இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை, வர்த்தகத்துக்காக காப்பீட்டு நிறுவனங்கள் நமது சிந்தையை திசைதிருப்பி எப்படி எல்லாம் லாபம் ஈட்ட முயற்சிக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.
""காப்பீடு குறித்து வாடிக்கையாளர்களிடம் உரிய தகவல்களை நிறுவனங்கள் தெரிவிக்காமல் தவறான தகவல்களைத் தெரிவிப்பது கவலையளிக்கிறது. தவறான தகவல்கள் மூலம் வாடிக்கையாளர்களைக் காப்பீடு பெற வைப்பதால் தங்களது காப்பீட்டை அவர்கள் புதுப்பிக்க முன்வருவதில்லை. இதைத் தடுக்க வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையிலான காப்பீடுகளை முகவர்கள் பரிந்துரைக்க வேண்டும். இதற்கு முறையான செயல் திட்டத்தை வடிவமைத்து அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது.
காப்பீட்டு நிறுவனங்கள், முகவர்கள் மற்றும் காப்பீடுகளை விற்பனை செய்யும் வங்கி ஊழியர்கள், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய பொதுமக்களையும், வாடிக்கையாளர்களையும் மூளைச்சலவை செய்து காப்பீடு பெற வைக்கின்றனர். காப்பீடு செய்வோர் எதிர்பார்த்ததுபோல பணப் பலன்கள் கிடைக்காதபோது புகார் அளிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஆயுள் காப்பீடு சந்தா தொடர்பாக 2023}24}இல் 1,20,726 புகார்கள் பெறப்பட்ட நிலையில், 2024}25}இல் 1,20,429 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதேசமயம் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் தொடர்பாக 2023}24}இல் 23,335 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இது 2024}25}இல் 26,667}ஆக அதிகரித்துள்ளது. இது நிறுவனங்கள் மற்றும் முகவர்களின் ஒழுக்கக்கேட்டை உறுதிப்படுத்துகிறது.
வங்கிகளில் காப்பீடு விற்பனை இலக்கை அடைய ஊழியர்கள் தவறான தகவல்களைத் தெரிவிப்பது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. காப்பீடு பெற்றால் வங்கியில் கூடுதல் மற்றும் தடையற்ற சேவை பெறலாம்; கடைசி நேர சலுகை என்றெல்லாம் கூறி காப்பீடு வலையில் வீழ்த்துகிறார்கள். தேவை இல்லாத காப்பீடுகளைத் தலையில் கட்டும் போக்கு காணப்படுகிறது. அப்படி காப்பீடு பெறுவோர் அதற்கான பலனைப் பெற முயற்சிக்கும்போது அதில் உள்ள மறைக்கப்பட்ட விதிமுறைகளை சுட்டிக்காட்டி தடுக்கப்படும் நிலையில் புகார்கள் எழுகின்றன.
ஆயுள் காப்பீட்டில் மட்டுமல்லாது மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு உள்ளிட்ட பொதுக் காப்பீடு அளிப்பதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவது கண்கூடாக இருந்தும் அவை தொடர்ந்து கொண்டிருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது. புதிய வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் காப்பீட்டுக்கும், வாகனப் பதிவுக்கும் சேர்த்து விலை நிர்ணயித்து விற்பனை செய்வது வழக்கம்.
இதில் காப்பீட்டுத் தொகையை வெளிச்சந்தையுடன் ஒப்பிட்டால் சுமார் 40 முதல் 50 % வரையில் அதிகம் இருக்கும். வாகன விற்பனை நிறுவனங்களிடம் காப்பீடு பெறுவது கட்டாயம் இல்லை. வெளிச்சந்தையில் காப்பீடு பெற்றால் இதர சேவைகளுக்கு தாங்கள் முழுமையாகப் பொறுப்பேற்க முடியாது என வாகன விற்பனை நிறுவனங்கள் அச்சுறுத்தும் போக்கைத் தடுக்க ஐஆர்டிஏஐ நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த மோசடி தொடராது.
நாட்டின் மக்கள்தொகையான சுமார் 140 கோடியில் தற்போது சுமார் 30 % பேர் மட்டுமே ஏதேனும் ஒரு காப்பீடு வைத்திருப்பவர்களாக இருக்கின்றனர். எஞ்சிய 70 % பேர் காப்பீடு பற்றி அறியாதவர்களாகவே இருக்கின்றனர். காப்பீட்டுத் துறையின் வளர்ச்சி (நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காப்பீட்டுத் தவணையின் பங்கு) 2025-ஆம் நிதியாண்டில் 3.7 % உள்ளது. இது உலக சராசரியான 7.3 %-ஐவிட மிகவும் குறைவு.
பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் காப்பீடு பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. பிரதமரின் "ஆயுஷ்மான் பாரத்' திட்டம், விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம் (பி.எம்.எஃப்.பி.ஒய்), மாநில அரசுகளின் முதல்வர் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்டவை காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகின்றன. ஆயுள் காப்பீட்டுத் துறையின் வளர்ச்சி 2023-24-இல் 2.8 % இருந்த நிலையில், 2024-25-இல் 2.7 %-ஆக குறைந்தது. ஆயுள் காப்பீட்டைத் தவிர பிற காப்பீட்டுத் துறைகளின் வளர்ச்சி 1%-ஆக தொடர்கிறது.
உலகின் 10-ஆவது பெரிய காப்பீட்டுச் சந்தையான இந்தியாவில் அதற்கான வாய்ப்புகள்அதிகம். எனவே, அதைக் கைப்பற்ற அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் பெருமளவில் ஆர்வம் காட்டுகின்றன. அதற்கேற்ப காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 74%-லிருந்து 100% உயர்த்தி காப்பீடு திருத்தச் சட்டம்-2025 கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அண்மையில் அதற்கான விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலம் வெளிநாட்டுப் பெரு நிறுவனங்கள் இந்தியாவில் முழுக் கட்டுப்பாட்டுடன் தமது நிறுவனங்களைத் தொடங்க முடியும். ஆதலால், இனிமேல் இன்னும் அதிகமான தவறான தகவல்களைத் தெரிவித்து வர்த்தகம் செய்யும்போக்கு அதிகரிக்கும்.
காப்பீடு செய்துகொள்வோர் நம்பகமான முகவராக இருந்தாலும் அதற்கான ஆவணங்களை முழுமையாக படித்துப் பார்க்க வேண்டியது அவசியம். படிவங்களை முடிந்த வரையில் நாமே நிரப்புவதுடன், சந்தேகத்திற்கிடமான வகையில் அதிக அளவிலான லாபம் மற்றும் சலுகைகள் இருப்பதாகத் தெரிந்தால், அது குறித்து முகவரிடமோ அல்லது நிறுவனத்திடமோ முழுமையான விளக்கம் கோரி அதை எழுத்துமூலம் பெற்றுக் கொள்வதே ஏமாறாமல் இருக்க வழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.