முகப்பு
கல்வி

'நீட்' அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு: நாளை முதல் கலந்தாய்வு

மருத்துவம், பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. நாளை முதல் கலந்தாய்வு

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:


சென்னை: மருத்துவம், பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. நாளை முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு பெறும்வகையில் உருவாக்கப்பட்ட அவசரச் சட்ட முன்வரைவை மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி இருந்தது. அந்த சட்டமுன்வரைவுக்கு சட்ட அமைச்சகம் உள்ளிட்ட 3 மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்திருந்தன.

இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவசரச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க முடியாது என்று மத்திய அரசு வழக்குரைஞர் தெரிவித்தார். நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து தகுதி காண் நுழைவுத் தேர்வு ('நீட்') அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்துமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உடனே தொடங்கி செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தமிழகத்தில் 'நீட்' தேர்வு தகுதி அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 23) வெளியிடப்பட்டு நாளை வியாழக்கிழமை (ஆக 24) முதல் கலந்தாய்வு நடைபெறும் என உள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 3,536 பொது மருத்துவ இடங்கள் உள்ளன. அதேபோன்று, 100 பல் மருத்துவ இடங்கள் உள்ளன. அதேபோன்று, சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்கள் உள்ளன. குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,445 இடங்கள் உள்ளன. மீதமுள்ள இடங்கள் தமிழக அரசுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் ஒப்பளிக்கும் இடங்களாகும்.

முதல் கட்டமாக நாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். ஆகஸ்ட் 25-ஆம் தேதியில் இருந்து வழக்கமான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும்.

மாநில ஒதுக்கீட்டில் உள்ள மாணவர்களுக்கும் புதன்கிழமை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். செப்டம்பர் 10-ஆம் தேதி வரை பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை முடிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →