ஆற்காடு: மீண்டும் உதயசூரியன் உதிக்குமா?
ஆற்காடு தொகுதியில் அதிமுக, திமுக நேரடியாகக் களம் காண முனைப்பு காட்டி வருகிறது. எனினும் அதிமுக கூட்டணியில் பாமகவும் தொகுதியைப் பெற முயற்சித்து வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர் ஆற்காடு. நவாபுகளின் ஆட்சிக் காலத்தில் ஆற்காடு தலைநகராக விளங்கியது. வாணிபத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி சார்பில் ஆங்கிலேயப் படை தளபதி ராபர்ட் கிளைவ் இந்தியாவில் முதலில் கைப்பற்றிய பகுதி ஆற்காடு.
ஆற்காடு நகரிலுள்ள தில்லி நுழைவுவாயில், ராஜா ராணி குளம், பச்சைக்கல் மசூதி, சோழர் காலத்தில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில் போன்றவை வரலாற்று சிறப்புக்கு சான்றுகள் ஆகும்.
ஆற்காடு தொகுதியில் முக்கியத் தொழில் விவசாயம். சில பகுதிகளில் நெசவுத் தொழிலும், பீடித் தொழிலிலும் உள்ளது. ஆற்காடு பிரியாணியும் புகழ்பெற்ற இனிப்பு வகையான மக்கன்பேடாவும் சிறப்புப் பெற்றது.
ஆற்காடு கிச்சிலி என்ற நெல் ரகம் ஆற்காட்டிற்கு பெருமை சேர்க்கிறது. கர்நாடக மாநிலம் நந்தி துர்கம் மலையில் தொடங்கி ஆந்திரம் வழியாக பாய்ந்து செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கடலில் கலக்கும் பாலாற்றில் ஆற்காடு அடுத்த புதுப்பாடியில் அணை கட்டப்பட்டுள்ளது.
ஆற்காடு சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் வாக்காளர்கள் 2 லட்சத்து 60 ஆயிரத்து 135. இதில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 652. பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 475. திருநங்கைகள் 8 பேர். ஆற்காடு தொகுதியில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். மொத்தம் 368 வாக்கு சாவடிகள் உள்ளன.
ஆற்காடு தொகுதியில் ஆற்காடு நகரம், கலவை, திமிரி, விளாப்பாக்கம் பேரூராட்சி. ஆற்காடு ஒன்றியத்தில் 25 ஊராட்சிகள். திமிரி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள். வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள். வேலூர் ஒன்றியத்தில் ஒரு ஊராட்சி அடங்கியுள்ளது.
ஆற்காடு சட்டப்பேரவை தொகுதி 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள், முதலியார், யாதவர்கள். நாயுடு, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரும் உள்ளனர்
இத்தொகுதியில் வென்றவர்கள்:
1952 எஸ். பஞ்சாசரம் செட்டியார் (காங்கிரஸ்)
1957 எஸ் காதர் ,ஷெரிப்( காங்கிரஸ்)
1962 முனிரத்தினம்(திமுக)
1967 ஆற்காடு நா.வீராசாமி(திமுக)
1971 ஆற்காடு நா வீராசாமி( திமுக)
1977 கே. ஜே .உய்யகொண்டான் (அதிமுக)
1980 ஏ. எம். சேதுராமன் (அதிமுக)
1984 த. பழனி( அதிமுக)
1989 டி .ஆர்.கஜபதி( திமுக)
1991 ஜி. விசுவநாதன்( அதிமுக)
1996 பி.என். சுப்பிரமணியன்( திமுக)
2001 பா. நீலகண்டன்(அதிமுக)
2006 கே.எல்இளவழகன் (பாமக)
2011 வி கே ஆர் சீனிவாசன் (அதிமுக)
2016 ஜெ எல் ஈஸ்வரப்பன் (திமுக)
இந்த தொகுதியில் இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் இரண்டு முறை காங்கிரஸ் கட்சியும் 6 முறை திமுகவும் 6 அதிமுகவும் ஒருமுறை பாமகவும் வெற்றி பெற்றுள்ளது.
மக்களின் கோரிக்கைகள்
இந்த தொகுதியில் ஆற்காடு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும். ஆற்காடு அடுத்து காவனூர் பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் ஆற்காடு-ஆரணி புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.
அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும், அரசு மருத்துவமனையில் குளிரூட்டப்பட்ட பிணவறை அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் உள்ளன.
ஆற்காடு தொகுதியைப் பொருத்தவரை கடந்த 2011 -2016 காலகட்டத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏ இருந்த காரணத்தால் பல கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்பட்டன. ஆனால் 2016-2021 வரை ஒரு சில பணிகள் தவிர வேறு எந்த புதிய திட்டப் பணிகளும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியிட வாய்ப்பு
இத்தொகுதியில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் ஏ.வி. சாரதி, மாவட்ட இணைச் செயலாளர் கீதா சுந்தர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி.கே.ஆர். சீனிவாசன், ஆற்காடு கிழக்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன், திமிரி கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.குமார் உள்ளிட்ட பலர் போட்டியிட கட்சித் தலைமையிடம் மனு கொடுத்துள்ளனர்.
திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ஜே.எல். ஈஸ்வரப்பன் மீண்டும் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளர் மருத்துவர் பி.எஸ். சரவணன், ஆற்காடு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேலூரைச் சேர்ந்த நீலகண்டன், திமிரி கிழக்கு ஒன்றியச் செயலாளர் அசோக், மாநில பொதுக்குழு உறுப்பினர் கரிகாலன் உள்ளிட்டோர் சீட்டு பெற முயற்சி செய்து வருகின்றனர்.
பாமக சார்பில் கல்லூரி நிறுவனர் ஏ.கே நடராஜன், அவரது மகன் ஏ.என். செல்வம், ஆற்காடு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எல். இளவழகன், பாமக மாவட்டச் செயலாளர் நல்லூர் சண்முகம் ஆகியோரும் சீட்டு பெற கட்சித் தலைமையிடம் மனு கொடுத்துள்ளனர்.