முகப்பு
வேலைவாய்ப்பு

விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர்கள் தொழில் தொடங்க 25% மானியத்தில் கடனுதவி

சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களிடையே வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு தொழில் செய்ய 25 சதவீத மானியத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.

Updated On : 23 அக்டோபர், 2014 at 6:57 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:35 PM

சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களிடையே வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு தொழில் செய்ய 25 சதவீத மானியத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட தொழில் மைய மேலாளர் மருதப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள் பயனடையும் வகையில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் உற்பத்தி, சேவை தொழில் மற்றும் வியாபாரம் செய்வதற்கும் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில், உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சமும், சேவை தொழில்களுக்கு ரூ.3 லட்சமும், வியாபாரத்திற்கு ரூ.1 லட்சமும் கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இத்தொழில்கள் செய்வதற்கு இதற்கு முன்பு வரையில் வழங்கப்பட்ட மானியம் 15 சதவீதம் ஆக இருந்ததை, நிகழாண்டு முதல் 25 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது.

Advertisement

இத்திட்டத்தில் கடனுதவி பெற விரும்புகிற இளைஞர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பம் செய்யும் நாளில் 18 வயது பூர்த்தி அடைந்து, 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு அதிகபட்சமாக 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அதோடு, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்த்திற்கு மிகாமலும் இருப்பது அவசியம் ஆகும்.

மேலும், திட்ட மதிப்பீட்டு தொகையில் விண்ணப்பதாரரின் பங்காக 10 சதவீதம் செலுத்த வேண்டும். அதேபோல், எஸ்.சி,எஸ்.டி, எம்.பி.சி, சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருங்கைகள் ஆகியோர் தனது  பங்காக 5 சதவீதமும் செலுத்த வேண்டும். இதில், தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு  தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் மூலம் 7 நாள்களுக்குள் கடனுதவி வழங்கப்படும்.

எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்புகிற இளைஞர் மற்றும் மகளிர் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில் மையத்தை அணுகி  விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து நேரில் அளிக்க வேண்டும். மேலும், இது குறித்து 04562-252739, 252308 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தொழில் மைய மேலாளர் மருதப்பன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.