முகப்பு
சிறப்புச் செய்திகள்

234 தொகுதிகளிலும் இரட்டை இலை.. 230 தொகுதிகளில் உதயசூரியன்!

234 தொகுதிகளிலும் இரட்டை இலை.. 230 தொகுதிகளில் உதயசூரியன் போட்டியிட்டதைப் பற்றி...

Updated On : 5 ஏப்ரல், 2026 at 11:52 PM
ஜெயலலிதா - கருணாநிதி.
பகிர்:

தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தல் ஒரு வரலாற்று நிகழ்வை பதிவு செய்தது. ஆம், 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம் போட்டியிட்ட அந்த வரலாற்று நிகழ்வு அரங்கேறியது.

அதிமுகவின் தேர்தல் வரலாற்றிலும் முதல்முறையாக அந்த சட்டப்பேரவைத் தேர்தலில்தான் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக மற்றும் கூட்டணியின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, 1972-இல் அதிமுகவை தொடங்கினார் எம்ஜிஆர். அதன்பிறகு, முதல்முறையாக 1977 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 200 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டனர். பின்னர், 1980-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் 177 தொகுதிகளிலும், 1984-ஆம் ஆண்டு தேர்தலில் 155 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

Advertisement

எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையில் அதிமுக (ஜெ) அணி எனவும், ஜானகி எம்ஜிஆர் தலைமையில் அதிமுக (ஜா) அணி எனவும் அக்கட்சி பிளவுபட்டது. அதன் காரணமாக 1989 பேரவைத் தேர்தலில் அதிமுகவின் அதிகாரபூர்வமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதிமுக (ஜெ) அணி வேட்பாளர்கள் 198 தொகுதிகளில் சேவல் சின்னத்திலும், அதிமுக (ஜா) அணி வேட்பாளர்கள் 175 தொகுதிகளில் இரட்டைப் புறா சின்னத்திலும் போட்டியிட்டனர்.

பின்னர் இரு அணிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து, அதிமுக ஒன்றுபட்டது. 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 168 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 1996 தேர்தலில் 168 தொகுதிகளிலும், 2001-இல் 141 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்துடன் அதிமுக வேட்பாளர்கள் தேர்தலைச் சந்தித்தனர்.

2006-ஆம் ஆண்டில் 188 தொகுதிகளிலும், 2011-ஆம் ஆண்டு 165 தொகுதிகளிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் களம் கண்டது. பின்னர், 2016-இல் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னமே களம் கண்டது. 227 இடங்களில் அதிமுக-வும், மனிதநேய ஜனநாயக கட்சி 2 இடங்களிலும், இந்திய குடியரசுக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, தமிழ் மாநில முஸ்லிம் லீக் ஆகியவை தலா ஓரிடத்திலும் போட்டியிட்டன. 234 இடங்களில் களம் கண்ட இரட்டை இலைக்கு 135 இடங்களில் வெற்றி கிடைத்தது. மறைந்த ஜெயலலிதா இந்த வரலாற்று நிகழ்வை அரங்கேற்றினர்.

இதற்கு முன்னோடியாக 2014-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாநிலக் கட்சி மேற்கொண்ட மிகவும் துணிச்சலான முடிவாக அமைந்தது. 39 இடங்களில் போட்டியிட்ட அதிமுக-வுக்கு 37 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.

இந்த வெற்றி அளித்த துணிச்சலில்தான், 2016-இல் 234 பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை களம் இறக்கினார் ஜெயலலிதா.

இதேபோல, 1949-இல் தொடங்கப்பட்ட திமுக, 1957-இல் முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டது. 117 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களாகவே திமுக-வினர் போட்டியிட்டனர். அப்போது, உதயசூரியன் சின்னத்தை பெற்ற திமுக இன்றுவரை ஒரே சின்னத்தில் போட்டியிடுகிறது. 1962 தேர்தலில் 143 இடங்களில் உதயசூரியன் சின்னம் போட்டியிட்டது.

1967 தேர்தலில் வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தபோது, 174 இடங்களில் உதயசூரியன் களம் கண்டது. 1971-இல் 203 இடங்களில் களம் கண்டது. பின்னர், 1977-இல் அதிகபட்சமாக 230 இடங்களில் உதயசூரியன் களம் கண்டது. கருணாநிதி தலைமையில் இந்தத் தேர்தலை சந்தித்தது திமுக.

-ஆர்.முருகன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments