முகப்பு
கல்வி

தனியார் எம்.பி.பி.எஸ். : நன்கொடை எவ்வளவு?

சென்னை, மே 21: தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். நன்கொடை ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை இருக்கும்.   பி.இ. படிப்புகளில் சேருவதற்கான கட

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:02 PM
பகிர்:

சென்னை, மே 21: தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். நன்கொடை ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை இருக்கும்.

  பி.இ. படிப்புகளில் சேருவதற்கான கட் - ஆஃப் மதிப்பெண் அதிகரிப்பு, தகவல் தொழில்நுட்பத் துறை சரிவு ஆகியவை காரணமாக எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

  எம்.பி.பி.எஸ். படிப்புக்கு போட்டி அதிகரித்துள்ளதால், பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்பிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

  தமிழகத்தில் 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,483 எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டுமே உள்ளன. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வரும் ஜூன் 3-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. விண்ணப்பக் கட்டணம் ரூ. 500.

  கடந்த ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கக் கூடும் என்பதால், மொத்தம் 18 ஆயிரம் விண்ணப்பங்களை அச்சிட மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங்கள்: சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு 65 சதவீத இடங்களை அளிக்க ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டன.

  மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 283 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.

  இவற்றில் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியின் 100 எம்.பி.பி.எஸ். இடங்களை 150 இடங்களாக அதிகரிக்க மத்திய அரசுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. இதனால் அரசு ஒதுக்கீட்டு மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 252 - -லிருந்து 283 - ஆக உயர்ந்துள்ளது.

அரசு ஒதுக்கீடு எம்.பி.பி.எஸ். கட்டணம்: சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரம்: மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி - ரூ.3 லட்சம்; கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி - ரூ. 2.25 லட்சம்; கன்னியாகுமரி மாவட்டம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி - ரூ.2.40 லட்சம்; ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரி - ரூ.1.30 லட்சம்.

தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்கள்: சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை மருத்துவக் கல்லூரி, எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி, குரோம்பேட்டை பாலாஜி மருத்துவக் கல்லூரி, சென்னை படூர் செட்டிநாடு மருத்துவக் கல்லூரி, சென்னை வேலப்பஞ்சாவடி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி, சென்னை தண்டலம் சவீதா மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகள் தலா 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் பல்கலைக்கழக அந்தஸ்துடன் செயல்பட்டு வருகின்றன.

  இதனால், பிளஸ் 2 தேர்வில் பெற்ற 50 சதவீத மதிப்பெண் அடிப்படையில் தாங்களே நுழைவுத் தேர்வு நடத்தி எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை இவை பெற்றுள்ளன. மேலும் இவை அரசு ஒதுக்கீட்டுக்கு ஒரு இடம்கூட அளிக்காமல், 150 இடங்களையும் நன்கொடை மூலம் நிரப்பிக் கொள்ளும்.

நன்கொடை எவ்வளவு? டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி, சவீதா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். சீட் விலை ரூ.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  பல்கலைக்கழக அந்தஸ்துடன் இந்த மருத்துவக் கல்லூரிகளில் நன்கொடை கட்டணம் தவிர ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ. 3.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை செலுத்த வேண்டியிருக்கும். செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் ஒரு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு நன்கொடையாக ரூ. 25 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

  அரசு ஒதுக்கீட்டுக்கு 97 இடங்களை அளிக்கும் மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் உள்ள 53 நிர்வாகத் தரப்பு இடங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் வரை நன்கொடை நிர்ணயிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →