புதை உயிரிப் படிவ அருங்காட்சியகம் 
தொகுதிகள்

அரியலூர்: அதிமுக - திமுக நேரடிப் போட்டி

அரியலூர் தொகுதியில் வரும் தேர்தலிலும் அதிமுக -திமுக நேரடியாக களமிறங்கும் எனத் தெரிகிறது. 

சி.சண்முகவேல்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்து நிலப்பரப்பாக மாறியதால் கனிம வளம் பெற்றுள்ள பூமி அரியலூர் மாவட்டம். திருமானூர் பகுதியில் நெல் சாகுபடியும், மற்ற பகுதியில் முந்திரி, கடலை, கரும்பு, சோளம் என தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

மேலும் இந்தப் பகுதியில் சுண்ணாம்புக் கல், ஜிப்சம் போன்ற கனிம வளங்கள் அதிகம் கிடைக்கின்றன. டைனோசர் முட்டை உள்ளிட்ட தொல்லுயிர் படிமங்கள் அதிகளவில் கிடப்பதால் 'புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா' என்ற சிறப்புப் பெயர் அரியலூருக்கு உண்டும். மேலும் இந்தியாவிலேயே சிமெண்ட் உற்பத்தியில் தனித்தன்மை பெற்ற தொகுதியாக விளங்குகிறது அரியலூர். தற்போது இந்த தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த தாமரை எஸ்.ராஜேந்திரன் சட்டப்பேரவை உறுப்பினராகவும், அரசு தலைமைக் கொறடாகவும் உள்ளார்.

கரைவெட்டி பறவைகள் சரணாலயம்

ஒருங்கிணைந்த பெரம்பலூரில் இருந்து பிரித்து புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றதால், ஒரு வழியாய் 2007-இல் புதிய மாவட்டமாக உருவான இழுபறி பின்னணி அரியலூருக்கு உண்டு. ஆயினும் தனி மாவட்டமாக உருவான நோக்கத்தை அரியலூர் இன்னமும் அடையவில்லை.

தொகுதியின் சிறப்பு: இந்த தொகுதியில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம், ஏலாக்குறிச்சி வீரமாமுனிவரால் உருவக்கப்படட்ட அடைக்கலமாதா திருத்தலம், திருமழபாடி வைத்தியநாதசுவாமி, கல்லங்குறிச்சி வரதராஜபெருமாள் கோயில்கள் உள்ளன. அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை, ராம்கோ சிமெண்ட் ஆலை, டால்மியா, ஆதித்திய பிர்லா அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலை, செட்டிநாடு சிமெண்ட் ஆலை ஆகிய ஆலைகள் உள்ளன. நாட்டிலேயே சிமெண்ட் உற்பத்தியில் முதலிடம் பெற்றத் தொகுதியாகும்.

நில அமைப்பு: கொள்ளிட ஆற்றின் கரைகளில் அமைந்துள்ள திருமானூர், தா.பழூரில் சில பகுதிகளை உள்ளடக்கியது இந்த அரியலூர் தொகுதி. அதிக கிராமங்கள் நிறைந்த இந்த தொகுதியானது காவிரி பாசன டெல்டா பகுதியாக உள்ளது. நெல், கரும்பு, மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் இந்த தொகுதியில் அதிகளவில் சுண்ணாம்புக் கல், ஜிப்சம் உள்ளிட்டவைகள் உள்ளன. இங்குள்ள கொள்ளிட ஆற்றில் போடப்பட்டுள்ளஆழ்துளை குழாய்கள் மூலம் தஞ்சாவூர், நாகை, பெரம்பலூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

புதை உயிரிப் படிவ அருங்காட்சியகம்

இந்த தொகுதியில் திருமானூர் மற்றும் அரியலூர் என இரு ஊராட்சி ஒன்றியங்கள், 79 ஊராட்சிகள், அரியலூர் நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

சாதி, சமூகங்கள்: அரியலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,31,335 ஆண் வாக்காளர்கள், 1,32,670 பெண் வாக்காளர்கள், 7 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,64,012 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த தொகுதியில் அதிகமாக வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், தாழ்த்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சம அளவில் உள்ளனர்.

அடுத்தப்படியாக உடையார், மூப்பனார், முதலியார் உள்ளிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். திருமானூர், பூண்டி, ஏலாக்குறிச்சி, கல்லகம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அடர்த்தியாக உள்ளனர். கணிசமாக இஸ்லாமியர்களும் உள்ளனர். இப்படி தனக்கென சிறப்பான இடத்தைப் பிடித்துள்ள இந்த அரியலூர் தொகுதியில் சிமெண்ட் ஆலைகளைத் தவிர வேறு எந்த தொழிற்சாலைகளும் கிடையாது. விவசாயத்தை நம்பியே இப்பகுதி மக்களின் வாழ்வாதரமாக உள்ளது.

கட்சிகளின் செல்வாக்கு: அரியலூர் தொகுதியைப் பொருத்தவரை திமுக, அதிமுக என இரு கட்சிகளும் சமபலத்துடன் உள்ளன. அடுத்தபடியாக பாமக, விசிக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

சிமெண்ட் ஆலைகள்

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வென்றவர்கள்: 1952-இல் நடைபெற்ற தேர்தலில் சுயேட்சை பழனியாண்டியிடம் காங்கிரஸ் வேட்பாளர் ராசா தோற்றார். 1957-இல் திமுக வேட்பாளர் நாராயணன் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்க படையாச்சியிடம் தோற்றுப் போனார். 

1962-இல் திமுக வேட்பாளர் நாராயணன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் தோற்றுப் போனார். 1967-இல் திமுக வேட்பாளர் சிவபெருமாள், காங்கிரஸ் வேட்பாளர் கருப்பையாவிடம் தோற்றார். 1971-ல் திமுக வேட்பாளர் சிவபெருமாள் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சாம்பசிவம் மூப்பனார் தோற்றார்.

1977-ல் அதிமுக வேட்பாளர் அசோகன் போட்டியிட்டு திமுக வேட்டடாளர் ஆறுமுகத்திடம் தோற்றார். 1980-இல் திமுக வேட்பாளர் ஆறுமுகம் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984-இல் அதிமுக வேட்பாளர் புருஷோத்தமன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆறுமுகம் தோற்றார்.

1989-இல் திமுக வேட்பாளர் த. ஆறுமுகம் மீண்டும் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1991-இல் அப்போது திமுகவில் இருந்தவரும், இப்போதைய மதிமுக மாவட்டச் செயலருமான கு. சின்னப்பா இந்தத் தொகுதியில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் மணிமேகலையிடம் தோற்றார்.

சிமெண்ட் ஆலைகள்

1996-ல் இந்தத் தொகுதி திமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு, அந்தக் கட்சி சார்பில், பாளை து. அமரமூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001-ல் இந்தத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது, அரியலூர் ஆறுமுகம் மகன் த.ஆ.கதிரவன் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் ப. இளவழகனிடம் தோற்றார்.
2006-இல் மீண்டும் இந்தத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டபோது, து. அமரமூர்த்தி மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011-இல் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பாளை து.அமரமூர்த்தி அதிமுக வேட்பாளர் துரை.மணிவேலிடம் தோற்றார்.

2016-ல் அதிமுக வேட்பாளர் தாமரை.எஸ்.ராஜேந்திரன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரனைவிட 2,043 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

2016 தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:

தாமரை.எஸ்.ராஜேந்திரன் (அதிமுக) -88,523, எஸ்.சிவசங்கரன்(திமுக)86,480, ராம.ஜெயவேல்(தேமுதிக)13,599, க.திருமாவளவன்(பாமக)13,529, ஆர்.விஜயகுமார்(சுயே)1,348, சி. பாஸ்கர்(ஐ.ஜே.கே)1330, த.மாணிக்கம்(நாம் தமிழர்)1,146, வி.சவரி ஆனந்தம் (பகுஜன் சமாஜ் கட்சி) 675, டி.வீரமணி(சுயே) 995, பி.பழனிவேல்(சுயே) 577, ஆர்.பத்மநாபன்(சுயே) 276, டி.மாதேஸ்வரன் (விடியலை தேடும் இந்தியர்கள்) 231, ஏ.சத்தியசீலன்(லோக் ஜன சக்தி) 291, கே.கிருஷ்ணன்(சுயே) 182, நோட்டாவுக்கு 1,896 வாக்குகள் பதிவாகின.

கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்கள்: 

அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, அரசு சிமெண்ட் ஆலையில் மேலும் ஒரு உற்பத்திப் பிரிவு தொடங்கியது, வழக்குரைஞர்களின் பல ஆண்டுகள் கோரிக்கையான அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து நிலம் பெற்று தந்தது, அரியலூர் ரயில்வே மேம்பாலம், மருதையாற்றுப் பாலம், மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை, வேப்பங்குழியில் மேம்பாலம் உள்ளிட்ட 6 பாலங்கள், சுத்தமல்லி நீர்த்தேக்கம், கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரியை தூர்வாரியது மற்றும் அரசின் நலத் திட்டங்கள் செயல்படுத்தியது, ஜயங்கொண்டத்தில் அரசு கலைக்கல்லூரி பெற்றுத் தந்தது உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளன. 

பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள்: பெரம்பலூரில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக உருவான நோக்கத்தை அரியலூர் இன்னமும் அடையவில்லை. மாவட்டத்தின் தலைநகரத்திலுள்ள பேருந்து நிலையம் சுகாதாரம் சீர்கெட்டு உள்ளது. போதுமான அடிப்படை வசதிகள் கிடையாது. கட்டடங்கள் அனைத்தும் இடியும் நிலையில் உள்ளது. ஆகவே இந்த பேருந்து நிலையத்தினுள்ள அனைத்து கட்டடங்களையும் இடித்துவிட்டு, புதிய கட்டடங்களை கட்டி, முன்மாதிரி பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும். இங்குள்ள ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இங்குள்ள சிமெண்ட் ஆலைகள் வெளியேற்றும் மாசு, அகழ்ந்து அப்படியே விடப்பட்ட சுரங்கங்கள், சிமெண்ட் ஆலைக்காக இயங்கும் லாரிகளால் சாலை விபத்துகள் அதிகம் நிகழ்கிறது. ஆகையால் சிமெண்ட் ஆலைகளுக்கும், சுண்ணாம்புக் கல் சுரங்கத்துக்கும் கனரக வாகனங்கள் செல்ல தனிச்சாலை அமைக்க வேண்டும். காலாவதியான சுரங்கள் அனைத்தும் குறுங்காடுகளாகவும், மேச்சல் நிலங்களாகவும் அல்லது ஏரி, குளங்களாகவும் மாற்ற வேண்டும்.

போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தினசரி மார்க்கெட்டை புறவழிச் சாலையில் ஒருங்கிணைந்த வணிக வளாகமாக அமைக்க வேண்டும். அதிக நெல் சாகுபடி செய்யும் பகுதியான திருமானூர் பகுதியில் நவீன அரிசி ஆலை உருவாக்க வேண்டும். திருமானூரைத் தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டத்தை உருவாக்கி, அப்பகுதியில் தீயணைப்பு நிலையம், அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டமான கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி பறவைகள் சரணாலயமான கரைவெட்டி ஏரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொகுதி முழுவதும் கொள்ளிடம் கூட்டு குடிநீர்த் திட்டம் கொண்டு வர வேண்டும். அரியலூர் நகரத்தில் 14 ஆண்டுகளாக நடைபெற்று வரும் புதைசாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அரியலூர் நகராட்சியுடன், அருகிலுள்ள ஊராட்சிப் பகுதிகளை இணைத்து, நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும். நகரப் பகுதியில் தரமான சாலைகள் அமைக்க வேண்டும். இப்படி தீர்க்கப்படாத கோரிக்கைகள் நிறைய உள்ளன.

மீண்டும் நேரடிப் போட்டியா?

அரியலூர் தொகுதியில் வரும் தேர்தலிலும் அதிமுக - திமுக நேரடிப் போட்டியில் களம் இறங்கும் எனத் தெரிகிறது. அதிமுகவைப் பொருத்தவரை, தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் தாமரை எஸ்.ராஜேந்திரன் மீண்டும் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

அதே சமயம் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான இளவழகன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் இளவரசன், முன்னாள் நகரச் செயலர் ஏ.எஸ்.எம். கண்ணன், முன்னாள் அரசு சிறப்பு வழக்குரைஞர் சாந்தி ஆகியோர் விருப்பமனு அளிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும், அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அரியலூர் தொகுதியைக் கேட்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி ஒதுக்கும் பட்சத்தில், மாவட்டத் தலைவர் குமார் விருப்பமனு அளிப்பார் என்று தெரிகிறது. திமுக சார்பில் எஸ்.எஸ்.சிவசங்கர் மீண்டும் போட்டியிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும்: கார்கே

ஆங்கிக அபிநயம்... சஞ்சிதா ஷெட்டி!

இதைச் செய்யாவிட்டால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குத் தடை! ஃபிஃபா எச்சரிக்கை!

பண்டிகை ஸ்பெஷல்... ஆக்ருதி அகர்வால்!

ஹிமாசலில் தொடரும் கனமழை: கடந்த 3 நாள்களில் அரசுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் இழப்பு!

SCROLL FOR NEXT