வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி, 2011-ஆம் ஆண்டு தொகுதிகள் மறுவரையறையின்போது புதிதாக உருவாக்கப்பட்டது. இத்தொகுதி முழுக்க, முழுக்க ஊரகப் பகுதிகளை உள்ளடக்கியது.
இத்தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண்கள் - 1,09,836
பெண்கள் - 1,14,389
ராணுவ வீரர்கள்- 1,953
இதரர் - 5.
மொத்த வாக்காளர்கள் - 2,26,183.
தொகுதியின் சிறப்பு
இங்குள்ள காவனூரில், புகழ்பெற்ற வேலூர் சிஎம்சி மருத்துவமனையின், கிளை மருத்துவமனை அமைந்துள்ளது. திமுக பொதுச் செயலர் துரைமுருகனின் சொந்த கிராமமான காங்குப்பம் இத்தொகுதியில் உள்ளது. மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற மகாதேவர் மலைக் கோயில், இத்தொகுதியில் அமைந்துள்ளது.
நில அமைப்பு: கே.வி.குப்பம், குடியாத்தம், காட்பாடி என 3 வருவாய் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளைக் கொண்டது. கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 39 ஊராட்சிகள், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஊராட்சிகள் என 73 ஊராட்சிகளையும் உள்ளடக்கியது இத்தொகுதி.
சாதி, தொழில்கள் அமைப்பு: ஆதிதிராவிடர்கள், வன்னியர்கள் இத்தொகுதியில் பெரும்பான்மையாக உள்ளனர். முதலியார்கள், செட்டியார்கள், யாதவர்கள், ரெட்டியார்கள் நாயுடு சமூகத்தினர் பரவலாக உள்ளனர். விவசாயம் மட்டுமே பிரதானத் தொழிலாக உள்ளது.
வென்றவர்கள், இரண்டாமிடம் பெற்றவர்கள்
2011 - செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி)
கே.சீதாராமன்(திமுக)
2016 - ஜி.லோகநாதன்(அதிமுக)
அமுலுவிஜயன்(திமுக)
இத்தொகுதியின் வெற்றிக் கணக்கைத் தொடங்கியது அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த இந்திய குடியரசுக் கட்சி. 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக நேரிடையாக போட்டியிட்டு வெற்றிபெற்றது. 2 தேர்தலிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றிவாய்ப்பை இழந்தனர்.
அரசியல் கட்சிகளின் செல்வாக்கு
திமுக, அதிமுகவைப் பொருத்தவரை தொகுதியில் இரு கட்சிகளும் ஏறத்தாழ சம நிலையிலேயே உள்ளன.
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்
2019- இல் கே.வி.குப்பம் தனி வட்டமாக அறிவிக்கப்பட்டது.
வடுகந்தாங்கல் ரயில்வே மேம்பாலம்.
நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது.
ஆர்.கொல்லபல்லியில், கொட்டாற்றின் குறுக்கே மேம்பாலம்.
செஞ்சி ஊராட்சியில் ஆயக்குளம் கானாற்றின் குறுக்கே சிறு மேம்பாலம்.
நிறைவேற்றப்படாத திட்டங்கள்
தொகுதியில் அரசு மகளிர்க் கலைக் கல்லூரி ஒன்றும், தொழிற்
கல்வி நிலையம் ஒன்றும் தொடங்க வேண்டும்.
இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
தீயணைப்பு நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும். பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும்.
போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்
அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற ஆர்வம் காட்டுகின்றன.
அதேநேரத்தில், தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அதிமுகவினர் ஆர்வமாக உள்ளனர். தொகுதியை தட்டிப் பறிக்க வேண்டும் என்பதில் திமுகவினர் குறியாக உள்ளனர். அதிமுக, திமுக இரு கட்சிகளும் நேரடியாக களம் காணவே வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
தன்னிறைவு எதிர்பார்ப்பு
முழுவதும் ஊரகப் பகுதிகளை மட்டுமே உள்ளடக்கியது கே.வி.குப்பம்(தனி) தொகுதி. அதிமுக தலைமையிலான கூட்டணி 2 முறை வெற்றிவாகை சூடியும் தொகுதியில் ஒரு சில திட்டங்களைத் தவிர சொல்லிக் கொள்ளும் படியாக, எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்பது தொகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது. ஆட்சியாளர்களின் போதுமான கவனம் இத்தொகுதியின்பால் ஈர்க்கப்படவில்லை என்பதும் பரவலான கருத்தாக உள்ளது.
இத்தொகுதி மக்கள், தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட குடியாத்தம் அல்லது காட்பாடி, வேலூரைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது.
போதுமான சாலை வசதி, கல்வி வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை முழுமையாகப்பூர்த்தி செய்து, இத்தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.