பிரதமர் மோடியின் உரை தேர்தல் நடத்தை விதிமீறல்: தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம் - மம்தா
அரசு இயந்திரத்தைத் தேர்தல் பிரசாரத்துக்காகத் தவறாகப் பயன்படுத்துகிறார் பிரதமர் மோடி! - மம்தா
கொல்கத்தா : தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்தார்.
மேற்கு வங்கத்திலும் தமிழகத்திலும் வரும் வியாழக்கிழமை (ஏப். 23) சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதனிடையே, மக்களவையில் கடந்த வாரம் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதா-2026, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பால் மூன்றில் இரு பங்கு உறுப்பினா்களின் ஆதரவின்றி நிறைவேறவில்லை. இந்நிலையில், சனிக்கிழமை(ஏப். 18) இரவு 8.30 மணியளவில் நாட்டு மக்களுக்கு காணொலி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினாா்.அப்போது எதிா்க்கட்சிகளை கடுமையாக விமா்சித்து அவா் பேசினார்.
Advertisement
Advertisement
இந்நிலையில், ‘மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருப்பதன் மூலம், பாஜகவுக்காகச் சட்டவிரோதமான பிரசாரத்தில் ஈடுபட்டார்’ என்று மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தினார்.
மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 19) தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மம்தா பேசியதாவது :
“அரசு இயந்திரத்தை அரசியல் பிரசாரத்துக்காகப் பாஜக நேற்று (ஏப். 18) தவறாகப் பயன்படுத்தியது. இதனை நாங்கள் கண்டிக்கிறோம். இது குறித்து, தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கயிருக்கிறோம்.
பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டுள்ளார். உங்களுடைய கட்சிக்காக நீங்கள் சட்டவிரோத பிரசாரத்தில் ஈடுபட்டதைப் பற்றி இந்திய மக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2023, செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு ஏன் இதுவரை அதனை அமல்படுத்தவில்லை. இந்த ஒரே மசோதா திரும்பத்திரும்ப எத்தனை முறை நிறைவேற்றப்பட வேண்டும்?
மகளிர் இடஒதுக்கீட்டுடன் பாஜக தலைமையில் மத்தியில் அமைந்துள்ள அரசு தொகுதி மறுவரையறை மசோதவையும் இணைத்துள்ளது. பாஜகவின் சரிவு தொடங்கிவிட்டது.
நீங்கள் (பிரதமர் மோடி) வங்கத்தின் ஒரு வாக்காளர் அல்ல; நீங்கள் வெளிமாநிலத்தைச் சார்ந்தவர். ஆகவே, நீங்கள் உங்கள் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இங்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதாக அறிவிக்கலாம். அதைவிடுத்து, இங்குள்ள மொத்த 294 தொகுதிகளிலும் ‘நானே வேட்பாளர்’ என்று பிரசாரம் செய்வதை விட்டுவிடுங்கள்” என்றார்.
ஏற்கெனவே, மம்தாவின் இதே கருத்தையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் எம்.பி. கபில் சிபலும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
PM misusing govt machinery for political campaigns - CM Mamata Banerjee on PM's address to the nation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.