்.
வங்கதேசத்துக்கு ஆதரவாக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் முடிவை மறுபரிசீலனை செய்வதாகப் பாகிஸ்தான் சொன்னது, பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது. ஜிம்பாப்வேயில் அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணியும் இந்திய அணியும் கலந்து கொண்டன. அப்படி இருக்கும்போது, டி20 உலகக் கோப்பையைப் புறக்கணிப்பது ஏன் என்று கேள்வி எழுந்தது.
அரசியலை வர்த்தகம் வென்றதன் பின்னணியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெற்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் ஆணையத்தின் ஆண்டு வருமானம் 35.5 மில்லியன் டாலர் என்றால், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒரு ஆட்டத்தில் கிடைக்கும் வருமானம் சுமார் 250 மில்லியன் டாலர்கள். 10 விநாடிகள் தொலைக்காட்சி விளம்பரத்துக்கு ரூ. 40 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் இல்லாவிட்டால் ஒளிபரப்பு நிறுவனத்துக்கு மட்டுமே ரூ. 200 கோடி முதல் ரூ. 250 கோடிவரையில் இழப்பு ஏற்படலாம் என்கிறார்கள்.
கிராமப்புறங்களில் சேவல் சண்டை, ஆட்டுக் கிடாய் சண்டை நடத்துவதுபோல, இந்தியாவையும், பாகிஸ்தானையும் மோதவிட்டு மிகப் பெரிய அளவில் ஐசிசி வருமானம் ஈட்டுகிறது. ஐசிசி கட்டமைப்பது போல இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி என்பது உண்மையல்ல. பாகிஸ்தான் அணி தனது பழைய வலிமையை இழந்து பல ஆண்டுகளாகி விட்டன.
1980-களில் இரண்டு அணிகளும் மோதிய 31 ஒரு நாள் ஆட்டங்களில், பாகிஸ்தான் 19 ஆட்டங்களில் வென்றது. மூன்று ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை. 1990-களில் நடந்த 48 ஆட்டங்களில், பாகிஸ்தான் 28 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. மிகச் சிறந்த பல கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் அணியில் அப்போது இருந்தனர்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் இம்ரான் கானுக்கு இந்தியாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ரமீஸ் ராஜா உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள், நமது விளையாட்டு வீரர்களுக்கு இணையான செல்வாக்கைப் பெற்றிருந்தனர். ரசிகர் கூட்டம் பெற்றிருந்தனர். அப்போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான கிரிக்கெட் ஆட்டங்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தின என்பது உண்மை.
கடந்த நூற்றாண்டு நிலைமை, புதிய நூற்றாண்டில் தலைகீழ் மாற்றம் கண்டது. கடந்த கால் நூற்றாண்டில் 2009 டி20 உலகக் கோப்பை, 2017 ஒரு நாள் போட்டியான சாம்பியன்ஸ் டிராஃபி என்று இரண்டே இரண்டு சர்வதேசப் போட்டிகளில் மட்டும்தான் பாகிஸ்தான் அணி சாதனை படைத்திருக்கிறது. இப்போது இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரர்கள், அவர்களது முந்தைய தலைமுறை வீரர்களைப் போல இந்திய அணிக்கு எந்தவிதத்திலும் நிகரானவர்களாகவோ, போட்டியாளர்களாகவோ இல்லை.
இந்திய அணியின் பயிற்சியாளராக ஜான் ரைட் நவம்பர் 2000 முதல் செயல்பட்டபோது, இந்திய அணி தொழில்முறை கட்டுக்கோப்புக்கு உள்ளானது. பாகிஸ்தானில் அப்படியொரு முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. ஐபிஎல் போட்டியை அறிமுகப்படுத்தியதற்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்
லலித் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும். அதன் விளைவாகத்தான் இன்று இந்தியாவில் 81 சர்வதேசத் தரத்திலான கிரிக்கெட் மைதானங்கள் உருவாகி இருக்கின்றன.
டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 8 சுற்றில் ஆறு ஆட்டங்கள் இந்தியாவிலும், ஆறு ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெற உள்ளன. விளையாட்டில் அரசியலைப் புகுத்துவதும், விளையாட்டு வீரர்கள் வணிகத்துக்காக விலை பேசப்படுவதும், பகைமையை பரப்புரை செய்து விளம்பர வருவாயை அதிகரித்துக்கொள்வதும் "ஃபெளல் ப்ளே' எனப்படும் தப்பாட்டம் அல்லாமல் வேறென்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.