இயந்திரங்களின் அடிப்படை குறித்த அனைத்து விவரங்கள், அவற்றின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் பிரிவே இயந்திரவியல் பொறியியல் (மெக்கானிக்கல் என்ஜினியரிங்). இதன் மூலம் கருவிகள், சாதனங்களின் அடிப்படை செயல்பாடுகளைக் கற்றுக் கொள்ள முடியும். இரு சக்கர, நான்கு சக்கர வாகன வடிவமைப்பு, புதிய கருவிகள் வடிவமைப்பில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் இத்துறையைத் தேர்ந்தெடுக்கலாம்.
அடிப்படைப் பொறியியல் படிப்புகளில் ஒன்றான இயந்திரவியல் பொறியியல் படிப்பு குறித்து மாணவர்களிடையே தவறான புரிதல் நிலவுகிறது. ஆனால், இயந்திரவியல் பொறியியல் படிப்புக்கு எப்போதுமே மதிப்பு இருக்கிறது. எல்லோருமே கணினி அறிவியலை நோக்கிச் செல்வதற்கு பதிலாக வடிவமைப்பில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் இத்துறைக்கு வந்தால், அவர்களது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்கிறார் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பதிவாளர் பி.கே. ஸ்ரீவித்யா.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: இயந்திரவியல் பொறியியல் பட்டப்படிப்பு படித்தால் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு இருக்கிறது. ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதே இயந்திரவியல் பொறியியல் என்கிறோம். குண்டூசியில் தொடங்கி கப்பல், விமானம், ஏவுகணை உள்பட அனைத்து பொருள்களின் உற்பத்தியை நாம் இயந்திரவியலாக படிக்கிறோம். அந்த வகையில் வாஷிங் மெஷின், தொலைக்காட்சிப் பெட்டி, தொலைபேசி, கைப்பேசி, கணினி போன்றவற்றை தயாரிப்பதிலும் இயந்திரவியல் உள்ளது.
உற்பத்தி நிறுவனத்தில் இயக்குதல் மிக, மிக முக்கியமானது. மின்சாரத்துக்கு தேவையான நிலக்கரி, கற்கரி போன்றவை 30 ஆண்டுகளுக்குத்தான் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை வருங்காலத்தில் பயன்பாட்டுக்கு வரும். எனவே, அதைச் சார்ந்த சூரியஒளி மின் சக்தி, காற்றாலை மின் சக்தி, புவி ஆற்றல் போன்றவற்றில் மின் உற்பத்தி இருக்கும். இது தொடர்பாகவும் இயந்திரவியல் பொறியியல் படிப்பில் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
வடிவமைப்பு, உற்பத்தியில்... ஆட்டோமேடிக், ரோபோடிக்ஸ் பயன்பாட்டில் வந்துவிட்டதன் விளைவாக, உற்பத்தி துறை மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஆட்டோமேஷனை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. இதேபோல, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பயன்பாடுகளும் பரவலாகி வருகின்றன. இதையெல்லாம் இயந்திரவியல் பொறியியலில் உள் வாங்கிக் கொண்டு, வடிவமைப்பு, உற்பத்தி துறையில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரு நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு பரவலாகிவிட்டது.
நான்கு பிரிவுகளில் வேலைவாய்ப்பு... இயந்திரவியல் பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டில் மேற்படிப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய 4 பிரிவுகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.), இந்திய விண்வெளி கழகம் (இஸ்ரோ), ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், பெல் நிறுவனம், செயில், தேசிய அனல் மின் கழகம், ரயில்வே, மாநிலப் போக்குவரத்து நிறுவனங்கள், கடற்படை உள்ளிட்ட நிறுவனங்களில் இயந்திரவியல் அமைப்புகள் இருப்பதால், அங்கெல்லாம் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தனியார் நிறுவனங்களில் உற்பத்தி சார்ந்த துறையில் வேலைவாய்ப்பு நிறைய இருக்கிறது. வெளிநாட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், பைப்பிங் நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்பைப் பெறலாம். பொதுவாக, இயந்திரவியல் பொறியியல் படித்தவர்களுக்கு பன்முகத் திறன் இருப்பதால், மெக்கட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் துறைகளிலும் வேலைவாய்ப்பு பெற முடியும்.
ஊதியத்தைப் பொருத்தவரை ஆண்டுக்கு ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சம் வரை கிடைக்கும். அதற்கு தேவையான அளவுக்கு நம்முடைய திறனை மேம்படுத்திக் கொண்டால் கூடுதலாக ஊதியம் பெறலாம். மற்ற துறைகளில் தொடக்கத்தில் அதிக ஊதியம் கிடைத்தாலும், காலப்போக்கில் குறைந்துவிடும்.
ஆனால், இயந்திரவியல் பொறியியல் துறையில் தொடக்கத்தில் ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் கிடைத்தாலும், வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் நம்முடைய திறனை மேம்படுத்திக் கொண்டால் காலப்போக்கில் அதிக ஊதியம் கிடைக்கும். இயந்திரவியல் பொறியியல் படிப்பில் சேர பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். தொழிற்கல்விப் பிரிவுகளைப் படித்திருந்தாலும் இப்படிப்பில் சேரலாம் என்றார் ஸ்ரீவித்யா.
இதையும் படிக்க...
மேலும் படிக்க...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.