முகப்பு
செய்திகள்

கரை சேர்க்காத ஓபிஎஸ்: கட்சி தாவிய ஆதரவாளர்!

Updated On : 2 ஏப்ரல், 2026 at 12:04 AM
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தராத முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை விமர்சித்த அவரது தீவிர ஆதரவாளரான பி. ஐயப்பன் அந்தக் கட்சியிலிருந்து விலகி, வி.கே. சசிகலாவின் கட்சியில் புதன்கிழமை இணைந்தார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் உசிலம்பட்டி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி. ஐயப்பன். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தபோது அவரது ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் உள்பட பலர் அதிமுகவில் இணைந்தனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தைப் பின்பற்றி திமுகவில் இணைந்தார் ஐயப்பன்.

தேனி மாவட்டம், போடி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட ஓ. பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், ஐயப்பன் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த உசிலம்பட்டி தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

Advertisement

இதனால், பெரும் வருத்தத்துக்கு உள்ளாகியிருந்த ஐயப்பன் செவ்வாய்க்கிழமை தனது ஆதங்கத்தை பொதுவெளியில் தெரிவித்தார். ஓ. பன்னீர்செல்வத்துடன் தொடர்ந்து பயணித்த தன்னை கரை சேர்க்க அவர் தவறிவிட்டார் என ஐயப்பன் விமர்சித்தார். மேலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், ஐயப்பன் புதன்கிழமை சென்னையில் வி.கே. சசிகலாவை நேரில் சந்தித்து, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து, அந்தக் கட்சியின் சார்பில் உசிலம்பட்டி தொகுதி வேட்பாளராக பி. ஐயப்பன் போட்டியிடுவார் என்ற அறிவிப்பை சசிகலா வெளியிட்டார்.

இதுதொடர்பாக ஐயப்பன் தெரிவித்ததாவது: தன்னுடன் பயணித்தவர்களை கறிவேப்பிலையாகத்தான் கருதியுள்ளார் ஓ. பன்னீர்செல்வம். தன் தேவை முடிந்ததும் எங்களைப் போன்றவர்களை தூக்கி வீசிவிட்டார். கறிவேப்பிலை ஒரு வகையான மூலிகை என்பதையும், அதன் மருத்துவ மகத்துவத்தையும் அவர் மறந்துவிட்டார். உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை திமுகவில் எனக்குப் பெற்றுத் தர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்து, அதன் பிறகே திமுக வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலில் பங்கேற்றேன்.

நானும் எனது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்து ஏறத்தாழ ஒரு மாதமாகிறது. ஆனால், திமுக மாவட்டச் செயலர் உள்பட அந்தக் கட்சி நிர்வாகிகள் யாரும் எங்களை எதற்கும் அணுகவில்லை. இந்த நிலையில்தான் நமக்கான அரசியல் அங்கீகாரத்தை உறுதி செய்ய வேண்டும் எனக் கருதி திமுகவிலிருந்து விலகி, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தோம் . உசிலம்பட்டியில் போட்டியிட வி.கே. சசிகலா வாய்ப்பளித்துள்ளார்.

"லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா' வருவேன் என்றார்

ஐயப்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments