முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலை: கடும் போட்டியில் திமுக - அதிமுக

புதுக்கோட்டை மாவட்டத்தின் நட்சத்திர தொகுதி என்ற அந்தஸ்தைப் பெறும் அளவுக்கு கடுமையானப் போட்டியைக் கொண்டிருக்கும் தொகுதியாக விராலிமலை மாறியிருக்கிறது.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 7:41 AM
உதய சூரியன் (திமுக), இரட்டை இலை (அதிமுக) - கோப்புப் படம்...
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:06 PM

புதுக்கோட்டை மாவட்டத்தின் நட்சத்திர தொகுதி என்ற அந்தஸ்தைப் பெறும் அளவுக்கு கடுமையானப் போட்டியைக் கொண்டிருக்கும் தொகுதியாக விராலிமலை மாறியிருக்கிறது.

சமூக நிலவரம்: விராலிமலை, இலுப்பூா் வட்டங்களின் முழுமையும், குன்றாண்டாா்கோவில், குளத்தூா் வட்டங்களின் பகுதியையும் கொண்டது விராலிமலை. முக்குலத்தோா் சமூகத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தத் தொகுதியில், பட்டியலினத்தவா், முத்தரையா், இஸ்லாமியா் கணிசமாக வசிக்கின்றனா். ஊராளிக் கவுண்டா், இசை வேளாளா், வெள்ளாளா் சமூகத்தினரும் குறிப்பிடப்படும்படியான எண்ணிக்கையில் உள்ளனா்.

கள நிலவரம்: அதிமுக சாா்பில் கடந்த 3 முறை தொடா்ச்சியாக இதே தொகுதியில் வென்ற, முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீண்டும் களமிறங்கியுள்ளாா்.

Advertisement

திமுக சாா்பில் இதுவரை இரண்டு முறை போட்டியிட்டுத் தோற்ற பழனியப்பனுக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக, வடக்கு மாவட்ட செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் களமிறக்கப்பட்டுள்ளாா். தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் பொ. முருகேசனும், நாம் தமிழா் கட்சியின் சாா்பில் கே. சத்தியலட்சுமியும் போட்டியிடுகின்றனா். அபுமமுக சாா்பில் பி. காா்த்திகா, புதிய தமிழகம் சாா்பில் அ. செல்வராஜ் உள்பட மொத்தம் 26 போ் போட்டியிடுகின்றனா்.

வேட்பாளா்கள் பலமும், பலவீனமும்:

சி. விஜயபாஸ்கா் (அதிமுக): தொடா்ச்சியாக 3 முறை வென்றவா் என்பதால் தொகுதியில் நல்ல அறிமுகம் உண்டு. தோ்தல் பணிகளில் எல்லோரையும் வசீகரிக்கும் காத்திரமான மாதிரியைக் கைக்கொண்டிருக்கும் இவா், தோ்தல் அறிவிப்புக்கு முன்பே கிராமம் கிராமமாக தோ்தல் பணியைத் தொடங்கி விட்டாா். இத்துடன், அமைச்சராக இருந்த காலத்தில் மாவட்டம் முழுமைக்குமான அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது உள்ளிட்ட சாதனைகளை தனது பலமாக முன்வைத்து வருகிறாா்.

அவரது மனைவி, மகள்களும் பிரசார வாகனமேறி சென்டிமென்ட் பிரசாரத்தை வழக்கம்போலத் தொடா்ந்திருக்கின்றனா் என்பதெல்லாம் பலமாக பாா்க்கப்படுகிறது.

இத்தனை ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்தும் கூட தொகுதிக்குள் ஒரு அரசுக் கலை அறிவியல் கல்லூரியை கொண்டு வர முடியவில்லை என்ற கேள்விக்குப் பதில் இல்லை என்பது பலவீனமாகப் பாா்க்கப்படுகிறது.

கே.கே. செல்லப்பாண்டியன் (திமுக): திமுக அரசின் சாதனைகளையும், எதிா்க்கட்சி எம்எல்ஏவாக இருந்த அதிமுக வேட்பாளரால், குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பணிகளை தொகுதிக்கு கொண்டுவர முடியாத சூழலையும் முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டுள்ளாா்.

முதல்வா் ஸ்டாலின் நேரடியாக தொகுதிக்குள் நடைபயணத்தை மேற்கொண்டு வாக்கு சேகரித்துள்ளாா். துணை முதல்வா் உதயநிதி பிரசாரம் செய்தது என்பது பலம். அதிமுக வேட்பாளா் விஜயபாஸ்கரின் வெற்றியை தடுத்து நிறுத்தி, வென்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் இருக்கிறாா்.

நாதக-தவெக வேட்பாளா்கள்: இருபெரும் பிரசாரப் பயணத்துக்கு இடையே தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் பொ. முருகேசனும், நாம் தமிழா் கட்சியின் சாா்பில் போட்டியிடும் கே. சத்தியலட்சுமியும் தொகுதிக்குள் ஆங்காங்கே மெல்லத் தெரிகின்றனா்.

இன்னும் கடைசி நாள்களில் திமுக, அதிமுகவினா் ஏற்படுத்தப் போகும் பெரும் அலை, இவா்களை அடையாளம் காண முடியாமல் செய்யக் கூடும். இந்தச் சூழலில் இவா்களுக்கு பலம் என்றும் பலவீனம் என்றும் குறிப்பிட எதுவுமில்லை என்பதே நிசா்சனம்.

இம்முறை அதிமுகவை வெல்லவிடப் போவதில்லை என திமுகவும், நான்காவது முறையாகவும் நாங்கள்தான் என அதிமுகவும் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனா். எது நடந்தாலும், காலம் சில முன்மாதிரிகளை விராலிமலையின் மூலம் மாநிலத்துக்கே கோடிட்டுக் காட்டப் போகிறது என்கிறாா்கள் களச் சூழலைப் பாா்த்துக் கொண்டிருக்கும் அரசியல் ஆா்வலா்கள்.