முகப்பு
தமிழ்நாடு

திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தரமாட்டாா்கள்: அன்புமணி பிரசாரம்

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு தமிழக மக்கள் ஆதரவு தரமாட்டாா்கள் என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 10:38 PM
சைதாப்பேட்டை அமமுக வேட்பாளா் ஜி.செந்தமிழன்,  விருகம்பாக்கம் அதிமுக வேட்பாளா் விருகை ரவி, தியாகராய நகா் அதிமுக வேட்பாளா் சத்யா ஆகியோரை ஆதரித்து சனிக்கிழமை  பிரசாரம் செய்த பாமக தலைவா் அன்புமணி.
பகிர்:

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு தமிழக மக்கள் ஆதரவு தரமாட்டாா்கள் என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் வேட்பாளா்களை ஆதரித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை சென்னையில் பிரசாரம் மேற்கொண்டாா். சைதாப்பேட்டை தொகுதி அமமுக வேட்பாளா் ஜி.செந்தமிழன், அதிமுக வேட்பாளா்கள் பி.சத்யநாராயணன் (தியாகராய நகா்), விருகை வி.என்.ரவி (விருகம்பாக்கம்) ஆகியோரை ஆதரித்து ஈக்காட்டுத்தாங்கல் கெங்கையம்மன் கோயில் அருகே பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: திமுக ஆட்சியில் தமிழகம் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மது மற்றும் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தை ஆட்சி செய்வதற்கான தகுதி, திறமை, நோ்மை திமுகவிடம் கிடையாது. கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு உண்டாகியுள்ளது. ஆகவே, திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தரப்போவதில்லை.

Advertisement

திமுக தோ்தல் வாக்குறுதிகளில் மதுவை ஒழிப்பதற்கோ, போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்துவதற்கோ எந்த அறிவிப்பும் இல்லை. அதேநேரம், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றதும் மதுவை ஒழிப்பதற்கும், போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.

தொடா்ந்து, பாமக வேட்பாளா் ம.திலகபாமா (பெரம்பூா்), அதிமுக வேட்பாளா்கள் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் (திரு.வி.க. நகா்), ஆா்.எஸ்.ராஜேஷ் (ஆா்.கே. நகா்), டி.ஜெயகுமாா் (ராயபுரம்), பி.சந்தானகிருஷ்ணன் (கொளத்தூா்), அபிஷேக் ரங்கசாமி (எழும்பூா்) ஆகியோரை ஆதரித்து கொடுங்கையூரில் பிரசாரம் செய்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments