FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

உற்சாக வெற்றி!

இந்தியாவின் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கும்கும் மொஹோத் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது.

Updated On : 17 மே 2026, 4:06 am IST
பகிர்:

சீனாவின் ஷாங்காயில் மே 10-இல் நடைபெற்ற வில்வித்தை உலகக் கோப்பையின் இரண்டாம் கட்டப் போட்டியில், இந்தியாவின் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கும்கும் மொஹோத் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. பரபரப்பான 'ஷூட்-ஆஃப்' சுற்றில் போட்டியை நடத்திய நாடான சீனாவை இந்திய மகளிர் அணியினர் தோற்கடித்தனர்.

2021-இல் இந்திய வில்வீராங்கனைகள் முதல் உலகக் கோப்பையை வென்று, தங்கப் பதக்கங்களை வென்றனர். மீண்டும் வெற்றிக்காக ஐந்து ஆண்டுகள் இந்திய அணி காத்திருந்தது. 2026-இல் வலுவான சீன அணியையும், அந்த அணியை ஆக்ரோஷமாக ஆதரித்த உள்ளூர் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பையும் சமாளித்து, இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டது. மாறிக்கொண்டே இருந்த வெற்றி, தோல்வி நிறைந்த இறுதிப் போட்டியில், நான்கு செட் கொண்ட வழக்கமான ஆட்டம் 4-4 என சமநிலையில் முடிந்த பிறகு, 'ஷூட்-ஆஃப்' சுற்றில் இந்தியா 5-4 என்ற கணக்கில் சீன மகளிர் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி, ஜப்பானில் விரைவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் இந்திய அணிக்கு அதிக உற்சாகத்தை அளித்துள்ளது.

2021-க்குப் பின்னர் தங்கப் பதக்கத்தை வென்ற இந்திய அணி, அரையிறுதிப் போட்டியில் 10 முறை ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரிய அணியையும் தோற்கடித்தது. 2021-இல் குவாத்தமாலா சிட்டி மற்றும் பாரிஸில் நடைபெற்ற உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிகளிலும் இடம் பெற்றிருந்த தீபிகா குமாரி, 2010 முதல் தற்போது வரை ஏழு உலகக் கோப்பை அணியில் பங்குபெற்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

Advertisement

Advertisement

ஒலிம்பிக் வீராங்கனை தீபிகா குமாரி தனது 12-வது உலகக் கோப்பைப் பதக்கத்தை வென்றதால், இந்தியாவுக்காக அதிக எண்ணிக்கையிலான உலகக் கோப்பைப் பட்டங்களை வென்ற காம்பவுண்ட் வில்வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா வென்னமுடன் சமநிலையை எட்டியுள்ளார். இந்திய மகளிர் அணி கடந்த ஆண்டுகளில் வென்ற ஏழு உலகக் கோப்பை அணிகளில் தீபிகா ஓர் அங்கமாகத் திகழ்ந்துள்ளார். முழுநேர தேசியப் பயிற்சியாளர் இல்லாமல் இந்திய மகளிர் அணியினர் பயிற்சி செய்த நிலையில், மிகுந்த அனுபவம் வாய்ந்த தீபிகாவே அணியை முன்னின்று வழிநடத்தினார்.

இந்திய அணியில் கடைசியாக ஆடிய தீபிகா தொடர்ச்சியாக 10 புள்ளிகளைப் பெற்று ஆட்டத்துக்கு அடித்தளமிட்டார். நடுவில் சீன அணி ஆதிக்கம் செலுத்தினாலும், முடிவு செய்யும் ஆட்டத்தில் இந்தியர்கள் சரியான நேரத்தில் உச்சத்தை அடைந்தனர். அங்கிதா 9 புள்ளிகளுடன் தொடங்க, அவரைத் தொடர்ந்து கும்கும் 10 புள்ளிகளைப் பெற்றார். தங்கம் வெல்ல 8 புள்ளிகள் மட்டுமே தேவைப்பட்டபோது, நான்கு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற தீபிகா, ரசிகர்களை ஏமாற்றவில்லை. தீபிகா நிதானமாக 9 புள்ளிகளை ஈட்ட, வெற்றி நிச்சயமானது.

'சரியான திசையிலேயே பயணித்தேன். நான் இன்னும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறேன். இன்னும் சிறப்பாகவும், மேன்மேலும் செயல்படுவதற்காக என்னை நானே தயார்படுத்திக்கொள்கிறேன். வரும் நாள்களில் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புகிறேன்' என்கிறார் முப்பத்தொரு வயதான தீபிகா.

'நெருக்கடியான தருணங்களில் பதற்றமின்றி அமைதியாகச் செயல்பட உதவியதற்காக, மூத்த சக வீராங்கனைகளுக்கு நன்றி. அவர்கள் தைரியமாக வில் எய்து, எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று தைரியமூட்டினர். அவர்களிடமிருந்து நான் நிறைய விஷயங்களைக் கற்றேன்' என்கிறார் கும்கும்.

'எங்களில் ஒருவர் குறி தவறி வில் எய்தால், மற்றவர்கள் அதை ஈடுசெய்து அணியைக் காப்பாற்றினார்கள்' என்கிறார் அங்கிதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments