வளர்ச்சி அடைந்த நாடுகளில், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பயணிகள் சேவை மையங்கள் வணிக வளாகங்களையும், தங்கும் விடுதிகளையும், திரையரங்குகளையும் உள்ளடக்கியவையாக இருக்கின்றன. இதன்மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களும் பயனடைகிறார்கள். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடையாளமாக இவை விளங்குகின்றன.
இந்தியாவைப் பொருத்தவரை கடந்த 15 ஆண்டுகளில் விமான நிலையங்கள் வர்த்தக மையங்களை உள்ளடக்கியவையாகவும், பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் வசதி இணைந்தவையாகவும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, ஒருசில ரயில் நிலையங்களும், வர்த்தக வளாகங்களை உள்ளடக்கியதாக சீரமைக்கப்படுகின்றன. ஆனாலும்கூட முழுமையான முனைப்புடன் ரயில்வே துறையின் நடவடிக்கை இன்னும் இல்லை என்பதைக் குறிப்பிடத் தோன்றுகிறது.
அரசின் கைவசமுள்ள பெரும்பாலான அலுவலகங்கள், தொழில்நுட்ப ரீதியாக மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கும் நவீன இந்தியாவுக்கு உகந்தவையாக இல்லை. பிரிட்டிஷ் காலனிய கட்டுமானமும், ஏறத்தாழ நூற்றாண்டைக் கடந்துவிட்ட உள்கட்டமைப்பும், அதிக வெளிச்சமில்லாமல் இருண்டு கிடக்கும் அறைகளும் என அரசு அலுவலகங்கள் சுறுசுறுப்புடன் இயங்காத மெத்தனத்தின் அடையாளமாகக் காட்சியளிக்கின்றன.
புதிதாகக் கட்டப்படும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களும், ஒரு சில மாநிலங்களின் தலைமைச் செயலகங்களும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களும் மாற்றத்தின் அறிகுறியாக இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், போதிய அளவிலான மாற்றங்கள் ஏற்படாமல் இருப்பது "புதிய இந்தியா' இன்னும்கூட நவீனமயமாகவில்லை என்பதன் அடையாளம்.
இந்தியத் தபால் துறை முக்கியமான கொள்கை முடிவுகளுடன் மாற்றத்துக்கான முனைப்புடன் இருப்பதை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் அறிவிப்புகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. தபால் நிலையங்களைச் சீரமைத்து, அவற்றில் வர்த்தக வளாகங்களை இணைப்பதன் மூலம் அரசுக்கு மிகப் பெரிய வருவாய் ஏற்படுத்த முடியும் என்கிற அமைச்சரின் கருத்து வரவேற்புக்குரியது.
கடிதப் போக்குவரத்து என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவிலேகூட குறைந்துவிட்டது. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், மின்னஞ்சலின் வரவும் அஞ்சல் அட்டைக் காலத்தை கடந்த நூற்றாண்டின் எச்சமாக்கி, 21-ஆம் நூற்றாண்டை எண்மத் தொழில்நுட்பக் காலமாக்கி இருக்கின்றன. தபால் எழுதுபவர்களும், தபால் தலை சேகரிப்பவர்களும் மூத்த குடிமக்கள் மட்டுமே என்கிற நிலை ஏற்பட்டு விட்டது.
டென்மார்க்கில் 90% தபால் பெட்டிகள் அகற்றப்பட்டுவிட்டன. மிச்சம் மீதி இருப்பவை சுற்றுலாப் பயணிகளின் காட்சிப் பொருளாக விட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. பிரிட்டனில் ஆண்டொன்றுக்கு 2004-இல் 24 பில்லியன் கடிதங்கள் என இருந்தவை, 2024-இல் 7 பில்லியனாகக் குறைந்துவிட்டது. பிரிட்டன் நிர்வாகம் 500 ஆண்டுகள் பழைமையான "ராயல் மெயில்' தபால் சேவையைக் கடந்த ஆண்டு செக்கோஸ்லோவேகியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவருக்கு விற்றுவிட்டது.
1.65 லட்சம் தபால் நிலையங்களுடன் உலகில் மிகப் பெரிய தபால் சேவையை வழங்கும் "இந்தியா போஸ்ட்' தொடர்ந்து இழப்பை எதிர்கொள்ளும் துறையாக இருக்கிறது. அதே நேரத்தில், ஒரேடியாக தபால் சேவையைக் கைவிடவும் முடியாது. 90% தபால் நிலையங்கள் கிராமப்புறங்களுக்கும், பழங்குடியினர் வசிக்கும்
பகுதிகளுக்கும் சேவைகளை வழங்கும் நிலையில், அவற்றைக் கைவிடுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது.
கடந்த 20 ஆண்டுகளாகக் குறைந்துவரும் தபால் சேவையைக் கருத்தில்கொண்டு இன்னபிற சேவைகளில் தபால் நிலையங்கள் கூடுதல் கவனம் செலுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. தபால் நிலையங்கள் மூலம் காப்பீடு, வங்கி சேவை உள்ளிட்ட முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்பது என்னவோ உண்மை.
தபால் துறையின் விரைவு அஞ்சல் ("ஸ்பீட் போஸ்ட்') தனியார் துறையினரின் போட்டிக்கு மத்தியிலும் செயல்படுகிறது என்பதே மிகப் பெரிய வெற்றி. "அமேஸான்' உள்ளிட்ட இணைய வர்த்தக நிறுவனங்களுடன் உடன்பாடு மேற்கொண்டு எட்டமுடியாத பகுதிகளுக்கெல்லாம் பொருள்களைக் கொண்டு சேர்க்கும் பணியில் "இந்தியா போஸ்ட்' ஈடுபடுவது வரவேற்புக்குரிய முயற்சி.
தபால் நிலைய வளாகங்களை புதுப்பித்துக் கட்டி, அதன்மூலம் கிடைக்கும் கூடுதல் இடங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் பெரிய அளவில் "இந்தியா போஸ்ட்' வருவாய் ஈட்ட முடியும்.
பல்லடக்கு வளாகமாகக் கட்டி ஒரு தளத்தில் "இந்தியா போஸ்ட்' இயங்கவும், பிற பகுதிகளை அரசு அலுவலகங்களுக்கும், தனியார் துறையினருக்கும் வாடகைக்கு விடுவது என்கிற கருத்தை முன்மொழிந்திருக்கிறார் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.
பெரிய நிலப் பரப்பில் தபால் நிலையங்கள் அமைந்திருப்பதால், சுற்றி இருக்கும் பகுதிகளை வீணாக்காமல், அவற்றில் இருந்து வருவாய் ஈட்டும் இந்தத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடி அரசின் தீவிர பரிசீலனையில் இருக்கிறது. இந்தியாவின் நகர்ப்புறங்களில் மட்டும் 15,823 புதிய தபால் நிலையங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் உடனடியாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளத் தகுந்தவை எவை என்பதை தேர்வு செய்யும் பணி தொடங்கிவிட்டது.
இந்தியாவில் அரசின் கைவசமிருக்கும் இடங்கள் மட்டுமே 15,500 சதுர கி.மீ.; அதாவது, தில்லியைப் போல 10 மடங்கு;அவை அனைத்தையுமே வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த முடியாது என்றாலும், அவற்றில் ஒரு சதவீதம், அமைச்சர் ஜோதிராதித்யசிந்தியா கூறுவதைப்போல மறு வடிவமைப்பு செய்யப்பட்டாலேபோதும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.