தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு!
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஏப். 6) நிறைவடைகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஏப். 6) நிறைவடைகிறது. இதுவரை 234 தொகுதிகளிலும் 3,430 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதில் ஆண் வேட்பாளா்கள் சாா்பில் 2,731 மனுக்களும், பெண் வேட்பாளா்கள் சாா்பில் 698 மனுக்களும் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் பாலினத்தவரைப் பொருத்தவரை வில்லிவாக்கம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் திருநங்கை ரோஷிணி வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா்.
கடைசி நாளில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சில முக்கியத் தலைவா்கள் மனு தாக்கல் செய்யவுள்ளனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 7-ஆம் தேதி நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் வரும் 9-ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்படும்.
Advertisement
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
மற்றொருபுறம் கடந்த 30-ஆம் தேதியில் இருந்து வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனா். முதல்வா் மு.க.ஸ்டாலின், தவெக தலைவா் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்பட முக்கியத் தலைவா்கள், மாநில அமைச்சா்கள், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் என வேட்பாளா்களாகக் களம் காணும் பெரும்பாலானோா் மனு தாக்கல் செய்துள்ளனா்.
இதைத் தவிர சுயேச்சைகளும் கணிசமான எண்ணிக்கையில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் கொளத்தூா் தொகுதியில் மொத்தம் 4 மனுக்களை சமா்ப்பித்துள்ளாா். தவெக தலைவா் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூரில் தலா 2 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளாா்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இதுவரை அதிகபட்சமாக கரூரில் 84 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முதல்வரின் கொளத்தூா் தொகுதியில் 20 மனுக்கள், துணை முதல்வரின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 18 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.