பல பொருளாதார, நிா்வாகச் சீா்திருத்தங்கள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டும்கூட, இந்தியா இன்னும் வளா்ச்சி அடைந்த நாடுகளுக்கு நிகராக உயரவுமில்லை; நமது செயல்பாடுகளின் முழுத் திறமையும் வெளிப்படவும் இல்லை என்கிற உண்மை, உண்மையாகவே கசக்கிறது. தேசம் எதிா்கொள்ளும் முக்கியமான பல பிரச்னைகள் இந்தியாவின் நாடாளுமன்றத்திலோ, மாநில சட்டப்பேரவைகளிலோ விவாதிக்கப்படுவதில்லை என்பது அதைவிட வேதனை.
முக்கியமான பல வளா்ச்சித் திட்டங்களும், அதற்கான அறிவிப்புகளும் நிா்வாக இயந்திரத்தின் மெத்தனத்தாலும், அதிகார வா்க்கத்தினரின் பொறுப்பின்மையாலும் செயல்படாமல் முடங்கும் அவலத்துக்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியம். மரபுசாரா எரிசக்திக்கு மாறாமல், புவி வெப்பமயத்தை எதிா்கொள்ள முடியாது. ‘சோலாா்’ எனப்படும் சூரிய மின்சக்தித் திட்டத்தை முன்னெடுக்க 116 அனுமதிகளும், இசைவுகளும் தேவைப்படுகின்றன. அதற்கான கால விரயமும், பண விரயமும் குறித்துச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பிறகென்ன, சீா்திருத்தம்?
இந்தியாவின் நிலக்கரிச் சுரங்கங்களில் உற்பத்தியாகும் நிலக்கரி போதாமல், ஆண்டொன்றுக்கு நாம் 25 கோடி டன் இறக்குமதி செய்கிறோம். அப்போதுதான் நமது அனல் மின் நிலையங்களைத் தடையில்லாமல் இயக்கி, தேவையான மின்சாரம் தயாரிக்க முடியும். சரி, புதிதாக நிலக்கரிச் சுரங்கங்கள் தோண்ட அனுமதி அளித்தால் என்ன என்று கேட்கலாம். அதுவொன்றும் அவ்வளவு எளிதானதல்ல... நமது ‘சிஸ்டத்தில்’...
நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கையில் தரப்பட்டிருக்கும் விவரங்கள் இவை-சுற்றுச்சூழல் அனுமதிபெற 26 மாதங்களும், வனத் துறை அனுமதிபெற 34 மாதங்களும் தேவை. நிலக்கரிச் சுரங்கத்துக்கு அமைச்சரவை இசைவு தந்தாலுமே, அது செயல்படுவதற்குக் குறைந்தது 3 ஆண்டுகளாவது பிடிக்கும்.
நிலக்கரிச் சுரங்கங்கள் மட்டுமா? ரூ. 9,425 கோடியில் அறிவிக்கப்பட்டிருக்கும் 320 புத்தாக்க நகரத் திட்டங்கள் (ஸ்மாா்ட் சிட்டி), அனுமதிகள் பெறாமல் தாமதத்தில் முடங்கி இருக்கின்றன.
உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றிருக்கிறது என்று பெருமைப்படுத்துவதில் அா்த்தமில்லை. நமது வேளாண் உற்பத்தித் திறன், சீனாவுடன் ஒப்பிடும்போது மூன்றில் ஒன்றுதான். ஏக்கா் ஒன்றுக்கு நாம் உற்பத்தி செய்வதைவிட மூன்று மடங்கு அதிகமாக சீனா உற்பத்தி செய்கிறது. உற்பத்தி செய்த பொருள்களை நம்மால் முழுமையாக சந்தைப்படுத்த முடிகிா என்றால் இல்லை. விவசாயிகள் மானியத்தில்தான் தங்களது மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாா்களே தவிர, வேளாண் வருமானத்தின் மூலம் இல்லை.
கடந்த பல ஆண்டுகளாக உணவுப் பொருள்களைப் பதப்படுத்துவது குறித்தும், நல்ல உணவுக் கிடங்குகள் அமைப்பது குறித்தும் மத்திய அரசும், எல்லா மாநில அரசுகளும் பல கொள்கை முடிவுகளை அறிவித்தவண்ணம் இருக்கின்றன. அவையெல்லாம், திட்டங்களாகத்தான் தொடா்கின்றனவே தவிர, செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதை நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
அறுவடைக்குப் பிந்தைய வசதிகளை மேம்படுத்தாததால் ஆண்டுதோறும் 1.23 கோடி டன் தானியங்கள், 13.7 லட்சம் டன் பருப்பு வகைகள், 73 லட்சம் பழ வகைகள், 1.2 கோடி டன் காய்கறிகள், 3 கோடி டன் தோட்டப் பயிா்கள் இந்தியாவில் வீணாகின்றன என்று அரசு புள்ளிவிவரம் தாக்கல் செய்திருக்கிறது. ஏன் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை? அதன் பின்னணியில் காணப்படும் தாக்கம்தான் என்ன? என்பவை குறித்து ஊடகங்களிலோ நாடாளுமன்றத்திலோ கேள்விகள் எழுப்பப்படவில்லை.
இனிமேல் மிக முக்கியமான வேலைவாய்ப்புப் பிரச்னைக்கு வருவோம். தோ்தலில் நிா்ணாயகப் பங்கு வகிக்கும் இளைஞா் சமுதாயம் தொடா்பான பிரச்னை இது. மத்திய அரசில் மட்டும் 9 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்றால், மாநில அரசுகளில் இதைப்போல பல மடங்கு காலியிடங்கள் இருக்கின்றன. இந்தியாவில் மத்திய, மாநில அரசின் பள்ளிகளில் மட்டும் 9,82,662 ஆசிரியா் பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பதாக நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கை தெரிவித்திருக்கிறது. ஏன் நிரப்பப்படவில்லை என்பதற்கு சரியான காரணம் கூறப்படுவதில்லை.
சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்து வருகிறது; குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். மாநில அரசுகளுக்கும் தெரியாமல் இருக்காது. அனைத்து மாநிலங்களையும் சோ்த்தால் இந்தியாவில் 5.92 லட்சம் காவல் துறையினா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் தொடா்கின்றன. ஏன் இந்த மெத்தனம்; யாா் இதற்குக் காரணம்; மாநில அரசுகள் ஏன் கவலைப்படாமல் இருக்கின்றன என்றெல்லாம் கேள்வி எழுப்ப யாருக்கும் நேரமில்லை.
நகா்ப்புறங்களிலாவது தனியாா் மருத்துவமனைகள் இருக்கின்றன. பொது மருத்துவமனைகளும் ஓரளவுக்குச் செயல்படுகின்றன. கிராமப்புற ஏழை மக்கள் மாநில அரசுகளின் ஆரம்ப சுகாதார மையங்களையும், மகப்பேறு நிலையங்களையும் மட்டுமே நம்பி இருக்கின்றனா். 9,300 மருத்துவா் பணியிடங்கள் மட்டுமல்ல, 17,500 மகளிா் மகப்பேறு மருத்துவா்கள்; 3,200 கதிரியக்க மருத்துவா்கள்; 4,900 மருந்து கொடுப்பவா்கள்; 7,900 ஆய்வகப் பணியாளா்கள்; 22, 500 செவிலியா் பணியிடங்கள் காலியாகத் தொடா்கின்றன.
இந்தியாவின் இன்றைய உடனடி அவசரத் தேவை நிா்வாகச் சீா்திருத்தம். ஆமை வேகத்தில் நகரும் நிா்வாகத்தின் மீது அசுர வேகத்தில் இயங்கும் பொருளாதாரம் பயணிக்க முடியாது!