வங்கதேச தலைநகரில் படம் - ஏபி
தலையங்கம்

வங்க(தலிபான்)தேசம்!

வங்கதேசம் மிகவும் சிக்கலான, பிரச்னையான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது.

ஆசிரியர்

வங்கதேசம் மிகவும் சிக்கலான, பிரச்னையான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. 1990 -இல் ராணுவ ஆட்சி அகன்ற பிறகு இப்படி ஒரு சூழலை அந்த நாடு எதிர்கொண்டதில்லை. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்ததை தொடர்ந்து, கடந்த 16 மாதங்களாக வங்கதேசம் ஒரு பிரச்னையிலிருந்து இன்னொரு பிரச்னை என்று தொடர்ந்து பதற்றமான சூழலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இப்போதைய நிலைமைக்கு முகமது யூனுஸ் தலைமையில் இருக்கும் இடைக்கால அரசின் கையாலாகாத்தனம்தான் மிக முக்கியமான காரணம். ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக் கொண்ட முகமது யூனுஸ், அமைதியை நிலை நாட்ட முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்த முடியவில்லை என்பதுடன், வன்முறையைக் கட்டுப்படுத்தவும் தெரியாமல் போனதால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. அரசியல்வாதி அல்லாத ஒருவரைப் பதவியில் அமர்த்தியதன் விளைவு, இப்போது மாலுமி இல்லாத கப்பலாக மதவாதப் புயலில் வங்கதேசம் திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.

வங்கதேசம் உருவாகக் காரணம் பலருக்கும் மறந்தே போய்விட்டது. ஒருங்கிணைந்த பாகிஸ்தானில் உருது மொழிக்கு முன்னுரிமையும், இஸ்லாமியர்களுக்கு மட்டுமே அரசியல் அதிகாரமும் என்று இருந்த நிலைமைதான், கிழக்கு பாகிஸ்தானில், பிரிவினை மனநிலையை உருவாக்கியது. 1971-இல் வங்கதேசம் உருவானபோது அங்கே ஹிந்துக்களின் எண்ணிக்கை 22% என்றால், இப்போது அதுவே வெறும் 7%-ஆகக் குறைந்துவிட்டது.

பலர் மதம் மாற்றப்பட்டனர், இந்தியாவுக்கு விரட்டி அடிக்கப்பட்டனர்; சிலர் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும், ஹிந்துக்களின் எண்ணிக்கை ஏழு சதவீதமாக முடங்கிவிட்டது என்பது என்னவோ உண்மை. வங்கதேசத்தை மதச்சார்பற்ற தேசமாக முஸ்லிம்களும் ஹிந்துக்களும் சகோதரர்களாக இணைந்து வாழும் வங்க மொழி பேசும் தேசமாக உருவாக்க நினைத்த "பங்கபந்து' ஷேக் முஜிபுர் ரஹ்மானே கொல்லப்பட்டதால், அந்தக் கனவு பகல் கனவானது.

வங்க மொழி பேசும் ஜனநாயக ரீதியிலான இனவழி சமூகமாக இருக்க வேண்டும் என்கிற உன்னத லட்சியத்துடன் உருவான நாடுதான், இப்போது இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் பிடியில் சிக்கி இன்னொரு ஆப்கானிஸ்தானாக மாறத் தலைப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பும் அடிப்படைவாத அமைப்பான ஜமாத்-ஏ- இஸ்லாமியும் செயல்படுகின்றன.

இவர்கள் மட்டுமல்ல, ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக அமெரிக்காவும் களமிறங்கியது என்பதை மறந்து விடக்கூடாது. வங்கதேசத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைத்த அமெரிக்காவின் எண்ணம் நிறைவேறாமல், வங்கதேசத்தின் நிலையற்ற சூழலைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது பாகிஸ்தான். மெüனமாக வேடிக்கை பார்க்கிறது சீனா. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறது அண்டை நாடான இந்தியா.

இந்தியாவைப் பொருத்தவரை வங்கதேசத்தின் நிலையற்ற தன்மை அதன் எல்லைகளைக் கடந்து மேற்கு வங்கம், அஸ்ஸôம், திரிபுராவில் சமூக ரீதியாகவும், மத பகுப்பாய்வு ரீதியாகவும் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையின் நீளம் 4,097 கி.மீ. சர்வதேச அளவில் மிக நீளமான இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை இதுதான். அகதிகள் வருகையும், தீவிரவாதக் குழுக்களின் ஊடுருவலும் மிகப் பெரிய பிரச்னைகளாக நமக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பின்னணியில்தான் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக மாறி இருக்கிறது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி ஏற்றதைத் தொடர்ந்து, கடந்த 16 மாதங்களில் 2,900-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்துள்ளன. முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்ததைக் காரணம் காட்டி அடிப்படைவாதிகள் இந்திய எதிர்ப்பைத் தூண்டிவிடுகிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது.

1990 -இல் ராணுவ சர்வாதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த வங்க தேசத்தின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா முதுமை சார்ந்த பல்வேறு உடல் நலக் கோளாறுகளுடன் கடந்த வாரம் மறைந்தார். ஷேக் ஹசீனாஆட்சியில் பல வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு வெளிநாடு தப்பிச் சென்ற அவரது அறுபது வயது மகன் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பி இருக்கிறார். ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில் தாரிக் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.)நாடாளுமன்றத் தேர்தலில் களம் இறங்கி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

"ஹிந்துக்களுக்கும் சொந்தமானது வங்கதேசம் 'என்று அவர் அறிவித்திருக்கிறார் என்றாலும் எஞ்சி இருக்கும் 7% ஹிந்துக்களை, வங்கதேசத்தை ஆட்டிப்படைக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அங்கே நிம்மதியாகத் தொடர அனுமதிப்பார்களா என்றால் சந்தேகம்தான். ஹிந்துக்களும் சிறுபான்மையினர்களும் வங்கதேசத்தில் தொடர்வார்களா, வங்கதேசத்தில் அறிவித்திருப்பதுபோல 2026 பிப்ரவரி 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறுமா என்பதெல்லாம் அல்ல கேள்வி...

மத அடிப்படைவாதத்தின் பிடியில் சிக்கி இருக்கும் வங்கதேசத்தில் மீண்டும் அமைதி திரும்புமா, பயங்கரவாத குழுக்கள் கட்டுக்குள் கொண்டுவரப்படுமா, பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் வளர்ச்சிப் பாதையில் தொடருமா என்பவைதான் கேள்விகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது: குடியரசு துணைத் தலைவா் இன்று வழங்குகிறார்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 384 கனஅடியாக குறைந்தது!

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்!

செல்ஃபோனை சார்ஜ் போடும்போது செய்யும் தவறுகள்!

SCROLL FOR NEXT