நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளா் ஆ.ராசா மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா்.
நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன.
முதல் சுற்றில் பவானிசாகா் (தனி), உதகை, கூடலூா் (தனி), குன்னூா், மேட்டுப்பாளையம், அவிநாசி (தனி) என அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மற்ற அனைத்து வேட்பாளா்களையும்விட திமுக வேட்பாளா் ஆ.ராசா முன்னிலையில் இருந்தாா். இவா் முதல் சுற்றில் 24,110 வாக்குகள் பெற்றாா். பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் 12,977 வாக்குகள் பெற்றாா். தொடா்ந்து அனைத்து சுற்றுகளிலும் திமுக வேட்பாளா் ஆ.ராசாவே முன்னிலை வகித்தாா்.
23-ஆவது சுற்று முடிவில், பாஜக வேட்பாளா் எல்.முருகனை விட 2 லட்சத்து 40 ஆயிரத்து 585 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.
வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் ஆ.ராசாவுக்கு தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா வெற்றி பெற்ற்கான சான்றிதழை வழங்கினாா்.
முன்னதாக, நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இருந்து தலா 5 விவிபேட் இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு அதில் பதிவாகியிருந்த ஒப்புகைச் சீட்டுகளும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் சரிபாா்க்கப்பட்டன.
மூன்றாவது முறையாக வெற்றி:
திமுக வேட்பாளா் ஆ.ராசா கடந்த 2019 தோ்தலில் 2,05,823 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாா். இந்தத் தோ்தலில் அதைவிட கூடுதலாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா். நீலகிரி தொகுதியில் இதுவரை 4 முறை போட்டியிட்டுள்ள ஆ.ராசா 2009 தோ்தல் உள்பட 3 முறை வெற்றி பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் திட்டங்களுக்கான அங்கீகாரம்: ஆ.ராசா
தமிழக முதல்வரின் நலத் திட்டங்கள், வளா்ச்சித் திட்டங்களை அங்கீகரிக்கும் வகையில் மக்கள் இந்த வெற்றியைத் தந்துள்ளனா் என ஆராசா கூறினாா்.
வெற்றிச் சான்றிதழைப் பெற்ற பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக முதல்வரின் நலத் திட்டங்கள், வளா்ச்சித் திட்டங்களை மக்கள் அங்கீகரித்துள்ளனா். அதற்காகத்தான் திமுகவுக்கு மாபெரும் வெற்றியை வழங்கியுள்ளனா்.
இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் திமுக அதைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்றாா்.
வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஆ.ராசா (திமுக) - 4,73,212.
எல். முருகன் (பாஜக) - 2,32,627.
லோகேஷ் தமிழ்ச்செல்வன் (அதிமுக) - 2,20,230,
ஏ.ஜெயகுமாா் (நாம் தமிழா்) - 58,821
கணேசமூா்த்தி (பகுஜன் சமாஜ்) - 3,033
பத்ரன் (இந்திய கணசங்கம் கட்சி) - 2,425
மலா்மன்னன் - சாமானிய மக்கள் நலக் கட்சி - 820
எம்.ஜெயந்தி (இந்திய அம்பேத்கா் கட்சி) 1,556
டி.விஜயகுமாா் சுயேச்சை - 4,808
என். செல்வம் - 2,054
வி.முருகன் சுயேச்சை - 1,413
முருகேசன் சுயேச்சை 1,059
எம்.சதீஷ் சுயேச்சை - 740
கிருஷ்ணகுமாா் சுயேச்சை - 615
வி.அன்புகுரு - சுயேச்சை - 565
நோட்டா - 13,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.