வரலாற்று மாற்றம்!
59 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகள் அல்லாத வேறு எந்தவொரு திராவிடக் கட்சியின் கூட்டணியும் இல்லாத ஆட்சி அமைந்திருக்கிறது என்பது புதிய திருப்பம்.
தமிழகத்தின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பத்துக்கு வழிகோலி இருக்கிறது நடந்து முடிந்த 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள். 1952-இல் அன்றைய மதராஸ் ராஜதானி சட்டப்பேரவைக்குப் பிறகு இப்போதுதான் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத தொங்கு சட்டப்பேரவைக்கு வாக்களித்திருக்கிறார்கள் தமிழக மக்கள்.
ஏறத்தாழ 59 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகள் அல்லாத வேறு எந்தவொரு திராவிடக் கட்சியின் கூட்டணியும் இல்லாத ஆட்சி அமைந்திருக்கிறது என்பது புதிய திருப்பம்.அரசியல் முன் அனுபவம் இல்லாத ஒருவர் தனது தலைமையில் புதிய கட்சியைத் தொடங்கி எந்தவித அடிப்படைக் கட்டமைப்பும் இல்லாத நிலையில் தேர்தலை சந்தித்து இந்த அளவிலான வெற்றியைப் பெற்றிருப்பது முன்னெப்போதும் கண்டிராத சாதனை.
தெளிவான தீர்ப்பு அமையாவிட்டாலும் கூட, விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஒரு சில இடங்களே தேவைப்படும் அளவிலான தனிப்பெரும் சக்தியாக உருவாகி இருப்பது ஒரு வகையில் ஆறுதல். அதே நேரத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு உதிரிக் கட்சிகளின் ஆதரவில்தான் ஆட்சி அமைக்க நேர்கிறது என்பது, ஆட்சியின் ஸ்திரத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்து, ஆட்சியில் தொடர்வதை உறுதிப்படுத்தும்போது, பதவியும், அதிகாரமும் பெரும்பான்மையை உறுதிப்படுத்திக் கொடுக்கும் என்பதை முன்னுதாரணங்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
கட்சிகள் பிளவுபடுவதும், நிலையான ஆட்சி நிறுவப்படுவதும் இனிமேல் இயல்பான நீட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் இருந்து இந்தியா விடுபட்ட ஆகஸ்ட் 15, 1947-இல் புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றிய அன்றைய மதராஸ் ராஜதானியின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரில் தொடங்கி, நேற்று முதல்வராக ஜார்ஜ் கோட்டை அலுவலகத்தில் அமர்ந்து கோப்பில் கையொப்பம் வைத்த நடிகர் ஜோசப் விஜய் வரையில் தமிழகம் 15 முதல்வர்களைச் சந்தித்து விட்டது. அரசமைப்பு சாசனத்தில் இடைக்கால முதல்வர் என்று ஒன்று இல்லை என்பதால், ஒரு சில நாள்களே பதவி வகித்த நாவலர் நெடுஞ்செழியனையும் முதல்வர் பட்டியலில் இணைத்தாக வேண்டும்.
1967-இல் கூட்டணிகள் அமைந்ததைத் தொடர்ந்து, 2016-இல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 136 இடங்களில் 40.80% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
அதற்குப் பிறகு இப்போது விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 234 இடங்களில் தனித்துப் போட்டியிட்டு 34.92% வாக்குகளுடன் 108 இடங்களைப் பெற்றிருக்கிறது. கட்சி தொடங்கிய இரண்டாண்டுகளில் நடந்த எந்தத் தேர்தலிலும் பங்கு பெறாமல், வழக்கமான தொகுதிவாரி பிரசாரத்தை மேற்கொள்ளாமல், முக்கியமான இடங்களில் மட்டும் பொதுக்கூட்டங்களை நடத்தி தனது பிரசாரத்தை முதல்வர் விஜய் கட்டமைத்துக் கொண்டதேகூட புதுமையான அணுகுமுறைதான்.
பிரதமர்களும், தேசியத் தலைவர்களும் கடைப்பிடிக்கும் பாணியில் அவரது பிரசாரம் அமைந்தது. அது மட்டுமல்ல, சமூக ஊடகங்களின் மூலம் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்ததும்கூட புதியதொரு பரப்புரைக்கு முன்னுதாரணமாகி இருக்கிறது.
தவெகவின் சார்பில் களமிறக்கப்பட்ட பெரும்பாலான வேட்பாளர்களுக்குப் பொருளாதாரப் பின்னணியோ, அரசியல் பின்னணியோ கிடையாது. அவர்களது முகமும், பெயரும்கூடத் தொகுதி வாக்காளர்களுக்கு அறிமுகமானதல்ல. 234 தொகுதிகளுக்கும் களமிறக்கப்பட்ட வேட்பாளர் ஒவ்வொருவரும் விஜய்தான் என்கிற கருத்தை ஆழமாகப் பதிவு செய்ததும், தவெகவின் சின்னமான 'விசில்' கூடுதலாக மக்களின் கவனத்தை ஈர்த்ததும் அந்தக் கட்சி வேட்பாளர்கள் வாக்குகளை அள்ளிக் குவிக்க வழிகோலின என்பதும் நடைபெற்ற தேர்தல் படைத்திருக்கும் சாதனைகள்.
108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், முதல்வர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தவெகவுக்கு 107 உறுப்பினர்கள்தான் உள்ளனர். திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்டவற்றின் ஆதரவுடன் 120 இடங்கள் பெற்று தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க இருக்கிறார் முதல்வர் விஜய்.
'ஜோசப் விஜய் எனும் நான்' என்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதைத் தொடர்ந்து, வழக்கத்துக்கு மாறாக உரையாற்றி கூடியிருந்த தனது ரசிகர்களுக்கும், கட்சியினருக்கும் அவர் விடுத்த சில நியாயமான வேண்டுகோள்கள் அவர்களால் பின்பற்றப்பட வேண்டும்- மக்கள் பணத்திலிருந்து நான் ஒரு பைசாகூடத் தொட மாட்டேன். எனக்கு அது அவசியமில்லை. இந்த விஜய் தப்பு பண்ண மாட்டான்; தப்பு பண்ணவும் விட மாட்டான்-அது யாராக இருந்தாலும் சரி. ஜெயித்து விட்டோம், ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம். அந்த எண்ணம் இருந்தால் இந்த நிமிஷமே அழித்து விடுங்கள்'' என்கிற அவரது வாக்குறுதியை அவரது கட்சியினர் நினைவில் கொண்டு செயல்பட்டால்தான், இப்போது கிடைத்திருக்கும் பேராதரவு தொடரும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
முதல்வர் விஜய் நினைப்பதுபோல நிர்வாகம் அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. கடந்த 60 ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருக்கும் நடைமுறைகளை மாற்றி பிரித்து மேய்வது சுலபமல்ல. லஞ்சம் வாங்கிப் பழக்கப்படாதவர்களாக இருந்தாலும், லஞ்சம் கொடுத்துப் பழகி விட்டவர்களால் 'ஞானஸ்நானம்' செய்யப்பட்டு விடுவார்கள் என்பதை முதல்வர் விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நல்லது-கெட்டது; கல்யாணம்-துக்கம் என்று எதுவானாலும் எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மக்களை நேரில் போய் விசாரிப்பதும், கரன்ஸி நோட்டுகளை அன்பளிப்பாக வழங்குவதும் நடைமுறையாகி விட்டன என்றால், கோயில், திருவிழா என்றால் எம்.எல்.ஏ. பணம் தர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பணம் வாங்காமல் வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காளர்கள், அதேபோல எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்கும் நிலையை முதல்வர் விஜய்யின் ஆட்சி உருவாக்கினால் மட்டுமே, அவரது ஆட்சியை வரலாறு பொற்கால ஆட்சியாகப் பதிவு செய்யும். முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் ஜோசப் விஜய்க்கு 'தினமணி' வாசகர்கள் சார்பில் வாழ்த்துகள்!