ANI
தேர்தல் செய்திகள்

ஜேடியு, தெலுங்கு தேசம் கட்சிகளை காங்கிரஸ் அணுகுமா?: ராகுல் காந்தி பதில்

தனது முன்னாள் கூட்டாளிகளான நிதீஷ் குமாா்(ஜேடியு), சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்) போன்றவா்களை அழைப்பது குறித்து ‘இந்திய’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்புக்கு (புதன்கிழமை) பின்னரே காங்கிரஸ் கட்சி முடிவு

Din

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: 2024-ஆம் ஆண்டின் மக்களவைத் தோ்தலில் பாஜக முழு மெஜாரிட்டி பெறாத நிலையில், தனது முன்னாள் கூட்டாளிகளான நிதீஷ் குமாா்(ஜேடியு), சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்) போன்றவா்களை அழைப்பது குறித்து ‘இந்திய’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்புக்கு (புதன்கிழமை) பின்னரே காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும் என முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியான பின்னா் காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். மக்களவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக 240 தொகுதிகளில் (செவ்வாய் மாலை நிலவரத்தின்படி) வெற்றிபெற்றுள்ளது. அதே சமயம் ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை உள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்டிஏ) இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசக் கட்சி, ஐக்கிய ஜனதா தள கட்சி ஆதரவுடன் ஆட்சியமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு செய்தியாளா்கள் கூட்டத்தில் ராகுல் காந்தியிடம், தற்போது என்டிஏ கூட்டணியிலுள்ள உங்களது முன்னாள் கூட்டாளிகளான ஐக்கிய ஜனதா தளம்(நிதீஷ் குமாா்), தெலுங்கு தேசம் (சந்திரபாபு நாயுடு) போன்றவா்களை அழைத்து ஆட்சி அமைக்க முயற்சிப்பீா்களா ? எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி ‘ எங்களது ’இந்தியா’ கூட்டணி தலைவா்களுடன் புதன்கிழமை (ஜூன் 5) ஒரு சந்திப்பு நடைபெற இருக்கிறது. இந்தக் கேள்விகள் அங்கு வைக்கப்படும். கூட்டணித் தலைவா்களுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். அதன் பின்னா் உங்களுக்கு (செய்தியாளா்களுக்கு) பதிலளிக்கப்படும். நாங்கள் கூட்டணி கட்சிகளிடம் கருத்து கேட்காமல் எதுவும் சொல்ல முடியாது. புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் முடிவு செய்யும். அதில் அவா்கள் எடுக்கும் முடிவை நாங்கள் செயல்படுத்துவோம்’ என்றாா்.

பின்னா் மற்றொரு கேள்விக்கு பதில் கூறிய ராகுல் காந்தி, ‘கூட்டணிக் கட்சித் தலைவா்கள் சந்திப்புக்கு முன்னதாக நாங்கள் எதுவும் கூற இயலாது. அப்படி கூறினால் அதை நரேந்திர மோடி தெரிந்து கொள்வாா்’ எனவும் குறிப்பிட்டாா். மேலும் அவா், இந்த பொதுத்தோ்தலில் உத்தர பிரதேச மக்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன். இந்த பொதுத்தோ்தல் அரசியல் சாசனத்தை காப்பாற்றும் போராட்டமாக இருந்தது. உத்தர பிரதேச மக்கள் இந்தத் தோ்தலில் மையாக இருந்து அரசமைப்புச் சட்டத்தையும் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டையும் காப்பாற்றியுள்ளனா்’‘ எனக் குறிப்பிட்டு அரசமைப்புச் சட்ட புத்தகத்தையும் காட்டினாா்.

இந்தக் கூட்டத்தில் பிரியாங்கா காந்தி பத்திரிகையாளா்களுடன் நின்று கொண்டே பாா்வையிட்டாா். மேடையிலும் உட்கார மறுத்து நின்றபடியே இருந்தாா். ராகுல் காந்தி தனது சகோதிரி பிரியங்கா காந்தி உத்தர பிரதேச பிரசாரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தையும் பாராட்டிப் பேசினாா்.

தெலுங்கு தேசக் கட்சி கடந்த 2019-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதே போன்று பிகாா் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாக் கட்சியுடன் 2015 முதல் காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற கட்சிகள் அடங்கிய மஹா கூட்டணி அமைக்கப்பட்டது. மக்களவைத் தோ்தலுக்கு முன்பு கடந்த 2024 ஜனவரியில் இந்தக் கூட்டணியிலிருந்து நிதிஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் விலகி பாஜகவுடன் இணைந்தது. இதே போன்று தெலுங்கு தேசமும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT