பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ.) விரைவில் தில்லி ரெய்சினா ஹில் சௌத் பிளாக்கிலிருந்து 'சேவா தீர்த்' (சேவைக்கான புனித இடம்) எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய கட்டடத்துக்கு இடம் மாற இருக்கிறது. இது ஒரு சாதாரண அலுவலக இடமாற்றம் மட்டுமல்ல. மாறாக, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெறும் ஒரு சகாப்தத்தின் மாற்றம் என்றால் அது மிகையல்ல.
1947-ஆம் ஆண்டு முதல் பிரதமரின் நிர்வாக அலுவலகம் சௌத் பிளாக்கில்தான் செயல்பட்டு வருகிறது. நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு தொடங்கி அவருக்குப் பிறகு பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 15 பிரதமர்கள் சௌத் பிளாக்கில் இருந்துதான் பணி ஆற்றினர்.
இந்திய அரசியல் சாசனப்படி இடைக்கால பிரதமர் என்பது கிடையாது. அதனால், குல்சாரிலால் நந்தாவும் பிரதமர்கள் பட்டியலில் இடம்பெறுவார். பதினைந்தாவது பிரதமரான நரேந்திர மோடியும் 2014-ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து இதுவரையில் அங்கிருந்துதான் பணியாற்றி வருகிறார்.
நாட்டின் தலைநகரில் பிரதமரின் அலுவலகம் என்பது செங்கல், சிமென்ட், மணல் கலந்த வெறும் கட்டுமானம் அல்ல. அது நாட்டின் அதிகார மையம் என்பதோடு தேசத்தின் முக்கியமான அடையாள சின்னங்களில் ஒன்று. தடித்த சுவர்கள் மற்றும் மூடிய கதவுகளைக் கொண்ட சௌத் பிளாக் அறைக்குள் நடைபெற்ற ஒவ்வொரு அசைவும் இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்த சக்தி படைத்தவை.
நாட்டில் நடைபெறும் நல்லது, கெட்டது எதுவானாலும் அதற்கு பிரதமரின் அலுவலகம் பொறுப்பாக்கப்படும். அங்கிருந்து பணியாற்றுவோரின் மனநிலை ஒட்டுமொத்த நாட்டின் இயக்கத்தையும் வழிநடத்தும். அதாவது நாடும், மக்களும் நடக்கவேண்டிய பாதைக்கு வழிகாட்டுவதாக இருக்கும்.
போருக்கும்-அமைதிக்குமான இடமாகத் திகழ்ந்துள்ள சௌத் பிளாக், 1971-இல் நிகழ்ந்த இந்தியா-பாகிஸ்தான் போரின்போது 'வார்-ரூம்' ஆகச் செயல்பட்டது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இங்குதான் ராணுவத் தளபதிகளுடனும், ராஜதந்திரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டதாக வரலாறு பதிவு செய்கிறது.
அதுவரையில் பிரதமரின் செயலகமாக இருந்த சௌத் பிளாக் 1977-இல் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்தபோது, அதிகாரபூர்வமான 'பிரதமர் அலுவலகமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் நாட்டு மக்களால் மறக்க முடியாத பல வரலாற்று நிகழ்வுகளுக்கு சௌத் பிளாக்கின் நான்கு சுவர்களும் சாட்சியம் கூறுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2019-இல் அறிவிக்கப்பட்ட 'சென்ட்ரல் விஸ்டா' மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியான 'சேவா தீர்த்' வளாக கட்டுமானப் பணிகள் 2022-இல் தொடங்கப்பட்டு இப்போது நிறைவுபெற்றுள்ளன. இதன் திட்ட மதிப்பீடு ரூ. 1,189 கோடி. 78 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் அலுவலகம் 'சேவா தீர்த்'துக்கு இடமாற இருக்கிறது.
இந்த சேவா தீர்த், சௌத் பிளாக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இரும்புத் திரைக்கு ஈடானது சௌத் பிளாக் என்றால் அரசு நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மைக்கு சான்றாக 'திறந்தவெளி வடிவமைப்பு' கொண்டது 'சேவா தீர்த்'. எளிதான தகவல் தொடர்பு. கருத்துப் பரிமாற்றம், கலந்துரையாடலுக்கு ஏற்றது இந்த வடிவமைப்பு என்பது அதன் சிறப்பு.
1931-இல் பிரிட்டிஷ் கட்டட வடிவமைப்பாளரான சர் ஹெர்பர்ட் பேக்கர் என்பவரால் சௌத் பிளாக்-நார்த் பிளாக் ஆகிய இரண்டும் வடிவமைக்கப்பட்டன. தற்போதைய 'சேவா தீர்த்' அகமதாபாதைச் சேர்ந்த 'பத்மஸ்ரீ' விருதாளர் பிமல் ஹஸ்முக் படேலால் வடிவமைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திய அடிமைத்தன மன நிலையிலிருந்து மக்கள் விடுதலை பெற வேண் டும் என்ற பிரதமரின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த புதிய கட்டடம் ஓர் அடையாளச் சின்னம் என்றுகூடக் கூறலாம்.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை. 18 ஆம் நூற்றாண்டின் அமெரிக்க வெள்ளை மாளிகை. 19-ஆம் நூற்றாண்டின் பிரிட்டனின் வெஸ்ட் மின்ஸ்டர் மாளிகை, 20-ஆம் நூற்றாண்டின் சீன கிரேட் ஹால் ஆகியவை கலைநயமிக்க புகழ்பெற்ற கட்டடங்கள் மட்டுமல்ல. மாறாக, அந்தந்த நாடுகளின் இறையாண்மையின் அடையாளம். அவற்றுக்கு இணையான அதிகார மையமாக இன்று இந்தியாவின் சௌத் பிளாக் திகழ்கிறது.
அதிகார உறைவிடமான இந்த மாளிகைகள் அலங்காரமானவை என்றாலும் அவற்றுக்கான பொறுப்பும், கடமையும் பெரியது. அந்த மாளிகைகளில் குடியேறிய பிறகு புகழ்பெற்றவர்கள் உண்டு என்றால், குடியேறியவர்களால் மாளிகைகள் புகழ்பெற்றதும் உண்டு.
தென்னாப்பிரிக்காவில் 1994-இல் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் கருப்பின அதிபரான மறைந்த நெல்சன் மண்டேலா, அங்குள்ள 'யூனியன் பில்டிங்' முன்பாக நின்று தனது முதல் உரையை ஆற்றினார். அன்று முதல் அந்தக் கட்டடம் சிறப்பு பெற்றது. அது ஜனநாயகத்தின் தொடக்க சின்னமாக அந்நாட்டவரால் கொண்டாடப்படுகிறது. அந்தக் கட்டடத்தை வடிவமைத்தவர் தில்லி சௌத் பிளாக்கை வடிவமைத்த அதே சர் ஹெர்பர்ட் பேக்கர்தான்.
நாடு சுதந்திர தின நூற்றாண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் பிரதமர் அலுவலகம் இடம் மாறுவது புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இருக்க வேண்டும். நாட்டின் நீடித்த நிலைத்த மட்டுமல்லாது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும், தற்சார்புடைய வல்லரசாக மட்டுமல்லாது நல்லரசாகவும் திகழ வழிகோல வேண்டும். அனைவரையும் அரவணைத்து சம வாய்ப்புக்கு இடமளிக்கும் வகையில் 'சேவா தீர்த்' இயங்கும் என்று எதிர்பார்ப்போமாக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.