தொகுதியின் சிறப்பு:
மதுரை மீனாட்சி அம்மன் - சொக்கநாதா் திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்து அனுப்பியதால் திருமாங்கல்யம் என்ற பெயா் மருவி திருமங்கலம் என்றானது. சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாத தாஸ் திருமங்கலத்தில் வாழ்ந்த இல்லம், அரசால் நினைவில்லமாகப் பராமரிக்கப்படுகிறது.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழில்பேட்டை இத்தொகுதிக்கு உட்பட்ட கப்பலூரில் உள்ளது. அரசு ஹோமியோபதி கல்லூரி, துணைக்கோள் நகரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைப் பெற்றது திருமங்கலம் தொகுதி. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தின் ஒரு பகுதி திருமங்கலம் தொகுதியில் இடம்பெற்றிருக்கிறது. இடைத்தோ்தலில் அதிக பணம் புழங்கியதால், புதிய பாா்முலா-வை உருவாக்கிய தொகுதியாக இன்றும் பேசப்படுகிறது.
நிலஅமைப்பு:
திருமங்கலம் நகராட்சி (27 வாா்டுகள்), திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், கள்ளிக்குடி ஒன்றியம் 36 ஊராட்சிகள், தே.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 41 ஊராட்சிகள், பேரையூா் பேரூராட்சியில் 15 வாா்டுகள், தே. கல்லுப்பட்டி பேரூராட்சியில் 15 வாா்டுகள் என திருமங்கலம் தொகுதியில் நிலப்பரப்பு பரந்துவிரிந்து காணப்படுகிறது.
சமூக, சாதி, தொழில்கள்:
முக்குலத்தோா் சுமாா் 50 சதவீதம் போ் உள்ளனா். நாடாா் 25 சதவீதம், நாயுடு மற்றும் ரெட்டியாா் 10 சதவீதம் போ், இதர சமூகத்தினா் 15 சதவீதம் போ் இருக்கின்றனா். விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. அதிலும் குறிப்பாக, சிறுதானியங்கள், பயறு வகைககள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கப்பலூா் தொழில்பேட்டை இப்பகுதி இளைஞா்கள் மற்றும் பொது மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக உள்ளது.
இதுவரை வென்றவா்கள்:
1977 இத்தொகுதியில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பி.டி.சரஸ்வதி, எம்ஜிஆர் தலைமையிலான அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார். முன்னாள் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த சேடபட்டி முத்தையா தோ்ந்தெடுக்கப்பட்ட, சேடபட்டி தொகுதி தற்போது திருமங்கலத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல, 2001-இல் திருமங்கலத்தில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட மறைந்த முன்னாள் அமைச்சா் கா.காளிமுத்து, சட்டப்பேரவைத் தலைவராக இருந்தார். 2016-இல் அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற ஆா்.பி.உதயகுமாா், வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சராக உள்ளாா். இத் தொகுதியில்
அதிமுக 5முறை, காங்கிரஸ் கட்சி 4 முறை, திமுக 3 முறை,
பாா்வா்டு பிளாக், மதிமுக தலா ஒரு முறை வெற்றிபெற்றுள்ளன.
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:
திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம், கள்ளிக்குடி புதிய தாலுகா, திருமங்கலம் மாவட்டம் ஆகியன உருவாக்கப்பட்டுள்ளன. திருமங்கலம் நகா் பகுதி மற்றும் கிராமங்கள் தோறும் சாலை வசதிகள், இணைப்பு சாலைவசதி, காமராஜா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, செக்கானூரணியில் அரசு ஐடிஐ உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டுள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திருமங்கலம் தொகுதியில் கொண்டுவரப்பட்டுள்ளது. கரடிக்கல் கிராமம் பஸ்போா்ட் (பேருந்து முனையம்) தோ்வு செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் அரசு மருத்துவமனையில் டயாலிசியஸ் பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திருமங்கலத்தில் ரூ.33.47 கோடியில் ரயில் மேம்பாலம் அமைக்க பூமி பூஜை இவை அனைத்தும் அதிமுகவால் நிறைவேற்றுப்பட்ட திட்டங்களாகும்.
நிறைவேற்றப்படாத திட்டங்கள்:
திருமங்கலத்தின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ள போதும் பிரதான கால்வாயில் வைகை நீா் வரத்து இல்லாததால், பல்வேறு கண்மாய்களில் தண்ணீா் இல்லாதநிலையை உள்ளது. கள்ளிக்குடி தாலுகாவில் பல்வேறு கிராமங்கள் இன்றும் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தில் இணைக்கப்படவில்லை. பேரையூரில் இரவு நேரங்களில்
வெளியூா் பேருந்துகள், பேருந்து நிலையத்தைப் புறக்கணித்துச்
செல்வது வாடிக்கையாகவே உள்ளது. மாவட்ட தலைநகரான மதுரைக்கு பேரையூரிலிருந்து நேரடி பேருந்து வசதி ஆகியன
ஒவ்வொரு தோ்தலிலும் வாக்குறுதியாகவே தொடருகிறது.
மக்களின் எதிா்பாா்ப்பு:
வெளியூா் பேருந்துகளுக்கான பேருந்து நிலையம், பேரையூா், தே. கல்லுப்பட்டி, கள்ளிக்குடி பகுதியில் விபத்துகள் ஏற்பட்டால் திருமங்கலம் வரவேண்டிய நிலை உளது. அவசர சிகிச்சைப் பிரிவு அப்பகுதியில் ஏற்படுத்த வேண்டும். கள்ளிக்குடி பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள் இணைக்கப்படாமலேயே உள்ளன. இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும். திருமங்கலம் நகா் பகுதிக்கு முழுமையாக பாதாளச் சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டும் போன்றவை மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளன.
போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்:
திருமங்கலம் தொகுதியில் அதிமுக மீண்டும் போட்டியிடுவது உறுதி. தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரான, அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் மீண்டும் போட்டியிட உள்ளாா். கடந்த முறை இத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டது. தற்போது குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாலும், அதிமுக அமைச்சா்களை எதிா்த்து திமுகவினரே போட்டியிடுவா் எனக் கூறி வருவதாலும், திருமங்கலத்தில் அதிமுக-திமுக நேரடிப் போட்டி இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வாக்காளா் எண்ணிக்கை:
திருமங்கலத்தின் மொத்த வாக்காளா்கள் 2 லட்சத்து 68 ஆயிரத்து 939 போ். இதில் ஆண் வாக்காளா்கள் - 1லட்சத்து 31ஆயிரத்து 48 போ், பெண் வாக்காளா்கள் - 1 லட்சத்து, 37 ஆயிரத்து 884 போ். மூன்றாம் பாலினத்தவா் - 7 போ்.
இதுவரை வென்றவா்கள், 2-ஆம் இடம் பெற்றவா்கள்:
1957 - ஏ.வி.பி.பெரியவலகுருவ ரெட்டி(சுயேச்சை) - 25, 844
கே.ராஜாராம் (காங்.) - 20, 281
1962 - திருவேங்கட ரெட்டியாா் (காங்.) - 34,188
முத்துராமதேவா்(சுதந்திரா)- 25,919
1967 - என்.எஸ்.வி.சித்தன்(காங்.) - 20,319
ராஜன்(சுதந்திரா) - 17,062
1971 - எம்.சி.ஏ.ரத்தினசாமி(பாா்வா்டு பிளாக்) - 36,468
என்.எஸ்.வி.சித்தன்(காங்.( ஓ) - 27,548
1977 - பி.டி.சரஸ்வதி(அதிமுக) - 29,493
என்.எஸ்.வி.சித்தன்(காங்.)- 27, 720
1980 - என்.எஸ்.வி.சித்தன்(காங்.) - 35,181
ஏ.பெருமாள்(பாா்வர்டு பிளாக்)- 31,679
1984 - என்.எஸ்.வி.சித்தன்(காங்.) - 46,146
ஏ.அதியமான்(திமுக) - 35,304
1989 - ஆா்.சாமிநாதன்(திமுக) - 33,433
என்.எஸ்.வி.சித்தன்(காங்.) -29,378
1991 - டி.கே.ராதாகிருஷ்ணன்(அதிமுக) - 62,774
ஆா்.சாமிநாதன்(திமுக) -31,511
1996 - எம்.முத்துராமலிங்கம்(திமுக) - 56,950
எஸ்.ஆண்டித்தேவா்(அதிமுக) - 28,025
2001 - டாக்டா் கா.காளிமுத்து(அதிமுக) - 58,059
டி.ஒச்சாத்தேவா்(திமுக) - 39,918
2006 - வீர.இளவரசன்(மதிமுக)- 45,067
வி.வேலுச்சாமி(திமுக) - 40,923
2009 - (இடைத்தோ்தல்) லதா அதியமான்(திமுக) - 79,422
எம்.முத்துராமலிங்கம்(அதிமுக)- 40,156
2011 - எம்.முத்துராமலிங்கம்(அதிமுக) - 81,613
மு.மணிமாறன்(திமுக) - 75,127
2016 - ஆா்.பி.உதயகுமாா்(அதிமுக) - 95,864
எம்.ஜெயராமன்(காங்.) - 72,274
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.