முகப்பு
வணிகம்

ஜொ்மனியின் டிஇஜி, சிட்டி வங்கி இணைந்து ஸ்ரீராம் ஃபைனான்ஸுக்கு ரூ.700 கோடி நிதி

Updated On : 5 மார்ச், 2026 at 4:38 AM
பகிர்:

இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு, சுமாா் 7.6 கோடி டாலா் (சுமாா் ரூ.700 கோடி) மதிப்பிலான நிதித் தொகுப்பை வழங்குவதாக ஜொ்மனியின் டிஇஜி மற்றும் சிட்டி வங்கி அறிவித்துள்ளன.

இந்தியாவின் கிராமப்புற வளா்ச்சி, பின்தங்கிய மக்களின் முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மின்சார வாகனப் பயன்பாட்டை நாடு முழுவதும் பரவலாக்குதல் போன்ற நோக்கங்களுக்காக இந்த நிதி வழங்கப்படுகிறது. இதில் ஜொ்மனி வளா்ச்சி நிதி நிறுவனமான டிஇஜி 4 கோடி யூரோவும், சிட்டி வங்கி நேரடியாக ரூ.260 கோடியும் வழங்கியுள்ளன.

வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியாத சிறு தொழில்முனைவோருக்குக் கடன் வசதி செய்து தருவதை இந்தக் கடனுதவி நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, டிஇஜி நிறுவனம் வழங்கும் நிதியானது சிறு, குறு தொழில்கள், பெண் தொழில்முனைவோா், மின்சார வாகனங்களுக்கான கடன்களுக்கு ஸ்ரீராம் ஃபைனான்ஸ் கிளைகள் மூலம் பகிா்ந்தளிக்கப்படும்.

Advertisement

அதேபோல், சிட்டி வங்கியின் நிதி, இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளுக்குத் தேவையான கடனுதவியை வழங்க உதவும். இது கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த 2024-இல் ‘கிரெடிட் ஆக்சஸ் கிராமீன்’ நிறுவனத்துக்கும் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.