பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
பேரவைத் தேர்தலில், மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் முதலிடத்தில் உள்ள கட்சி பற்றி..
கொலை, கொலை முயற்சி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்றவை மோசமான குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இதுபோன்ற மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களை அதிகம் கொண்ட கட்சியாக ஆளுங்கட்சியோ, தவெகவோ இல்லை.
மாறாக, எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவில்தான் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், தங்கள் மீது மிக மோசமான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஒட்டுமொத்த வேட்பாளர்களில் 400க்கும் மேற்பட்டோர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 157 பேர் மீது மிக மோசமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
Advertisement
Advertisement
அதாவது, இந்த 157 வேட்பாளர்கள் மீது, கொலை, கொலை முயற்சி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ஊழல் போன்ற மிக மோசமான வழக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவை பதிவாகியிருக்கின்ற. ஒரு வேளை, இந்த வேட்பாளர்கள் எம்எல்ஏக்கள் ஆனபிறகு, இந்த வழக்குகளில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டால் இவர்கள் எம்எல்ஏ பதவியையே இழக்கும் நிலை கூட ஏற்படலாம் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட தரவுகளில் தெரிய வந்துள்ளது.
மிக மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட 157 வேட்பாளர்களில் அதிமுக வேட்பாளர்கள் 60 பேர் உள்ளனர். அதாவது அவர்களது மொத்தமுள்ள 170 வேட்பாளர்களில் இத்தனை பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.
இதுபோல, ஒரே ஒரு தொகுதியைத் தவிர்த்து மொத்த தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் தவெகவில் 43 பேர் மிக மோசமான குற்றப் பின்னணி கொண்டவர்கள். திமுகவினர் 32 பேரும், பாஜகவில் 9 பேரும், காங்கிரஸ் கட்சியில் 5 பேரும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களாக உள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டைக் காட்டிலும், மிக மோசமான குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை இந்த முறை கிட்டத்தட்ட இரண்டு மடங்காகியிருக்கிறது. ஒட்டுமொத்தமாகக் குற்றப் பின்னணி என்று கணக்கெடுத்தால் அது 722 ஆக உள்ளது. அதிலும் அதிமுகவே 118 வேட்பாளர்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் திமுக, மூன்றாவது இடத்தில் தவெக உள்ளன.
அனைத்து வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குற்றப் பின்னணி குறித்தும் தெரிவித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரம் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கும் நிலையில், மக்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டியவர்கள் இவ்வாறு குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருக்கலாமா? என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், அரசியல் கட்சிகள் அது பற்றி பெரிய அளவில் அலட்டிக்கொள்ளவில்லை என்பதே, தேர்தல்தோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காட்டுவதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு கூறுகிறது.
About the party that ranks first in the number of candidates with serious criminal cases in the assembly elections..
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.