மத்தியில் புதிய அரசை முடிவு செய்வதற்கான மக்களவைத் தேர்தலின் ஏழாவது கட்ட வாக்குப் பதிவு, ஜூன் 1 சனிக்கிழமை, 57 தொகுதிகளில் முனைப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது.
பெருமளவிலான தொகுதிகளில் ஆறு கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், கடுங்கோடை வெய்யில், அனல்காற்று, பெருமளவில் வெப்பத்தால் உயிர்ப்பலிகள் ஆகியவற்றுக்கு இடையேதான் இன்றைய ஏழாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.
எட்டு மாநிலங்கள் மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிகளில், குறிப்பாக பஞ்சாபிலுள்ள அனைத்து 13 தொகுதிகளுக்கும் உத்தரப் பிரதேசத்தில் மீதியுள்ள – பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட - 13 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 9, பிகாரில் 8, ஒடிசாவில் 6, ஹிமாச்சலில் 4, ஜார்க்கண்டில் 3 மற்றும் மத்திய ஆட்சிப் பகுதியான சண்டீகரில் தேர்தல் நடைபெற்றது.
ஜூன் 1-ல் ஏழாவது கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 57 தொகுதிகளிலும்கூட, கடந்த தேர்தல்களைப் போலவே, அதிக அளவிலான தொகுதிகள், 30 தொகுதிகள், தற்போது மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வசம்தான் இருக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில் 13-ல் 11 தொகுதிகளும் பிகாரிலுள்ள 8 தொகுதிகளும் ஹிமாச்சலிலுள்ள 4 தொகுதிகளும் ஜார்க்கண்டில் 3-ல் 2 தொகுதிகளும் ஒடிசாவில் 6-ல் 2 தொகுதிகளும் பஞ்சாபில் 13-ல் 2 தொகுதிகளும் சண்டீகர் தொகுதியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் இருக்கின்றன.
ஒடிசாவில் இரு தொகுதிகளில் மட்டுமே இந்தக் கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை, சட்டப்பேரவைக்கும் சேர்த்துத் தேர்தல் நடைபெறும் நிலையில், பிஜு ஜனதா தளத்தை எதிர்த்துக் கடுமையான பிரசாரத்தை, ஆட்சியைக் கைப்பற்றிவிடுவோம் என்கிற அளவுக்கு, பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டது. முதல்வர் நவீன் பட்நாயக் உடல்நிலை பற்றியெல்லாமும் பிரதமர் மோடியே பிரசாரக் கூட்டத்தில் பேசினார். நவீனுக்கு நெருக்கமான, நேரடி அரசியலில் குதித்த தமிழரான முன்னாள் ஐ.ஏ.எஸ். அலுவலர் வி.கே. பாண்டியனைத் தாக்கும் வகையில் - புரி கோவில் சாவிகள் தமிழகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுவிட்டன - மோடியில் தொடங்கி கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் கடும் தாக்குதல்களைத் தொடுத்தனர். இவையெல்லாம் எந்த அளவுக்குத் தேர்தலில் எதிரொலிக்கும், பிஜு பட்நாயக்கிடமிருந்து தொகுதிகளைப் பறிக்கும் எனத் தெரியாவிட்டாலும் கூட்டணி மிகவும் நம்பிக்கை கொண்டிருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் பகுஜன சமாஜ் கொண்டிருந்த ஆதரவு கரைந்துபோய், போட்டி என்பது இருமுனைப்பட்டு விட்டதாகக் கருதப்படும் நிலையில், பகுஜன் ஆதரவு வாக்குகள் – தலித் மக்களின் வாக்குகள் - யாருக்குச் சென்றடையப் போகின்றன என்பதும் மிக முக்கியமான பங்காற்றும் எனக் கருதப்படுகிறது.
ஜூன் 1-ல் வாக்குப் பதிவு நடைபெற்ற பகுதிகளில் பெரும்பாலானவை முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு உள்ளவை, ஆனால், இவர் சார்ந்த ராஜ்புத் சாதியினர் இந்தத் தேர்தலில் பெருமளவில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் 11 தொகுதிகளையும் மீண்டும் பா.ஜ.க. கைப்பற்றி விடுமா? இழக்க நேரிடுமா?
மேற்கு வங்கத்தில் ஜூன் 1-ல் தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் எதுவும் இவர்களிடம் இல்லை. பஞ்சாபிலும் இரு தொகுதிகள் மட்டும்தான் இருக்கின்றன. இங்கேயெல்லாம் கிடைக்கும் வரை லாபம்தான்.
ஜூன் 1-ல் வாக்குப் பதிவு நடைபெற்ற 57 தொகுதிகளில், வழக்கம்போல, இந்தியா கூட்டணியின் வசமிருப்பவை 19 தொகுதிகள்தான். மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளும் பஞ்சாபில் 13 தொகுதிகளில் 9 தொகுதிகளும் ஜார்க்கண்டில் மூன்றிலொன்றும் இவர்களிடம் இருக்கின்றன.
உத்தரப் பிரதேசத்திலும் பிகாரிலும் கடந்த மக்களவைத் தேர்தலில் துடைத்துப் போட்டாற்போல தோற்றுப் போய்விட்டிருந்த இந்தியா கூட்டணி இந்த முறை இவ்விரு மாநிலங்களிலும் பல தொகுதிகளைக் கைப்பற்றிவிட முடியும் என நம்புகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்த்து நடைபெறும் பிகாரில் அனைத்து இடங்களையும் கைப்பற்றுவோம் என்று பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அணி மாறிக்கொண்டிருக்கும் முதல்வர் நிதீஷ் குமார் மீதுள்ள அதிருப்தியும் லாலு பிரசாத் யாதவ் ஆதரவும் காங்கிரஸை இவ்வாறு நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது.
ஒடிசாவில் பிஜு ஜனதா தளமும் பிகாரில் ஐக்கிய ஜனதா தளமும் எந்த அளவுக்கு வெற்றிகளைக் கைப்பற்றவிருக்கின்றன என்பது தேசிய அளவிலான கூட்டணிகளிலும் பிரதிபலிக்கும்.
மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளும் திரிணாமுல் காங்கிரஸிடம்தான் இருக்கின்றன. இந்தியா கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு என்று அறிவிக்கும் அளவுக்கு இறங்கிவந்துள்ள முதல்வர் மமதா பானர்ஜி, இவற்றை மீண்டும் கைப்பற்றுவதன் மூலம் தன் பலத்தைத் தக்க வைத்துக்கொள்ள முயலுகிறார். ஆனால், அதை எப்படியும் முறியடிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக பாரதிய ஜனதா செயல்பட்டுவந்துள்ளது.
ஜூன் 1 தேர்தலில் களம் கண்டவர்களில் பெரிய நட்சத்திரம் - பிரதமர் நரேந்திர மோடி. இவர் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வெற்றி உறுதி என்றே கருதப்படுகிறது. வாக்கு வித்தியாசத்தை அதிகரித்துக்காட்ட வேண்டும் என்று நினைக்கிறது பாரதிய ஜனதா. ஆனால், வாரணாசியிலேயே இந்தியா கூட்டணி வேட்பாளர் அஜித் ராய்க்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியும் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவும் பெரும் பேரணியையும் நடத்திக்காட்டியுள்ளனர்.
பிகாரில் பாட்னா சாஹிப்பில் பா.ஜ.க. சார்பில் ரவிசங்கர் பிரசாத்தும் மேற்கு வங்கத்தில் டயமண்ட் துறைமுகத்தில் திரிணாமுல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜியும் பலியாவில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மகன் நீரஜ் சேகரும் இன்றைய தேர்தலில் முக்கிய புள்ளிகளில் சிலர்.
ஜூன் 1 ஏழாவது கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 57 தொகுதிகளுடன் மக்களவையின் 543 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு முடிவுக்கு வந்துவிட்டது.
மாலையில் வாக்குப் பதிவு முடிந்தவுடன் கருத்துக் கணிப்புகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. நரேந்திர மோடிக்கும் பாரதிய ஜனதாவுக்கும் ஆதரவாகத்தான் ஊடகங்கள் கணிப்புகளை வெளியிடும், மக்கள் வாக்களித்து முடிவு தெரியப் போகும் நிலையில் எதற்காக இந்தக் கணிப்பு? எதற்காக அதன் மீது விவாதம்? என்று ஊடக விவாதங்களில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்திருந்த காங்கிரஸ் கடைசி நேரத்தில் பங்கேற்கலாம் என முடிவு செய்தது.
ஜூன் 4 – வாக்கு எண்ணிக்கை. மக்களவையில் பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவது யார் எனத் தெரிந்துவிடும். தேர்தல் நடைமுறைகள் தொடங்கி ஏறத்தாழ 3 மாதங்களாகிவிட்டன. முடிவு தெரிய இன்னும் 3 நாள்களேதான் இருக்கின்றன. ஆக்கப் பொறுத்துவிட்டு, ஆறப் பொறுக்க முடியாதா? காத்திருக்கலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.