முகப்பு
தமிழ்நாடு

விஜய்யுடன் கூட்டணியா? கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்வது என்ன?!

விஜய்யுடன் கூட்டணி அமைப்பது பற்றி கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசித்து வருவதாக செய்திகள் பரவி வருகின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் / தவெக தலைவர் விஜய் /இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் - கோப்புப் படம்
பகிர்:

விஜய்யுடன் கூட்டணி அமைப்பது பற்றி கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசித்து வருவதாக செய்திகள் பரவிய நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் அதனை மறுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில் 234 தொகுதிகளுக்கும் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

Advertisement

ஆளும் திமுக அரசின் கூட்டணி 73 இடங்களைப் பிடித்து ஆட்சியை இழந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக முக்கியத் தலைவர்கள் பலரும் தோல்வியடைந்துள்ளனர்.

திமுக கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்க இன்று கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

விஜய் ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காததால் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் விஜய்க்கு ஆதரவளிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கூட்டணி ஆட்சி அமைக்க விஜய் அழைத்தால் மாநிலக் குழுவைக் கூட்டி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியானது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அவ்வாறு பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும், “அந்த செய்தியில் வெளியிடப்பட்ட கருத்துகள் எனது கருத்துகள் அல்ல. நான் அப்படிப்பட்ட எந்த கருத்தையும் எந்த ஊடகத்திற்கும் வழங்கவில்லை. எனது பெயரை பயன்படுத்தி தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது” என்று அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

விஜய் தனது கட்சியினருடன் இன்று ஆலோசனை நடத்தி வரும் நிலையில் தமிழக அரசியல் களத்தில் வரும் நாள்களில் பல மாற்றங்கள் ஏற்படும் என கணிக்கப்படுகிறது.

summary

Alliance with Vijay? What Do the Communist Parties Say?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.