பஞ்சாப் மாநிலத்திலுள்ள 13 தொகுதிகளுக்கும் மக்கவைத் தேர்தலின் கடைசிக் கட்டத்தில், வரும் ஜூன் 1 ஆம் தேதி, வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
பஞ்சாபைப் பொருத்தவரை இந்த மக்களவைத் தேர்தல் சற்று வித்தியாசமானது. ஏனெனில், தேர்தலில் வாக்குப் பதிவில் என்ன அதிசயம் நிகழப் போகிறது என்பதை எளிதில் கணிக்க முடியாத வகையில் பலமுனைப் போட்டி.
2022 சட்டப்பேரவைத் தேர்தலில் நல்ல பெரும்பான்மையுடன் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி கட்சி. 117 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் ஆம் ஆத்மியின் பலம் – 92. எதிர்க்கட்சியான காங்கிரஸில் 18 உறுப்பினர்கள். சிரோமணி அகாலிதளம் – 3, பா.ஜ.க. - 2, பகுஜன் சமாஜ் – 1, சுயேச்சை – 1.
பாரதிய ஜனதா கட்சியும் சிரோமணி அகாலி தளமும் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தனித்தனியே போட்டியிடுகின்றன.
அருகில் இருக்கும் தில்லியில் இந்தியா கூட்டணியின் பெயரில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தொகுதிகளைப் பகிர்ந்துகொண்டு இணைந்து போட்டியிட்டாலும் இங்கே எதிரெதிரே மல்லுக்கு நிற்கின்றன.
1996 முதல் 2020 வரை கூட்டணியாக இருந்த சிரோமணி அகாலிதளமும் பாரதிய ஜனதா கட்சியும்கூட தனித்தனியே களம் காண்கின்றன.
அனைத்துத் தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது. சிம்ரஞ்சித் சிங் மான் தலைமையிலான சிரோமணி அகாலிதளம் (அமிர்தசரஸ்) கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது.
2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் – பா.ஜ.க., ஆம் ஆத்மி என நடைபெற்ற மும்முனைப் போட்டியில் 41 சதவிகித வாக்குகளைப் பெற்று 8 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. பாரதிய ஜனதாவும் சிரோமணி அகாலிதளமும் தலா இரு தொகுதிகளையும் ஆம் ஆத்மி ஒரு தொகுதியையும் கைப்பற்றியது (ஆனால், அடுத்த மூன்றாண்டுகளில் நடந்த பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது).
மாநிலத்தில் ஆட்சிக் காலத்தில் பாதியைக் கடந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி, அதன் சாதனைகளைச் சொல்லுமா, மக்களிடம் இருக்கக் கூடிய அதிருப்திகளை எதிர்கொண்டு சமாளிக்குமா? எனத் தெரியவில்லை. எனினும், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் முனைப்பான பிரசாரத்தை மேற்கொண்டனர்.
கட்சித் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதால் கிடைத்த அனுதாபத்தை வாக்குகளாக்க ஒருபக்கம் ஆம் ஆத்மி முனைகிறது. மத்தியிலுள்ள பாரதிய ஜனதா அரசைக் கடுமையாக விமர்சிக்கிறது. மாநிலத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையில் எம்எல்ஏக்களை வைத்திருக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸை விமர்சிப்பதில் இவர்களுக்கு சிக்கல் இருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்து நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை எல்லாம் ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியினரும் விவசாயிகளும் ஆம் ஆத்மியினரைக் களத்தில் வெறுப்பேற்றுகின்றனர்.
மத்தியில் ஆட்சி மாற்றம் அவசியம் ஏன்? என்பதை முன்வைத்துப் பிரசாரம் செய்யும் காங்கிரஸ் கட்சியோ, விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது தாங்கள் ஆதரித்த விவசாயிகளைப் பெரிதும் நம்புகிறது. பாரதிய ஜனதா கட்சியின் மீது கடும் எரிச்சலில் இருக்கும் விவசாயிகள் அனைவரும், பா.ஜ.க.வுக்கு மாற்று என்கிற வகையில், தங்களையே ஆதரிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறது.
மேலும், காங்கிரஸுக்கு ஆதரவாக இருக்கும் பிரதான அம்சம் அதன் தேர்தல் அறிக்கை. விவசாயக் கடன் ரத்து, வேலைவாய்ப்பு, அக்னிவீர் போன்றவையும் ராகுல் காந்தி அளிக்கும் வாக்குறுதிகளும் தேர்தல் பிரசார உரைகளும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.
மாநில அரசில் தனித்துவமான இடத்தைப் பெறும் நோக்கில் தனித்துப் போட்டியிடும் மிகப் பழமையான கட்சியான சிரோமணி அகாலிதளம் முனைப்பாகச் செயல்படுகிறது.
சிரோமணி அகாலிதளத்தின் உறவைப் பிரிந்து தனித்துப் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியோ வேளாண் சட்டங்கள் மற்றும் போராடியவர்கள் மீதான தாக்குதல்கள் காரணமாகப் பெற்றுள்ள விவசாயிகளின் கடுமையான அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வளவு காலமாகக் கூட்டணியில் இருந்து பழகிவிட்ட பாரதிய ஜனதாவுக்கு இது புதிய அனுபவமாக இருக்கும்.
குறிப்பிடும்படியான ஆதரவு இல்லையென்பதுடன் கடந்த காலத்தில் இருந்துவந்த ஆதரவும் குறைந்தகொண்டே சென்ற நிலையில் பகுஜன் சமாஜ கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது.
நான்கு முனைப் போட்டியில் எப்படி வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரும் லூதியாணா வேட்பாளருமான அமரீந்தர் சிங் ராஜா வாரிங், மத்தியில் பாரதிய ஜனதா அரசையும் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு நன்றாகத் தெரியும் காங்கிரஸ்தான் ஒரே மாற்று என்பது. சிரோமணி அகாலிதளத்தைப் பொருத்தவரை ஆட்டத்திலேயே அந்தக் கட்சி இல்லை என்கிறார்.
காங்கிரஸிலிருந்து கட்சி மாறியவர்தான் இந்தத் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் ரவ்நீத் சிங் பிட்டூ. காங்கிரஸுக்குத் தொலைநோக்கு இல்லை, காந்திகளின் குடும்பக் கட்சியாகிவிட்டது என்று குற்றம் சாட்டுகிறார் இவர்.
பஞ்சாபில் மத்தியிலுள்ள ஆட்சி மட்டுமின்றி மாநிலங்களின் பிரச்சினைகளும் சேர்ந்தே தேர்தலில் அலசப்படுகின்றன. ஆளுங்கட்சிகளுக்கு எதிரான அதிருப்திகளே தங்களுக்கு வெற்றி தேடித் தரப் போதுமானதாக இருக்கும் என காங்கிரஸ் நம்புகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நம்பிக்கை. மக்கள் என்ன நினைக்கிறார்கள்? ஜூன் 1-ல் வாக்குப்பதிவு, 4- ல் முடிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.