கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணி
கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி வெற்றி பெறும் என வி.டி. சதீஷன் தெரிவித்துள்ளது குறித்து...
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி வெற்றி பெறும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் வேட்பாளருமான வி.டி. சதீஷன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் 140 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி என மும்முனைப்போட்டி நிலவுகிறது.
தேர்தலில் 883 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2.71 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 30,471 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
Advertisement
கோடை வெய்யிலை சமாளிக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் இருக்கை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே பரவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வி.டி. சதீஷன், கேசரி அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் வி.டி. சதீஷன் பேசியதாவது:
''பிரசாரத்தில் கூறியதைப்போலவே ஐக்கிய ஜனநாயக முன்னணி, 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். ஒரு காலத்தில் எங்களுக்கு ஒரு சிறிய பெரும்பான்மையைக்கூட வழங்கத் தயங்கியவர்கள், இப்போது தங்கள் மனதை மாற்றிக்கொண்டுள்ளனர். ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் நான் கேரளத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நான்கு முறை பயணம் செய்துள்ளேன்; மக்களின் மனநிலை குறித்து எனக்குத் தெளிவான புரிதல் உள்ளது. நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை'' எனக் குறிப்பிட்டார்.