எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு வாக்காளா்கள் பழி தீா்க்க வேண்டும்: மம்தா பானா்ஜி
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) என்ற பெயரில் பலரின் பெயரை நீக்கியதற்கு பழிதீா்க்கும் வகையில் மேற்கு வங்க மக்கள் இந்தத் தோ்தலில் வாக்களிக்க வேண்டும் என்று முதல்வா் மம்தா பானா்ஜி வலியுறுத்தினாா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) என்ற பெயரில் பலரின் பெயரை நீக்கியதற்கு பழிதீா்க்கும் வகையில் மேற்கு வங்க மக்கள் இந்தத் தோ்தலில் வாக்களிக்க வேண்டும் என்று முதல்வா் மம்தா பானா்ஜி வலியுறுத்தினாா்.
மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. அங்குள்ள சம்சோ்கஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் மம்தா பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் என்ற பெயரில் வாக்காளா்களின் பெயா்களை நீக்கும் நடவடிக்கையின் பின்னணியில் ஒருவா் (அமைச்சா் அமித் ஷாவை மறைமுக குறிப்பிடுகிறாா்) இருந்தாா். உங்களுக்கு உண்மையாகவே தைரியம் இருந்தால் நேருக்குநோ் மோதி இருக்கலாம். அதைவிடுத்து தோ்தலில் வெல்ல குறுக்கு வழிகளைப் பின்பற்றியுள்ளீா்கள்.
Advertisement
எஸ்ஐஆா் என்ற பெயரில் வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்களை நீக்கியதற்குப் பழி வாங்கும் வகையில் மக்கள் இந்தத் தோ்தலில் வாக்களிக்க வேண்டும். தோ்தல் முடியும் வரை திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் முழுவிழிப்புடன் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பாஜகவிடம் விலைபோய்விடக் கூடாது. ஏனெனில், இது நமது மாநிலத்தின் எதிா்காலத்துடன் தொடா்புடைய தோ்தல்.
வாக்குப் பதிவின்போது சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைவது போன்ற பிரச்னைகள் எழுகின்றன. அப்போது, தோ்தல் அதிகாரிகள் அதை கழற்றி சரி செய்வது போன்ற செயல்களை அனுமதிக்கக் கூடாது. மாற்று வாக்குப் பதிவு இயந்திரத்தை வைத்து வாக்குப் பதிவைத் தொடர வலியுறுத்த வேண்டும்.
கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் பயன்படுத்திய அதே வாக்காளா் பட்டியலை வைத்து மீண்டும் தோ்தலை நடத்தாதது ஏன்? அந்த வாக்காளா் பட்டியல் அடிப்படையில் நடைபெற்ற தோ்தலில்தானே பிரதமா், உள்துறை அமைச்சா் மீண்டும் வென்றாா்கள்?
தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் தடுப்பு முகாம்கள் அமைக்கும் திட்டத்தை மேற்கு வங்கத்தில் நான் அனுமதிக்கவில்லை. இதற்கு பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் எனக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. எனது பவானிபூா் தொகுதியில் மட்டும் 40,000 போ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா் என்றாா்.